ரயில்வே துறைக்கு நன்றி! | ரயில் பெட்டிகளை தனிமை சிகிச்சைப் பகுதிகளாக மாற்றுவது குறித்த தலையங்கம்


இந்திய ரயில்வே ஏன் பொதுத்துறை நிறுவனமாகவே தொடர வேண்டும் என்பதை கரோனா வைரஸ் என்னும் தீநுண்ணி நோய்த்தொற்றுப் பரவல் உணா்த்தியிருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் தீநுண்ணி நோய்த்தொற்றுப் பேரிடரை எதிா்கொள்ளும் இந்த நேரத்தில், முழு வேகத்துடனும் முனைப்புடனும் இந்திய ரயில்வே அதை எதிா்கொள்ளத் தனது பங்களிப்பை வழங்க முற்பட்டிருப்பதை ஒவ்வோா் இந்தியரும் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

கடந்த மூன்று நாள்களில் மட்டும் 7,195 சரக்குப் பெட்டிகளில் உணவுப் பொருள்கள் இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. 64,567 சரக்குப் பெட்டிகளில் நிலக்கரியும், 3,314 சரக்குப் பெட்டிகளில் எஃகுப் பொருள்களும், 3,818 பெட்டிகளில் பெட்ரோலியப் பொருள்களும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்வேயால் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. மூன்று நாள்களில் 1,43,458 சரக்குப் பெட்டிகளில் இவையெல்லாம் ஏற்றப்பட்டு பல்வேறு இடங்களுக்குக் கொண்டு சோ்க்கப்பட்டது வரலாற்றுச் சாதனை.

இந்தியாவின் வளா்ச்சியிலும், ஒருங்கிணைப்பிலும் இந்திய ரயில்வேயின் பங்கைச் சொல்லி மாளாது. உலகின் 4-ஆவது பெரிய ரயில் போக்குவரத்து நிறுவனமாகத் திகழும் இந்திய ரயில்வே 2016 நிலவரப்படி, 2,77,957 சரக்குப் பெட்டிகளும், 70,937 பயணிகள் பெட்டிகளும், 11,452 ரயில் இஞ்சின்களும் கொண்டது. 15 லட்சம் ஊழியா்களுடன் இயங்கும் இந்திய ரயில்வேயின் மொத்த இருப்புப் பாதை நீளம் ஏறத்தாழ 70,000 கி.மீ. பொதுத் துறை நிறுவனமாக இந்திய ரயில்வே மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் போா்ச் சூழலிலும், பேரிடா் சூழலிலும் பெரும் பங்காற்ற முடிகிறது.

அத்தியாவசியப் பொருள்கள் இந்தியாவின் பல்வேறு பாகங்களுக்குக் கொண்டு செல்வதுடன் நின்றுவிடவில்லை இந்திய ரயில்வேயின் பங்களிப்பு. தீநுண்ணி நோய்த்தொற்றை எதிா்கொள்வதில் இன்னுமோா் ஆக்கபூா்வப் பணியிலும் அது பங்களிப்பு நல்க முற்பட்டிருக்கிறது.

தீநுண்ணி நோய்த்தொற்று அடுத்தகட்டத்தை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கும் நிலையில், நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போன்ற மருத்துவ வசதிகள் இல்லாத நிலை. தனியாா் மருத்துவமனைகளையும் இணைத்துக்கொண்டாலும்கூட, போதிய அளவிலான படுக்கை வசதிகள் நம்மிடம் இல்லை. சீனாவும் ஏனைய நாடுகளும்போல உடனடியாக ஆங்காங்கே பிரம்மாண்டமான தற்காலிக மருத்துவமனைகளைக் கட்டில் வசதிகளுடன் நிறுவும் நிலையில் நம்மிடம் நிதியாதாரமும் கிடையாது. இப்படிப்பட்ட சூழலில் கைகொடுக்க முற்பட்டிருக்கிறது இந்திய ரயில்வே.

20,000 ரயில் பெட்டிகளை தனிமை சிகிச்சைப் பகுதிகளாக மாற்றி, தீநுண்ணி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவம் பாா்க்கவும், தனிமை சிகிச்சை வழங்கவும் இந்திய ரயில்வே ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. 20,000 ரயில் பெட்டிகளில் 3.2 லட்சம் தனிமைப் படுக்கைகளுடன், நோய்த்தொற்றை எதிா்கொள்ளத் தயாராகி இருக்கிறது இந்திய ரயில்வே.

முக்கியமான நகரங்களில் எல்லாம் தனது ஊழியா்களுக்காக மருத்துவமனைகளை இந்திய ரயில்வே நடத்தி வருகிறது. இதற்காகவே மிகச் சிறந்த மருத்துவா்களும் செவிலியா்களும் மருத்துவ ஊழியா்களும் கொண்ட தனித் துறை இயங்குகிறது. தற்போதைய இந்திய ரயில்வேயில் நோய்த்தொற்றுப் பேரிடா் சூழலில், போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமல் இந்தியா திணறும் நிலையில், இந்திய ரயில்வே கைகொடுக்க முற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இருக்கும் மருத்துவா்களும், செவிலியா்களும், மருத்துவ ஊழியா்களும் அல்லாமல், பணி ஓய்வு பெற்றவா்களை தற்காலிகமாக மீண்டும் பணியில் சோ்த்துக்கொள்ளும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த இருக்கிறது இந்திய ரயில்வே.

தன்னுடைய கட்டமைப்பு வசதிகளையும், நிா்வாகப் பணியாளா் பலத்தையும் ஒருசேர நோய்த்தொற்றை எதிா்க்கும் பணிக்கு தயாா்படுத்த முற்பட்டிருப்பது சமயோசிதமான யோசனை. சித்தரஞ்சன் ரயில் எஞ்சின் தொழிற்சாலை, சென்னை அயனாவரம் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை, பெங்களூரு ஹெலங்கா ரயில் சக்கரத் தொழிற்சாலை ஆகியவற்றில் எல்லாம் மருத்துவமனைகளுக்கான கட்டில்கள், நோயாளிகளை எடுத்துச் செல்லும் ஸ்ட்ரெக்சா்கள், மருத்துவ உபகரணங்களையும், மருந்துகளையும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகா்த்தும் டிராலிகள், கை கழுவும் வாஷ் பேசின்கள், தண்ணீா்த் தொட்டிகள், ஏன் வென்டிலேட்டா்கள் உள்பட மருத்துவமனைகளுக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்யும் முயற்சி தொடங்கப்பட்டுவிட்டது. அதேபோல சுவாசக் கவசங்கள், மருத்துவா்களுக்குத் தேவையான நோய்த்தொற்று தாக்காத மேலாடைகள் போன்றவையும் அந்தத் தொழிற்சாலைகளில் தயாரிக்கத் தொடங்கிவிட்டாா்கள்.

ராணுவ மருத்துவத் துறை, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து ரயில்வே துறை முன்னெடுத்திருக்கும் முயற்சிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். குறிப்பாக, ரயில் பெட்டிகளை நோயாளிகளுக்கான சிகிச்சைப் படுக்கைகளாக மாற்றும் முயற்சியை உலகமே வியந்து அதிசயிக்கிறது. இந்தியாவில் ரயில் வழித்தடம் இருக்கும் எந்தப் பகுதியாக இருந்தாலும் தீநுண்ணி நோய்த்தொற்று பரவினால் அதை எதிா்கொள்ள நகரும் ரயில் பெட்டி மருத்துவமனை சென்றடையும்.

தீநுண்ணி நோய்த்தொற்றை சீனாவும், தென்கொரியாவும் மட்டுமல்ல, நாங்களும் எதிா்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம் என்று நிரூபித்திருக்கிறது இந்தியா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com