சிறியர் செய்கை! | ஐ.நா. பாதுகாப்புக் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்னையை சீனா எழுப்பியது குறித்த தலையங்கம் 

பாகிஸ்தானின் வற்புறுத்தலால் காஷ்மீர் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக்கும் சீனாவின் முயற்சி மீண்டும் தோல்வி அடைந்திருக்கிறது. புதன்கிழமை நடந்த ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்னையை சீனா எழுப்பியது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு விலக்கியதைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் இரண்டாவது முறையாக காஷ்மீர் பிரச்னையை சீனா எழுப்ப முற்பட்டு பின்னடைவை எதிர்கொண்டிருக்கிறது.
சீனாவின் முயற்சிக்கு ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் ஏனைய 14 உறுப்பினர்கள் ஆதரவளிக்கவில்லை. காஷ்மீர் பிரச்னை என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான இரு நாட்டுப் பிரச்னை என்றும், அதை இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், சீனாவைத் தவிர ஏனைய நாடுகள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டன. 

ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் ஐந்து நிரந்தர உறுப்பினர் நாடுகளில் சீனா தவிர்த்து, ஏனைய நான்கு நாடுகளும் (பிரான்ஸ், பிரிட்டன், ரஷியா, அமெரிக்கா) சீனாவின் முயற்சிக்கு ஆதரவளிக்கவில்லை.  
1972 சிம்லா ஒப்பந்தத்தின்படி, இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்னையை இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னையாக ஏற்று, பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள முடிவெடுத்தன. அதனால், 1971-க்குப் பிறகு காஷ்மீர் பிரச்னை ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் எழுப்பப்படவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில் டிசம்பர் மாதம் இந்தப் பிரச்னையை ஐ.நா.வில்  சீனா எழுப்பியது. ஏனைய நாடுகளின் ஆதரவில்லாமல் சீனாவின் முயற்சி தோல்வி அடைந்தது. இப்போது காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தானின் வற்புறுத்தலால்தான் சீனா மீண்டும் எழுப்பியது. 

பயங்கரவாதத்தின் தலைமைப் புரவலராகத் திகழும் பாகிஸ்தானுடனான தனது நட்பையும், நெருக்கத்தையும் வெளிப்படுத்துவதற்காக சீனாவும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பது புதிதொன்றுமல்ல. 2019 பிப்ரவரி 14-ஆம் தேதி புல்வாமாவில் மத்திய துணை ராணுவப் படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதைக் கண்டித்து ஐ.நா.வின் பாதுகாப்புக் குழு கொண்டு வந்த தீர்மானத்தை சீனா எதிர்த்தது. அந்த அறிக்கையை வெளியிட அனுமதிக்கவில்லை. தாக்குதலைத்  தொடர்ந்து ஒரு வாரம் கழித்துத்தான், உலக நாடுகளின் வற்புறுத்தலால் தனது எதிர்ப்பை விலக்கிக்கொண்டு அறிக்கையை வெளியிட ஒப்புக்கொண்டது. 

அதேபோல, புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் - ஏ - முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் 1,267 தடைக் குழுத் தீர்மானம் நிறைவேறுவதை நான்கு முறை சீனா தடுத்து நிறுத்தியது. கடைசியில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளும் ஒருங்கிணைந்து சீனாவை எதிர்கொண்டதைத் தொடர்ந்து கடைசியில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தில் சீனா கையொப்பமிட்டது. இதேபோல, பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளையும், சர்வதேச பயங்கரவாத அமைப்புகளையும் ஆதரிக்கும் சீனாவின் முயற்சிகள், தொடர்ந்து சர்வதேசக் கண்டனத்தை எதிர்கொண்டாலும் அதன் அணுகுமுறை மாறுவதாகத் தெரியவில்லை.

அதன் விளைவாக இப்போது சர்வதேச அளவில் சீனா தனிமைப்படுத்தப்படுகிறது என்பதுதான் உண்மை. சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் வாழும் சிறுபான்மை உய்கர் முஸ்லிம்களுக்கு எதிராக அங்கே கட்டவிழ்த்து  விடப்பட்டிருக்கும் அடக்குமுறை சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது. கடந்த  செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் தலைமையில் 30 நாடுகள் கூடி சீன அரசின் அடக்குமுறையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டன. சீனாவுடனான உறவுக்கு மரியாதை அளித்து இந்தியா அந்தக் கூட்டத்தில் பெருந்தன்மையுடன் கலந்துகொள்ளவில்லை. 
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டாலும்கூட, சீனாவைப்போல திபெத்,  ஷின்ஜியாங், ஹாங்காங் உள்ளிட்ட அதன் உள்நாட்டுப் பிரச்னைகளை எந்தவொரு சர்வதேச  அமைப்பிலும்இந்தியா இதுவரை எழுப்பியதில்லை. சீன அதிபர் ஷி ஜின்பிங், கடந்த அக்டோபர் மாதம் தனது அரசுமுறைப் பயணத்தின்போது மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட எந்தவொரு பிரச்னையையும் எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியிருக்கும்போது, இப்போது இரண்டாவது முறையாக பாகிஸ்தானின் தூண்டுதலால் ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் இந்தியாவுக்கு எதிரான தீர்மானத்தை எழுப்பியது சீனாவின் ராஜதந்திரமாக இருக்கலாம்; ஆனால், அது அந்த நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.
சர்வதேச அளவில் காஷ்மீர் பிரச்னையை எடுத்துச் செல்லும் முயற்சிகள் தோல்வி அடைந்திருக்கின்றன. அதற்காக காஷ்மீரில் இயல்பு நிலையை உறுதிப்படுத்தும் முயற்சியில் தளர்வு ஏற்பட்டுவிடலாகாது. அப்துல்லாக்களையும் முஃப்திகளையும் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளச் செய்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியை மீட்டெடுப்பதுடன், ஜனநாயகத்தையும் நிலைநிறுத்துவதில்தான் இந்திய அரசின் வெற்றி அடங்கியிருக்கிறது. 

விரைவிலேயே குளிர்காலம் முடிவுக்கு வந்து கோடைகாலம் தொடங்க இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் இயல்பு நிலை திரும்ப வேண்டுமே தவிர, மீண்டும் வன்முறை தொடங்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தாக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com