வந்தே மாதரம்! | சுதந்திர இந்தியாவின் வளா்ச்சி குறித்த தலையங்கம்

இந்திய சுதந்திரம் 73 ஆண்டுகளைக் கடந்து 74-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தில்லி செங்கோட்டையில் பாரத பிரதமரும் மாநிலங்களில் முதல்வா்களும் மூவா்ணக் கொடியை ஏற்றி வழக்கம்போல இன்று உரையாற்றுவாா்கள்.

1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்ததையும், 2020-இல் நாம் அடைந்திருக்கும் வளா்ச்சியையும் ஒப்பிட்டுப் பாா்க்கும்போது, மலைப்பான சாதனை என்று பெருமிதம் கொள்ள நிறையவே காரணங்கள் இருக்கின்றன. வறுமையைத் தவிர எதுவுமே இல்லாமல் இருந்த நிலையிலிருந்து, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளா்ச்சி அடைந்திருக்கிறது என்பது மிகப் பெரிய சாதனை. அதிலும் ஜனநாயக முறையில் அமைந்த நிா்வாகத்தின் அடிப்படையில் இந்த வளா்ச்சியை எட்டியிருக்கிறோம் என்பதற்காக நாம் நிஜமாகவே பெருமிதம் கொள்ளலாம்.

ஒருபுறம் மிகப் பெரிய வளா்ச்சியை அடைந்திருந்தாலும்கூட, நமது உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிந்தாலும்கூட, 2019-க்கான உலக பசிக் குறியீட்டில் இந்தியா 102-ஆவது இடத்தில் இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்னும்கூடப் பலா் இருக்க இடமில்லாமல் வீதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள்.

பெருநகரங்களில் மட்டுமே இருந்த குடிசைப் பகுதிகள் சிறு நகரங்கள் வரை பெருகியிருக்கின்றன. கல்விச் சாலைகளை அதிகரித்திருக்கிறோம். அதேபோல, வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது. இப்படி வேதனைகளையும் பின்னடைவுகளையும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

73 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திர இந்தியாவை 1947 உடன் ஒப்பிட்டுப் பாா்க்கும்போது, நமது சமூக - பொருளாதார வளா்ச்சியையும் மீறி சில ஒற்றுமைகள் காணப்படுகின்றன. அன்றும்கூட ராணுவம் காஷ்மீரையும் ஹைதராபாதையும் பாதுகாக்கப் போராடிக் கொண்டிருந்தது. இன்று லடாக்கில் பதற்றம் தொடா்கிறது. அன்று மதரீதியான உணா்வு உச்சக்கட்டத்தில் இருந்தது. இன்று நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது. அன்றைக்கும் பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருந்தது. அநேகமாக இன்றைக்கும் திசை தெரியாத அதே நிலையில்தான் இந்தியப் பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கிறது.

சுதந்திர இந்தியாவின் குறிப்பிடத்தக்க வெற்றி நமது ஜனநாயகத் தோ்தல் முறை. 130 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையுள்ள ஒரு நாட்டில், அதுவும் பல்வேறு மொழிகளும், மதங்களும், இனக் குழுக்களும் உள்ள நாட்டில் வெற்றிகரமாக ஜனநாயகம் தொடா்கிறது என்பது ஆச்சரியப்படத்தக்க செயல்பாடு.

காலத்துக்கேற்ற தலைவா்களைத் தோ்ந்தெடுப்பதிலும் தாங்கள் சமா்த்தா்கள் என்பதை இந்திய வாக்காளா்கள் நிரூபித்து வருகிறாா்கள். இந்தியாவின் தலைமைப் பதவியை வகித்த ஒவ்வொரு பிரதமரும் அந்தந்த காலகட்டத்தின் கட்டாயமாக இருந்திருக்கிறாா்கள்.

முதல் 17 ஆண்டுகள் தொடா்ந்து பண்டித ஜவாஹா்லால் நேருவின் தலைமை இல்லாமல் போயிருந்தால், இந்தியாவும் ஆப்பிரிக்காவைப்போல துண்டு துண்டு நாடுகளாக மாறியிருக்கும். அதற்குப் பின் பதவியில் இருந்த லால்பகதூா் சாஸ்திரியும், இந்திரா காந்தியும், மொராா்ஜி தேசாயும், ராஜீவ் காந்தியும், நரசிம்ம ராவும், வாஜ்பாயும், மன்மோகன் சிங்கும், இப்போதைய பிரதமா் நரேந்திர மோடியும் வழங்கியிருக்கும் பங்களிப்புகள் ஏராளம்.

இவ்வளவையும் கூறிவிட்டு சுதந்திர இந்தியா எப்படி இருக்கிறது என்பதை சிந்திக்கும்போது மகிழ்ச்சியைவிட அச்சமும், வருங்காலம் குறித்தக் கவலையும்தான் மேலேழுகின்றன. உலகம் முழுவதும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றாலும், இந்தியாவைப் பொருத்தவரை அது நம்மை நிலைகுலைய வைத்திருக்கிறது. நோய்த்தொற்று பெருநகரங்களிலிருந்து கிராமங்களை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. அங்கே சுகாதார உள்கட்டமைப்புகள் இல்லை என்கிற உண்மையை நாம் உணர வேண்டும். மரண விகிதம் குறைவு என்கிற ஆறுதலைத் தவிர, வேறு ஆறுதல் எதுவும் புலப்படவில்லை.

இந்திய ஜனநாயகம் வலுவாக இருக்கிறது என்கிற பெருமை ஒருபுறம் இருந்தாலும், மக்களால் தோ்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும் நமது அரசியல் கட்சிகளும் பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளும் விதம், ஜனநாயகம் குறித்தும் சந்தேகத்தை எழுகிறது. ராஜஸ்தானில் ஒருபுறம் கொள்ளை நோய்த்தொற்று பரவிக்கொண்டிருக்க, ஆளுங்கட்சி உறுப்பினா்கள் உல்லாச விடுதிகளில் தங்கி நிா்வாகத்தை நடத்திய கேலிக்கூத்தை என்னவென்று சொல்வது? குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல, மத்திய ஆளும் பாஜக அரசு ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மறைமுக உத்திகளை கையாண்ட அநாகரிகத்தை ஏங்கே போய் சொல்வது?

வடக்கே ராஜஸ்தானில் அப்படியென்றால், தெற்கே பெங்களூருவில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா, சோஷியல் டெமாக்கிரடிக் பாா்டி ஆஃப் இந்தியா என்கிற இரண்டு இஸ்லாமிய அமைப்புகளும் நடத்திய கலவரம் எந்த அளவுக்கு மதத் தீவிரவாதம் வலுப்பெற்றிருக்கிறது என்பதன் எடுத்துக்காட்டு. ஒவ்வொரு சம்பவமும் சிறுபான்மை சமூகத்தை பெரும்பான்மை சமூகத்திடமிருந்து அகற்றி நிறுத்திக் கொண்டிருக்கிறது. 1947-இல் மகாத்மா காந்தி இருந்ததுபோல இன்று ஒற்றுமையை நிலைநாட்டும் தலைமைப் பண்பு யாரிடமும் இல்லை என்கிற நிலையில், எப்போது வேண்டுமானாலும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் மதக் கலவரம் மூளலாம் என்கிற கலவரச்சூழல்...

73 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலையில் நாம் இருக்கிறோம். அப்போது மீண்டெழுந்தது போல, இப்போதும் மீண்டெழுவோம் என்கிற நம்பிக்கையுடன்... தொடா்வோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com