வரலாற்று வெற்றி! | ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வெற்றி குறித்த தலையங்கம்

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப் பெரிய வெற்றி பெற்று, அரவிந்த் கேஜரிவால் மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்க இருக்கிறார். தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெறுவது என்பது தில்லிக்குப் புதிதல்ல என்றாலும்கூட, இந்த அளவிலான வெற்றி மிகப் பெரிய வரலாற்று சாதனை. கடந்த ஐந்தாண்டு நல்லாட்சியின் பின்புலம் இல்லாமல், 70 இடங்களில் 62 இடங்களை வென்று ஆம் ஆத்மி கட்சியால் இப்படியொரு  தொடர் வெற்றியை ஈட்டியிருக்க முடியாது.

2013-இல் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கிய சில மாதங்களிலேயே, அரவிந்த் கேஜரிவாலின் தலைமையில் அந்தக் கட்சி 70 இடங்களுக்கு 28 இடங்களை வென்று சாதனை புரிந்தது. 2013-இல் ஆட்சி அமைத்த அரவிந்த் கேஜரிவால், அடுத்த 40 நாள்களில் காங்கிரஸ் கட்சியின் ஒத்துழைப்பு சரியாகக் கிடைக்காததால் பதவி விலகினார். 2015-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், 70 இடங்களுக்கு 67 இடங்களை வென்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தபோது, ஒரு மிகப் பெரிய அரசியல் மாற்றத்தின் அறிகுறியாகவே அது காணப்பட்டது. இப்போது, 2020-இல் கடந்த முறையைவிட ஐந்து இடங்கள் மட்டுமே குறைவாகப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.

2015, 2020 சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றியை ஈட்டியது என்பது ஒருபுறம் இருந்தாலும், இன்னொருபுறத்தில் மக்களவைத் தேர்தல்களில் தில்லி வாக்காளர்கள் பாஜகவுக்கு முன்னுரிமை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2014, 2019 மக்களவைத் தேர்தல்களில் தில்லியிலுள்ள 7 தொகுதிகளிலும் பாஜகதான் வெற்றி பெற்றது.

கடந்த 2019 மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் 56% வாக்கு விகிதத்துடன் தில்லியிலுள்ள ஏழு தொகுதிகளையும் பாஜக வென்றது. 22.5% வாக்குகளுடன் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆம் ஆத்மி கட்சி வெறும் 18% வாக்குகளுடன் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தது. இப்போது சட்டப்பேரவைத் தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டிருக்கிறது. 53% வாக்குகளை ஆம் ஆத்மி கட்சியும், 38% வாக்குகளை பாஜகவும் பெற்றன என்றால், காங்கிரஸ் கட்சியால் வெறும் 4% வாக்குகளைத்தான் பெற முடிந்திருக்கிறது. மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் தில்லி வாக்காளர்கள் மிகத் தெளிவாக இருந்து வருகிறார்கள் என்பதைத்தான் 2014, 2015, 2019, 2020 தேர்தல்கள் எடுத்தியம்புகின்றன. 

ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வெற்றிக்கு அந்தக் கட்சியின் கடந்த ஐந்தாண்டு காலத் திட்டங்களும் செயல்பாடுகளும்தான் காரணம். பாஜகவும் காங்கிரஸும் தில்லி வாழ் மக்களை மையப்படுத்தி எந்தவிதப் பிரசாரத்தையும் மேற்கொள்ளாததும், தெளிவான மாற்றுத் திட்டங்களை முன்வைக்காததும் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்கள்.

2015 சட்டப்பேரவைத் தேர்தலின்போது முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மக்களுக்குக் கொடுத்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறார். 200 யூனிட் மின்சாரம் வரை இலவசம், அடுத்த 200 யூனிட்டுகளுக்கு 50% மானியம் என்கிற முடிவும், மாதம் 20,000 லிட்டர் வரை தண்ணீர் இலவசம் என்பதும், மக்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கை அதிகரித்தன. மகளிருக்கு மாநகரப் போக்குவரத்தில் இலவசம் என்கிற அறிவிப்பு, பெண்களின் வாக்குகளை அள்ளித் தந்தன.

எல்லா பகுதிகளிலும், "மொஹல்லா மருத்துவமனைகள்' என்கிற பெயரில் வைத்தியத்துடன் இலவச மருந்துகள் வழங்கப்படுகின்றன. தில்லி அரசுப் பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்பட்டிருப்பதுடன், தனியார் பள்ளிகளுடன் போட்டிபோடும் அளவுக்குச் செயல்படுகின்றன. கல்வி, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து என்று தன்னிடம் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கும் அனைத்திலும், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலால் மக்களைக் கவர முடிந்திருக்கிறது. தில்லியில் சாத்தியப்பட்டிருக்கும் இந்தத் திட்டங்களை பெரிய மாநிலங்களில் செயல்படுத்த முடியுமா என்பது சந்தேகம்தான் என்பதையும் மறுப்பதற்கில்லை.

2015-இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது முதல் முதல்வர் கேஜரிவாலின் அணுகுமுறையில் மிகப் பெரிய மாற்றத்தைக் காண முடிந்தது. மத்திய அரசுடனான மோதல் போக்குக் கொள்கையை அவர் மெல்ல மெல்லத்  தவிர்த்ததுடன், "மிதவாத ஹிந்துத்துவ' போக்கை கடைப்பிடித்தபோது, அவரால் பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவைப் பெற முடிந்தது. காஷ்மீர் பிரச்னையிலும், குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்திலும் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சற்று விலகியே இருந்தார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். 

தனது கட்சியின் தாரக மந்திரமாக "ஹனுமான் சாலிசா' ஸ்லோகங்களை இசைத்ததும், வாக்குப் பதிவுக்கு முன்னர் ஹனுமான் கோயிலுக்குப் போனதும் அவரது தேர்தல் ராஜதந்திரத்தின் உச்சம். பாஜகவைத் தோற்கடித்தாக வேண்டும் என்கிற வெறியுடன் இருக்கும் முஸ்லிம் வாக்காளர்கள் காங்கிரûஸத் தவிர்ப்பார்கள் என்கிற அவரது அசாத்திய நம்பிக்கை பொய்க்கவில்லை. முஸ்லிம் சமுதாயத்தின் 98% வாக்குகளையும் பெற்ற ஆம் ஆத்மி கட்சியால், ஹிந்து வாக்காளர்களையும் கவர முடிந்தபோது, 53% வாக்கு
களுடன் மூன்றாவது முறை வெற்றி அவருக்கு சாத்தியப்பட்டது.

ஊழலில்லாத ஆட்சியை முதல்வர் அரவிந்த் கேஜரிவாலால் உறுதிப்படுத்த முடிந்திருக்கிறது என்பதும் அவரது வெற்றிக்குக் காரணம் என்பதை ஏனைய அரசியல்வாதிகள் உணர்வார்களாக!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com