"தலிபான்' கானும், "ஷஹீத்' ஒசாமாவும்!| பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானின் சர்ச்சை பேச்சு குறித்த தலையங்கம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வழக்கம்போல விவாதப் பொருளாகி இருக்கிறார். இது அவர் வேண்டுமென்றே கிளப்பிய விவாதமா அல்லது வாய் தவறி வந்த வார்த்தையால் ஏற்பட்ட விபரீதமா என்று தெரியவில்லை. கடந்த வாரம் வியாழக்கிழமை, தேசிய அவை என்று அழைக்கப்படும் பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில், அவரது அரசின் செயல்பாடுகளை நியாயப்படுத்திப் பேசிய பேச்சுதான் சர்ச்சைக்கு வழிகோலியிருக்கிறது.
 வெளியுறவுக் கொள்கையில் தனது அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசும்போது, அமெரிக்காவுடனான உறவு பற்றியும் குறிப்பிட்டார். அப்போது, 2011-இல் அமெரிக்காவின் சிறப்பு கொரில்லா படையினர், ஆப்கானிஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள அபோட்டாபாத் நகரத்தில் பதுங்கி இருந்த அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை திட்டமிட்டு சுட்டுக் கொன்ற சம்பவம் குறித்துக் குறிப்பிட்டார்.
 பாகிஸ்தான் அரசுக்குத் தெரியாமல், அந்த நாட்டுக்குள் அமெரிக்கப் படைகள் அத்துமீறி நுழைந்து நடத்திய தாக்குதல் அது. இத்தனைக்கும், ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்த வீடு, பாகிஸ்தான் ராணுவ முகாம் ஒன்றின் மிக அருகில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் அந்த எதிர்பாராத தாக்குதல் பாகிஸ்தான் அரசையும், ராணுவத்தையும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்பதுதான் உண்மை.
 ஒசாமா பின்லேடன் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டார் என்பதுடன் பிரதமர் இம்ரான் கான் நின்றிருந்தால் விவாதம் எழுந்திருக்காது. ஆனால், ஒசாமா பின்லேடனைக் குறிப்பிடும்போது அவரை "ஷஹீத்' ஒசாமா பின்லேடன் என்று இம்ரான் கான் குறிப்பிட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. "ஷஹீத்' என்பது தியாகியைக் குறிக்கும் சொல் என்பதால், பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனை கெளரவப்படுத்தும் விதமாக அது எடுத்துக் கொள்ளப்பட்டதில் வியப்பில்லை.
 "ஒசாமா பின்லேடனைப் பிரதமர் இம்ரான் கான் தியாகியாகக் கருதுவதில் வியப்பில்லை. ஏனென்றால், தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் ஆதரிப்பது என்பது இம்ரான் கானின் வரலாறு. அவர் தெரிந்துதான் பேசியிருக்கிறார்' என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் புட்டோ ஜர்தாரியின் கூற்றைப் பலரும் வழிமொழிகிறார்கள்.
 இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-எ-இன்சாஃப் கட்சியும், அரசும் அவரைக் காப்பாற்ற முயற்சிக்கின்றன என்றாலும், நாடாளுமன்றத்தில் பிரதமர் பேசியிருக்கிறார் என்பதால் ஒசாமா பின்லேடனுக்கு "ஷஹீத்' என்கிற அடைமொழி தந்து கெளரவிக்கப்பட்டிருப்பது கடுமையான சர்வதேச விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் எதிராகச் செயல்படும் பயங்கரவாதிகளின் பாதுகாப்புக் கூடாரமாக பாகிஸ்தான் செயல்படுகிறது என்கிற அமெரிக்க உளவுத் துறையின் குற்றச்சாட்டை பிரதமர் இம்ரானின் பேச்சு மேலும் உறுதிப்படுத்துகிறது.
 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத் தலைவர்களான மசூத் அஸார், சஜித் மிர் இருவரையும் தண்டிக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று அமெரிக்க உளவுத் துறை அறிக்கை குற்றம்சாட்டுகிறது. பாகிஸ்தானின் பயங்கரவாதத் தொடர்புகள் குறித்தும், பயங்கரவாத அமைப்புக்கு அரசும், ராணுவமும் பாதுகாப்பும், ஆதரவும் அளிப்பது குறித்தும் பல்வேறு நிகழ்வுகள் உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை மேலும் தெளிவுபடுத்துகிறது.
 இம்ரான் கானின் பிரச்னை அத்துடன் முடிந்துவிடவில்லை. அவருக்கு எதிராக ஆளும் கட்சியிலேயே கடுமையான அதிருப்தி நிலவுகிறது. பாகிஸ்தானின் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஃபவாத் செளத்ரி அண்மையில் "வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா'வின் உருது பண்பலைக்குப் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் இம்ரான் கானின் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-எ-இன்சாஃப் கட்சியில் மூத்த அமைச்சர்களுக்கு இடையில் கடுமையான கோஷ்டிப் பூசல் நிலவுகிறது என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்.
 மூத்த அமைச்சர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாத நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைப் பிரதமர் இம்ரான் கான் ஒதுக்கிவைத்துவிட்டு, "வல்லுநர்கள்' என்கிற பெயரில் பலரை அமைச்சரவையில் சேர்த்திருக்கிறார். அவர்கள்தான் பிரதமருக்கு எல்லாப் பிரச்னைகளிலும் ஆலோசனை வழங்கி வருகிறார்கள். முக்கியமான முடிவுகளை எடுப்பதில் மூத்த அமைச்சர்களோ, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களோ கலந்தாலோசிக்கப் படாமல், இந்த "வல்லுநர்கள்' ஆலோசனைப்படிதான் பிரதமர் செயல்படுகிறார் என்று அமைச்சர் செளத்ரியே அந்தப் பேட்டியில் தெரிவிக்கிறார்.
 இம்ரான் கானின் கட்சியில் மட்டுமல்ல, கூட்டணிக் கட்சியினருக்கு இடையேயும் கடுமையான அதிருப்தி நிலவுகிறது. பலூசிஸ்தான் தேசிய கட்சி (மெங்கல்) அதிலிருந்து அண்மையில் விலகி இருக்கிறது. நீதித் துறையும் இம்ரானின் ஆட்சியின் மீது அதிருப்தியில் இருக்கிறது. பாகிஸ்தானின் பொருளாதாரம் இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான பின்விளைவுகளை எதிர்கொள்கிறது.
 இவையெல்லாம் போதாதென்று, கொவைட்-19 நோய்த்தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. நேற்றைய நிலையில் 2.1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உயிர்ப்பலி 4,400-ஐ எட்டியிருக்கிறது. மக்கள் எந்தவிதக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிப்பதாக இல்லை. என்ன நடக்கிறது, எப்படி நோய்த் தொற்றுப் பரவலை எதிர்கொள்வது என்று தெரியாமல் நிர்வாகம் திகைத்துப் போய் இருக்கிறது.
 ஒருவேளை, இந்தப் பிரச்னைகளில் இருந்தெல்லாம் கவனத்தைத் திசை திருப்புவதற்காகத்தான் பிரதமர் இம்ரான் கான் "ஷஹீத்' சர்ச்சையைக் கிளப்பியிருப்பாரோ?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com