தீர்வாகுமா இந்தத் தீர்ப்பு? | உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்த தலையங்கம்

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற கொலீஜியங்களும் அரசும் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட ஆறு மாத காலவரம்புக்குள் நீதிபதிகளின் நியமனங்கள் நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் சஞ்சய் கெளல், கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டிருக்கிறது. அரசும், நீதித்துறையும் நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொண்டு நீண்ட நாள்களாக விடைகாணப்படாமல் தொடரும் நீதிபதிகள் நியமனப் பிரச்னைக்கு முடிவு காண வேண்டும். 

இப்போதைய நிலையில், உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையான 1,079 நீதிபதிகளில் 669 நீதிபதிகள்தான் உள்ளனர். நிரப்பப்படாத 410 இடங்களுக்கு 213 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டும் நியமன உத்தரவுக்காகக் காத்திருக்கின்றன. இதனால், வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டு நீதிபதிகள் நியமனம் நடத்தப்படுவது அவசியமாகிறது. 
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் அரசியல் சாசனத்தின் 124-ஆவது பிரிவின் கீழும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் 217-ஆவது பிரிவின் கீழும் நடத்தப்படுகின்றன. மேலே குறிப்பிட்ட அரசியல் சாசன சட்டப் பிரிவுகளில் காணப்படும் "ஆலோசனை' (கன்சல்டேஷன்) என்கிற வார்த்தை விவாதப் பொருளானது. அதனடிப்படையில், நீதிபதிகள் நியமனம் குறித்த முடிவை எடுக்கும் அதிகாரம் நீதித்துறைக்கா அல்லது அரசுக்கா என்கிற கருத்து மோதல் ஏற்பட்டு, அதன் விளைவாகத்தான் இப்போதைய கொலீஜியம் முறை நடைமுறைக்கு வந்தது.

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் கொலீஜியம் முறையை உருவாக்கியது உச்சநீதிமன்றம்தானே தவிர, அது குறித்து அரசியல் சாசனம் எதுவும் குறிப்பிடவில்லை. "மூன்று நீதிபதிகள் வழக்குகள்' என்று இப்போது பரவலாக அழைக்கப்படும் வெவ்வேறு காலகட்டத்திலான மூன்று வழக்குகளின் தீர்ப்பின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டிருப்பதுதான் தற்போதைய கொலீஜியம் நீதிபதிகள் நியமன முறை.

1981-இல் இந்திய அரசுக்கு எதிராக எஸ்.பி. குப்தா தொடுத்த வழக்கு, "முதல் நீதிபதிகள் வழக்கு' என்று அழைக்கப்படுகிறது. இந்த வழக்கில்தான் முதன்முதலாக ஆலோசனை என்பதற்கும், ஒப்புதல் (அப்ரூவல்) என்பதற்கும் உச்சநீதிமன்றம் வேறுபாடு கற்பித்து, இரண்டும் ஒன்றல்ல என்று தீர்ப்பு வழங்கியது. அதனடிப்படையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வழங்கும் ஆலோசனையை ஏற்பது அல்லது நிராகரிக்கும் உரிமை அரசுக்கு வழங்கப்பட்டது. அதே நேரத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்து மிகவும் அரிதான நிகழ்வுகளில் மட்டும்தான் நிராகரிக்கப்பட வேண்டும் என்றும், அப்படி நிராகரிக்கப்பட்டால் அதை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தலாம் என்றும் முதல் நீதிபதிகள் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

12 ஆண்டுகளுக்குப் பிறகு 1993-இல் உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் அந்தத் தீர்ப்புக்கு எதிராக வழக்குத் தொடுத்தனர். "இரண்டாவது நீதிபதிகள் வழக்கு' என்று அழைக்கப்படும் அந்த வழக்கில், முதல் நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பு நிராகரிக்கப்பட்டது. அரசியல் சாசனப் பிரிவுகள் 124 மற்றும் 217-இல் குறிப்பிடப்பட்டிருக்கும் "ஆலோசனை' என்கின்ற வார்த்தை "ஒப்புதல்' என்றுதான் கருதப்பட வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஆலோசனைதான் இறுதி முடிவாக இருக்கும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

இரண்டாவது நீதிபதிகள் வழக்கில்தான் கொலீஜியம் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியத்தின் கலந்தாலோசனையின் அடிப்படையில் நீதிபதிகளின் நியமனங்களும், நீதிபதிகளின் பணியிட மாற்றங்களும் தீர்மானிக்கப்படுவதை இரண்டாவது நீதிபதிகள் வழக்கு உருவாக்கியது. 
1998-இல் "கொலீஜியம்' முறை குறித்து மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. நீதிபதிகள் நியமனம் குறித்த அரசியல் சாசன விவாதம் மீண்டும் உச்சநீதிமன்றத்துக்கு வந்தது.

"மூன்றாவது நீதி பதிகள் வழக்கு' என்று அழைக்கப்படும் அந்த வழக்கின் அமர்வில், 9 நீதிபதிகள் இருந்தனர். அரசியல் சாசனப் பிரிவு 124 மற்றும் 217-இல் காணப்படும் "ஆலோசனை' என்பது கொலீஜியத்தின் பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவாக இருக்குமே தவிர, உச்சநீதிமன்றத் தலைமை  நீதிபதியின் கருத்தாக மட்டுமே இருக்காது என்று அந்த அமர்வு தெளிவுபடுத்தியது. 

உச்சநீதிமன்ற "கொலீஜியம்' என்பது, தலைமை நீதிபதியுடன் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கியதாகவும், உயர்நீதிமன்ற "கொலீஜியம்' தலைமை நீதிபதியுடன் இரண்டு மூத்த நீதிபதிகள் அடங்கியதாகவும் இருக்கும் என்பதையும் அந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்தியது. 

மேலே குறிப்பிட்ட மூன்று தீர்ப்புகளின் விளைவாகத்தான் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் நடத்துவதற்கான நடைமுறை நெறிமுறைகள் (மெமோரண்டம் ஆஃப் ப்ரோஸிஜர்) உருவாக்கப்பட்டன. அதன் அடிப்படையில், நீதிபதிகள் நியமனம் குறித்து தலைமை நீதிபதி, சட்ட அமைச்சகம், அரசு ஆகியவை ஒப்புதல் வழங்குவதற்கான காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், ஒப்புதல் வழங்கிய பிறகு நியமன உத்தரவு வழங்குவதற்கு  எந்தவிதக் காலவரம்பும் குறிப்பிடப்படவில்லை. தற்போதைய தீர்ப்பு அதற்கான காலவரம்பை உறுதிப்படுத்துகிறது. 
நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதும், காலதாமதமும் மிகப் பெரிய சாபக்கேடுகள். தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பது தெரிந்தும் அரசும் நீதித்துறையும் முனைப்புக்காட்டாமல் இருப்பது மெத்தனமா அல்லது பொறுப்பின்மையா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com