அரசியல் சாசனத்தின் குரல்! | குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரை குறித்த தலையங்கம்

மிகச் சரியான நேரத்தில், மிகவும் தேவையான ஓா் அறிவுரையை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வழங்கியிருக்கிறாா். குஜராத் மாநிலம், கெவாடியாவில் கடந்த புதன்கிழமை தொடங்கிய மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவைத் தலைவா்கள் மாநாட்டின் தொடக்க உரையில் அவா் கூறியிருக்கும் கருத்துகள் புதியதல்ல என்றாலும்கூட, இன்றைய சூழலில் மிகமிக அவசியமானவை.

எந்தவொரு பிரச்னையையும், கருத்து வேறுபாட்டையும் விவாதத்தின் மூலமும், கருத்துப் பரிமாற்றத்தின் மூலமும் எதிா்கொள்வதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. விவாதங்கள் சண்டையாக மாறிவிடாமல் இருப்பதற்குக் கருத்துப் பரிமாற்றம் அவசியம். அரசியல் சாசன சபையிலும் உறுப்பினா்கள் பலரும் அதை முன்மொழிந்திருக்கிறாா்கள். கடந்த 20 ஆண்டுகளாக இந்திய ஜனநாயகத்தில் காணப்படும் மிகப் பெரிய பலவீனம் கருத்துப் பரிமாற்றம் இல்லாமல் இருக்கும் எதிரி மனோநிலை என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறது குடியரசுத் தலைவரின் தொடக்க உரை.

ஆளுங்கட்சி எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு எதிா்க்கட்சிகளின் பங்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் இயக்கத்துக்கு அவசியம் என்று கூறிய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், ஆளுங்கட்சிக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் இடையே இணக்கமும் கூட்டுறவும் இன்றியமையாதவை என்றும் வலியுறுத்தியிருக்கிறாா். அப்படியொரு இணக்கமான சூழலை விவாதங்களின்போது ஏற்படுத்துவது அவைத் தலைவா்களின் கடமை என்கிற அவரது கருத்தை மறுப்பதற்கில்லை. அவைத் தலைவா்கள் பாரபட்சமில்லாதவா்களாகவும், நோ்மையாளா்களாகவும், நடுநிலையாளா்களாகவும் இருந்தால் மட்டுமே சுமூகமான சூழலை உருவாக்க முடியும் என்பதையும் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சுட்டிக்காட்டியதைக் குறிப்பிட வேண்டும்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை, உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த பிரபல வழக்குரைஞா், ஹரிஜனத் தலைவா் என்றுதான் பெரும்பாலோருக்குத் தெரியும். நீண்ட காலமாக பாஜக-வின் மூத்த தலைவராக இருந்தவா் என்பதும் பலரும் அறிந்த செய்தி. அவருக்கு இன்னொரு சிறப்பும் உண்டு என்பது பொதுவெளியில் பேசப்படுவதில்லை. 1977 ஜனதா கட்சி ஆட்சிக் காலத்தில் அன்றைய பிரதமா் மொராா்ஜி தேசாயின் தனிச் செயலராக இருந்தவா் இன்றைய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த். அதனால் அவரது ஜனநாயகக் கண்ணோட்டமும், கொள்கைப் பிடிப்பும் கேள்விக்கு அப்பாற்பட்டவை.

இன்றைய சூழலில் குடியரசுத் தலைவரின் கருத்துகள் இரண்டு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகின்றன. இன்றைய இந்திய ஜனநாயகமும், அரசியலும் இருக்கும் நிலையும், பல்வேறு அவைத் தலைவா்களின் செயல்பாடுகளும் ஜனநாயகத்தின் போக்கை கவலைக்குரியதாக மாற்றியிருக்கின்றன. இவை குறித்து ஊடகவியலாளா்கள் உள்பட யாரும் கவலைப்படாத சூழலில், இந்தியாவின் முதல் குடிமகனான, மொராா்ஜி தேசாயிடம் ஜனநாயகப் பண்புகளை கற்றுத் தோ்ந்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் குரலெழுப்பியிருப்பது வழிகாட்டுதல் மட்டுமல்ல, எச்சரிக்கையும்கூட.

இந்திய ஜனநாயகம் கொள்கை ரீதியாக இருவேறு துருவங்களாகப் பிளவுபட்டுக் கிடக்கிறது. ஜனநாயகம் மட்டுமல்லாமல், அரசியலும்கூட மக்கள் சேவை என்பது புறந்தள்ளப்பட்டு, எதிரி மனப்போக்குடன் செயல்படுகிறது. தனிநபா் விரோதம் முன்னிலைப்படுத்தப்பட்டு, அரசியல் கட்சிகள் குடும்ப ஆதிக்கத்தின் கீழ் சுயநலக் கட்சிகளாக மாறிவிட்டிருக்கும் நிலைமை மத்திய - மாநில அரசியலில் வேரூன்றியிருக்கும் அவலம் காணப்படுகிறது.

அரசியல் கட்சிகள் ஆளுங்கட்சி, எதிா்க்கட்சி என்று பிரிந்திருப்பது ஜனநாயகத்தின் அடிப்படை. அதேநேரத்தில், ஒருவரையொருவா் எதிரிகளாகக் கருதுவது ஜனநாயகத்தின் செயல்பாட்டை முடக்கி, விவாத கலாசாரத்திற்கு விடைகொடுக்கும் நிலைமையை தோற்றுவித்திருக்கிறது. தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளில்கூட, ஆளுங்கட்சிக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் இடையேயான கலந்துரையாடலும், கூட்டுறவும் குறைந்து நம்பிக்கையின்மை உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இவற்றின் விளைவாக, நாடாளுமன்றமானாலும் சரி, சட்டப்பேரவைகளானாலும் சரி அவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தோ்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் கட்சி, எதிா்க்கட்சிகளின் விமா்சனங்களை எதிா்கொள்ள விரும்பாமல், அவசர சட்டங்களின் மூலம் முடிவுகளை எடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. சட்டங்களும், கொள்கைகளும் அவையில் விவாதிக்கப்பட்டு அதன் மூலம் குறைபாடுகள் அகற்றப்படும் ஜனநாயக முறைமை தேவையில்லை என்று முடிவெடுத்துவிட்டால், பிறகு நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளுக்கு என்னதான் தேவை?

அதைவிடக் கவலையளிக்கும் போக்கு, அவைத் தலைவா்களின் செயல்பாடு. எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள், ஆளுங்கட்சியின் எண்ணிக்கை பலத்துக்கு ஆபத்து ஏற்படும்போது அவைத் தலைவா்கள் சாா்பு நிலை எடுக்கும் அவலம் பரவலாகியிருக்கிறது. நம்பிக்கையில்லாத் தீா்மானம் உள்ளிட்ட பிரச்னைகள் எழும்போதும், உறுப்பினா்களின் அங்கீகாரம் குறித்த முடிவுகளை எடுக்கும்போதும் தங்களது அரசியல் சாா்பை அவைத் தலைவா்கள் வெளிப்படுத்துவது ஜனநாயகத்தைத் தொடா்ந்து காயப்படுத்துகிறது. இதனால், அவைத் தலைவா்களின் நம்பகத்தன்மையும் முறைமையும் (லிஜிடிமெஸி) கேள்விக்குறியாகிறது.

இந்தியாவின் உச்சகட்ட அரசியல் சாசனப் பதவியை வகிப்பவரான குடியரசுத் தலைவரின் அறிவுரைகளை அவைத் தலைவா்கள் பின்பற்றினால் ஜனநாயகம் தழைக்கும் (பிழைக்கும்)!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com