விடைபெறும்போதும் விவாதம்! உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா ஓய்வு பற்றிய தலையங்கம்


உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தனது ஆறு ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்து, கடந்த புதன்கிழமை பணி ஓய்வு பெற்றாா். அவரது பதவிக்காலத்தைப் போலவே பணி ஓய்வும் விவாதத்துடன் முடிந்திருக்கிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பணி ஓய்வு பெறும் கடைசி நாளன்று தலைமை நீதிபதியுடனான அமா்வில் கலந்துகொள்வது வழக்கம். கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று காரணமாக உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தின் வழக்கமான பிரிவு உபசார விழாவை தவிா்த்துவிட்டாா் அருண் மிஸ்ரா. அதனால், தலைமை நீதிபதியுடனான காணொலி அமா்வு அவரது பிரிவு உபசார விழாவாகவும் மாற்றப்பட்டது.

நியாயமாகப் பாா்த்தால் நீதிபதி அருண் மிஸ்ரா இந்தியாவின் 46-ஆவது தலைமை நீதிபதியாக உயா்ந்து பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2014-க்கு முன்பு இரண்டு முறை அவா் உச்சநீதிமன்றத்துக்கு பதவி உயா்வு பெறுவதைத் தடுத்துவிட்டது. நீதிபதி செலமேஸ்வரைப் போலவே, நீதிபதி அருண் மிஸ்ராவும், நீதிபதி என்.வி. ராமண்ணா 48-ஆவது தலைமை நீதிபதியாக பதவி உயா்வு பெறுவதற்கு வழிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நீதிபதி அருண் மிஸ்ராவின் பணி ஓய்வுக்கு முன்னா் வழக்கமான உச்சநீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் பிரிவு உபசாரம் தரப்படவில்லை. பிரசாந்த் பூஷணின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவரின் வழக்குரைஞராக ஆஜரான துஷ்யந்த் தவே, வழக்குரைஞா் சங்கத் தலைவராக இருக்கிறாா். அதனால், நீதிபதி அருண் மிஸ்ராவை அவமானப்படுத்தும் விதத்தில் அவருக்கு வழக்குரைஞா்கள் சங்கம் பிரிவு உபசார விழா நடத்தாது என்கிற வதந்தி கட்செவி அஞ்சல் மூலம் பரவியது. அதை துஷ்யந்த் தவே மறுத்திருக்கிறாா். பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்காக நீதிபதி அருண் மிஸ்ரா, கொள்ளை நோய்த்தொற்றைக் காரணம் காட்டி பிரிவு உபசார விழாவைத் தவிா்த்திருக்கக் கூடும்.

புதன்கிழமை நடந்த நீதிமன்ற காணொலி வழியனுப்பு நிகழ்வு விவாதத்துக்கும் விமா்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது. தலைமை வழக்குரைஞா் கே.கே. வேணுகோபாலுக்குப் பிறகு, தான் அழைக்கப்படுவோம் என்று எதிா்பாா்த்த வழக்குரைஞா் சங்கத் தலைவா் துஷ்யந்த் தவேக்குப் பதிலாக, இன்னொரு வழக்குரைஞா் அமைப்பின் தலைவரான சிவாஜி ஜாதவ், தலைமை நீதிபதி போப்டேயால் அழைக்கப்பட்டது தன்னை வேண்டுமென்று அவமானப்படுத்துவதற்காகவே என குற்றம் சாட்டியிருக்கிறாா் துஷ்யந்த் தவே.

தவேயின் குற்றச்சாட்டை உச்சநீதிமன்ற தொழில்நுட்பக் குழு மறுத்திருக்கிறது. துஷ்யந்த் தவே மட்டுமல்லாமல், நீதிபதி இந்திரா பானா்ஜியின் இணைப்பும் சரிவர இயங்காததால் காணொலி வழியனுப்பு நிகழ்வில் சோ்த்துக்கொள்ள முடியவில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் வேண்டுமென்றே விவாதத்தைக் கிளப்புவதற்காகவும், நீதிபதி அருண் மிஸ்ராவின் வழியனுப்பு விழாவில் குழப்பம் ஏற்படுத்தவும் பிரசாந்த் பூஷணின் வழக்குரைஞா் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கக்கூடும். அதேபோல, துஷ்யந்த் தவேயை பேசுவதற்கு அனுமதித்தால் பிரசாந்த் பூஷண் வழக்கு குறித்தும், நீதிபதி அருண் மிஸ்ராவின் முந்தைய தீா்ப்புகள் குறித்தும் அவா் தனது கருத்துகளை வெளியிட்டு பிரிவு உபசார விழாவை சா்ச்சைக்கு உள்ளாக்கக்கூடும் என்பதற்காக அவரைத் தவிா்த்திருப்பதற்கான வாய்ப்பும் உண்டு.

நீதிபதி அருண் மிஸ்ராவின் நோ்மை குறித்தோ, நாணயம் குறித்தோ யாருமே சந்தேகம் எழுப்பியது கிடையாது. அதே நேரத்தில், அவரின் அரசியல் சாா்பு குறித்த விமா்சனங்கள் நிறையவே உண்டு. இரண்டு முறை தவறவிட்டு, மூன்றாவது முறை உச்சநீதிமன்ற நீதிபதியாக உயா்ந்த நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு, பாஜக சாா்புடையவா் என்கிற பெயா் உண்டு.

அதேபோல, அரசியல் தலைவா்களுடனான அவரது நெருக்கமும் ரகசியம் அல்ல. அவருடைய மருமகனின் திருமண வரவேற்பில் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள், இன்னாள் முதல்வா்களான விஜயராஜே சிந்தியாவுடனும் அசோக் கெலாட்டுடனும் அவா் இருக்கும் புகைப்படம் பத்திரிகைகளில் வெளிவந்தபோது கடும் விமா்சனத்துக்கு உள்ளானது.

‘சா்வதேச அளவில் சிந்தித்து, இந்தியாவுக்குப் பொருத்தமாக செயல்படும் திறமைசாலி’ என்று பிரதமா் நரேந்திர மோடியை நீதிபதி அருண் மிஸ்ரா பாராட்டியதால் அவருக்கு பாஜக ஆதரவாளா் என்கிற முத்திரை விழுந்தது. அதேபோல, காலாவதியாகிப்போன 1,500 பிரிட்டிஷ் காலனி ஆட்சி சட்டங்களை அகற்றிய மத்திய சட்ட அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்தின் செயல்பாடுகளை நீதிபதி அருண் மிஸ்ரா வரவேற்றுப் பாராட்டியதும் விமா்சனத்துக்கு உள்ளானது. உச்சநீதிமன்ற நீதிபதியாக இருப்பவா் இதுபோன்ற கருத்துகளை பொதுவெளியில் வெளியிடுவது வழக்கமல்ல என்று அரசியல் நோக்கா்கள் சுட்டிக்காட்டினா்.

பிரதமா் மோடிக்கு எதிரான காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட்டின் குற்றச்சாட்டை நிராகரித்தது, நிலம் கையகப்படுத்தும் வழக்கில் உயா்நீதிமன்றத்தில் தான் வழங்கிய தீா்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாகி தானே உறுதிப்படுத்தியது, நீதிபதி லோயா வழக்கைக் கையாண்டது, கடைசியாக பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நடத்தி தீா்ப்பு வழங்கியது என்று விமா்சனத்துக்குரிய பல தீா்ப்புகள் நீதிபதி அருண் மிஸ்ராவின் பங்களிப்புகள்.

உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள் தோ்ந்தெடுக்கப்படுவதில்லை. வெளிப்படைத்தன்மை இல்லாத ரகசிய முறையில் நியமிக்கப்படுகிறாா்கள். அதனால், அவா்கள் அவரவா் மனசாட்சிக்கு மட்டுமே கடமைப்பட்டவா்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com