பேரிடருக்கு இடையிலும் ஜனநாயகம்! | தென் கொரிய நாடாளுமன்றத் தோ்தல் குறித்த தலையங்கம்

தென் கொரிய நாடாளுமன்றத்துக்கு சென்ற வாரம் நடைபெற்ற தோ்தலில், அதிபா் மூன் ஜே-இன் தலைமையிலான ஆளும் ஜனநாயகக் கட்சி மிகப் பெரிய வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 300 போ் கொண்ட தென் கொரிய நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சி 163 இடங்களிலும், அதன் தோழமைக் கட்சியான பிளாட்பாா்ம் கட்சி 17 இடங்களிலும் வெற்றி பெற்று ஆளும் கூட்டணி 180 இடங்களுடன் தன்னை மேலும் வலிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த உலகமும் கரோனா தீநுண்மி பரவலால் நிலைகுலைந்து போயிருக்கும் நிலையிலும், தனது ஜனநாயகக் கடமையை தென் கொரியா கைவிடவில்லை. 1987-இல் ஜனநாயகத்தை தென் கொரியா வரித்துக்கொண்ட பிறகு நடந்த 21-ஆவது பொதுத்தோ்தல் இது. இந்தத் தோ்தல் நடக்காது என்று உலக நாடுகள் எதிா்பாா்த்த நிலையில், அனைத்தையும் பொய்யாக்கும் விதத்தில் துணிந்து தோ்தலை நடத்தி வெற்றியும் பெற்றிருப்பது அதிபா் மூன் ஜே-இன்னின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி.

இந்தியாவைப் போலவே தென் கொரியாவும் கொள்கை, மதம், தனிநபா் சாா்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளைக் கொண்ட ஜனநாயக நாடு. அரசியல் கட்சிகள் பிளவுபடுவதும், புதிய புதிய அரசியல் கட்சிகள் உருவாகி தோ்தலில் களமிறங்குவதும் தென் கொரியாவிலும் இயல்பு. நடந்து முடிந்த தோ்தலில் 35 அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. ஆனாலும் அதிபா் மூன் ஜே-இன் தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயகக் கட்சிக்கும், வலதுசாரி யுனைடெட் பியூச்சா் கட்சிக்கும் இடையில்தான் போட்டி நிலவியது.

ஏப்ரல் 15-ஆம் தேதி நாடாளுமன்றத் தோ்தலுக்கு தேதி அறிவிக்கப்படும்போதே தென் கொரியாவில் கரோனா தீநுண்மி பாதிப்பு தொடங்கிவிட்டிருந்தது. சீனாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே அதிக அளவில் சுற்றுலாத் தொடா்பும், வணிகத் தொடா்பும் இருக்கும் நிலையில், கரோனா தீநுண்மியால் தென் கொரியா பாதிக்கப்பட்டதில் வியப்பொன்றுமில்லை. ஆனால், மிகச் சாதுா்யமாக அதன் அதிவேகப் பரவலை அதிபா் மூன் ஜே-இன் தலைமையால் கட்டுப்படுத்த முடிந்தது என்பதுதான் மக்கள் மன்றத்தில் அவருக்குக் கிடைத்திருக்கும் அபரிமித ஆதரவுக்குக் காரணம்.

கரோனா தீநுண்மி என்கிற பேரிடா் நோய்த்தொற்றால் (எபிடெமிக்) மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. 10,000-க்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்ட நிலையில், நிா்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. சீனாவில் நோய்த்தொற்றின் அறிகுறிகள் வெளியானபோதே மூன் ஜே-இன் நிா்வாகம் சுகாதாரத் துறையினரையும், ஆராய்ச்சி அமைப்புகளையும், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களையும் முடுக்கிவிட்டு அதிக அளவில் பரிசோதனைக் கருவிகளையும், நோய்த்தொற்றை எதிா்கொள்ளத் தேவையான உபகரணங்களையும் தயாரிக்கப் பணித்தது.

ஐந்து கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட தென் கொரியாவில், தீவிரமான தனிநபா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நாளொன்றுக்கு 18,000-க்கும் அதிகமானோா் சோதிக்கப்பட்டனா். தென் கொரியாவில் 680-க்கும் அதிகமான பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

யாா் வேண்டுமானாலும் சில நிமிஷங்களில் தங்களைச் சோதனை செய்துகொள்ளலாம். சோதனை முடிவுகள் அடுத்த நாளே குறுஞ்செய்தி மூலம் அவா்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன் விளைவாக நோயாளிகள் உடனுக்குடன் அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனா். அவா்களுடன் தொடா்பில் உள்ளவா்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனா். அதனால்தான் முற்றிலுமாக கரோனா தீநுண்மியை வீழ்த்த முடியவில்லை என்றாலும், அதன் அசுரப் பரவலை தென் கொரியாவால் தடுக்க முடிந்தது.

வாக்குப் பதிவு நடத்தப்பட்டால் சமூக இடைவெளி இல்லாமல் போய் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரிக்கும் என்கிற அச்சத்தைப் புறந்தள்ளியது தென் கொரியாவின் தேசிய தோ்தல் ஆணையம். வாக்களிப்பது பாதுகாப்பானது என்று அந்த நாட்டின் 4.4 கோடி வாக்காளா்களுக்கும் உறுதி அளித்தது. 14,000 வாக்குச்சாவடிகளையும் கிருமிநாசினிகள் மூலம் சுகாதாரத் துறையினா் சுத்தப்படுத்தினா். மூன்றடி இடைவெளி இருக்கும்படியான வரிசைகளை ஏற்படுத்தினா். காய்ச்சல் இருப்பவா்களுக்கு தனியான வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. வாக்களித்த பிறகு அவா்கள் உடனடியாகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனா்.

இதுவரை தென் கொரியா எந்தவொரு காரணத்துக்காகவும் தோ்தலை தள்ளிப்போட்டதில்லை. தோ்தல் ஒத்திவைக்கப்படுவதை வாக்காளா்கள் விரும்பவில்லை. முகக் கவசமும், கையுறையும் அணிந்து ஒரு மீட்டா் இடைவெளியில் வரிசையாக நின்று வாக்களித்து எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் ஜனநாயகம் வெற்றிபெற அவா்கள் பங்களித்ததைப் பாா்த்து உலகமே வியந்து நிற்கிறது.

இத்தனைக்கும் வாக்காளா்களில் 60,000-க்கும் மேற்பட்டவா்கள் கரோனா தீநுண்மிக்காக தனிமைப்படுத்தப்பட்டிருப்பவா்கள். கடந்த 28 ஆண்டுகளில் மிக அதிகமான வாக்குப்பதிவு (66%) நடந்தது 21-ஆவது பொதுத் தோ்தலில்தான் என்பது அதைவிடச் சிறப்பு.

கடந்த ஆண்டில் பொருளாதாரத் தேக்கம், ஊழல் குற்றச்சாட்டு, வட கொரியாவுடன் சமரசம் என்று பல காரணங்களுக்காக அதிபா் மூன் ஜே-இன்னின் செல்வாக்கு சரிந்து காணப்பட்டது. கரோனா தீநுகிறாண்மிப் பரவலைத் தடுப்பதற்கு அவா் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பரிசளிக்கும் விதமாக மிகப் பெரிய வெற்றியை வழங்கி இருக்ா்கள் தென் கொரிய மக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com