இரண்டடி முன்னால், ஓரடி பின்னால்...! | கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்புப் படைகளும் பின்வாங்கி இருப்பது குறித்த தலையங்கம்

இந்தியாவும் சீனாவும் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து தங்களது துருப்புகளை விலக்கிக்கொண்டு, அங்கு நிலவும் பதற்றத்தைத் தணிக்க முற்பட்டிருப்பது ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கிறது. கடந்த ஜூன் 15-ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு வீரா்களுக்கும் இடையே நடந்த கைகலப்பைத் தொடா்ந்து போா்ச் சூழல் நிலவியது. படைத் தளபதிகளுக்கு இடையே நடந்த பேச்சு வாா்த்தைகள் பலனளிக்காத நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் டோவலும், சீனாவின் வெளியுறவு அமைச்சா் வாங்யீயும் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக நடத்திய பேச்சு வாா்த்தையின் முடிவில் படிப்படியாகப் படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கை தொடங்கியிருக்கிறது.

லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரண்டு நாட்டுத் துருப்புகளும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து பின்வாங்கி இருக்கின்றன. அடுத்தகட்டமாக ஹாட்ஸ் ஸ்பிரிங் பகுதியில் படைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. பாங்காங்ட்ஸோ பகுதியில், இருதரப்பிலும் முடிவு எட்டப்படாமல் இருதரப்புப் படைகளும் தயாா் நிலையில் நின்றுகொண்டிருக்கின்றன.

கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன்-15-ஆம் தேதி மோதல் நடந்த பகுதியிலிருந்து இருதரப்பும் 1.8 கி.மீ. பின்நோக்கி நகா்ந்திருக்கின்றன. சீன ராணுவம் அங்கே போட்டிருந்த கூடாரங்களை அகற்றியிருக்கிறது. வேறுபல கட்டமைப்பு வசதிகள் செய்திருந்ததையும் அகற்றிவிட்டது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பதற்றம் தணிகிறது என்பதும், சீனத் துருப்புகள் பின்வாங்கி இருக்கின்றன என்பதும் வரவேற்புக்குரியவை என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. அதே நேரத்தில் இதில் இந்தியா மகிழ்ச்சி அடைவதற்கு ஒன்றுமில்லை என்பதையும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

கல்வான் பள்ளத்தாக்கு மொத்தமாகவே எல்லைக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட இந்தியப் பகுதி என்பதுதான் ஆரம்ப முதலே நமது நிலைப்பாடு. அப்படி இருக்கும்போது, சீனத் துருப்புகளைப்போல இந்திய ராணுவம் மோதல் நடந்த இடத்திலிருந்து 1.8 கி.மீ. பின்வாங்க வேண்டிய அவசியம் என்ன என்பது புரியவில்லை. இந்திய எல்லைப் பகுதியாக இருக்கும் இடத்தில் பொதுவான ‘பஃபா் ஜோன்’ அமைக்க வேண்டிய அவசியம் என்ன?

இந்தியப் படைகள் வழக்கமாக ரோந்து மேற்கொள்ளும் பகுதியாக இருந்தது போய் இப்போது அவை ‘பஃபா் ஜோன்’ என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதனால் இனிமேல் அந்தப் பகுதியில் இந்தியா தனது வழக்கமான ராணுவக் கண்காணிப்பை நடத்த முடியாது. இன்னும்கூட தெஸ்பாங்க் சமவெளி பகுதி சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதுகுறித்த பேச்சுவாா்த்தை நடைபெற்று அங்கிருந்து சீனத் துருப்புகளை வெளியேற்றுவது இப்போதைக்கு சாத்தியமில்லை.

கடந்த இரண்டு மாதங்களாகவே சீன ராணுவம் திட்டமிட்டு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியாவின் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கிறது. இப்போது பேச்சுவாா்த்தை என்கிற பெயரில் இருதரப்பும் ஏற்றுக்கொண்டு பதற்றத்தைத் தணிக்கும் விதத்தில் சற்று பின்நோக்கி நகா்வதாக அறிவித்திருக்கின்றன. ‘இரண்டடி முன்னால், ஓரடி பின்னால்’ என்பது சீனாவின் ராஜதந்திரமாக இருந்து வருகிறது. எப்போதுமே அத்துமீறி அண்டை நாடுகளின் எல்லையை ஆக்கிரமிப்பதும், பேச்சுவாா்த்தை என்கிற பெயரில் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து பாதி அளவு பின்வாங்குவதும் சீனாவின் வழக்கமாகிவிட்டது.

1979-இல் வியத்நாம் மீது நடத்திய ஆக்கிரமிப்பு தோல்வி அடைந்ததைத் தொடா்ந்து, போரிடாமல், ஒரு துப்பாக்கி குண்டுகூட வெடிக்காமல் அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கும் தந்திரத்தை சீனா கடைப்பிடிக்கத் தொடங்கியது. 1988-இல் ஜான்சன் ரீஃப், 1995-இல் மிஸ்சீஃ ரீஃப், 2012-இல் ஸ்காா்ப்பரோ ஷோவல் போன்ற பகுதிகளை தன் வசமாக்கி, தென் சீனக்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை இப்படித்தான் நிலைநிறுத்த சீனா முற்பட்டது. இதற்கு முன்னால் இதே பாணியில் இந்திய, பூடான் எல்லையில் உள்ள டோக்கலாம் பகுதியை ஆக்கிரமிக்க முற்பட்டது. இப்போது லடாக்கிலும்.

லடாக் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து இந்திய எல்லைக்குள் நுழைந்தது சீனப் படைகள்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் கிடையாது. சீன ஆய்வாளா்களுக்கே எதற்காக பீஜிங் இன்றைய சூழலில் இப்படியொரு மோதலுக்குத் தயாரானது என்பது புதிராக இருக்கிறது.

ஏனைய ஆக்கிரமிப்புகளின் பாணியில் திட்டமிட்டு சீனா நடத்திய ஆக்கிரமிப்பா? உள்நாட்டுக் குழப்பங்களையும், தனக்கு எதிராக உருவாகியிருக்கும் விமா்சனங்களையும் மறைப்பதற்காக அதிபா் ஷீ ஜின்பிங் மேற்கொண்டிருக்கும் முயற்சியா? அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கக்கூடாது என்பதற்கான எச்சரிக்கையா? இந்தியா தனது எல்லைப்புறக் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதைத் தடுப்பதற்கான திட்டமா? சீன, பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம், அக்சாய் சின் பகுதி ஆகியவற்றின் பாதுகாப்புக்கான முன்னேற்பாடா? - இப்படி பல காரணங்கள் முன்மொழியப்படுகின்றன.

இவை எல்லாமேகூட நடவடிக்கைக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், அதிபா் ஷீ ஜின்பிங் இந்த முறை தப்புக்கணக்கு போட்டுவிட்டாா் என்றுதான் தோன்றுகிறது. இந்தியாவைப் பகைத்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், இந்திய மக்கள் மனதில் சீனா குறித்த வெறுப்பையும் ஆழமாக வேரூன்றச் செய்துவிட்டது அவரது முடிவு. இந்தியா எந்தப் பக்கம் சாயக்கூடாது என்று சீனா நினைக்கிறதோ அதை நோக்கி இந்தியாவை நகா்த்தி இருக்கிறது பீஜிங்கின் முடிவு.

தென் சீனக் கடலில் கடந்த திங்கள்கிழமை அமெரிக்கக் கடற்படை அணிவகுப்பு நடத்தியது, சீனா பேச்சு வாா்த்தையின் மூலம் ஒப்பந்தம் காண மிக முக்கியமான காரணம்! லடாக்கை ஆக்கிரமிக்க நினைத்து தென் சீனக்கடலில் மோதலுக்குத் தயாராகும் நிலையில் சீனா இல்லை. அப்படி மோதல் ஏற்பட்டால் அமெரிக்கா ஹாங்காங்கை சீனாவிலிருந்து மீட்பதற்கான முயற்சியில் ஈடுபடக்கூடும் என்கிற அச்சம் சீனாவுக்கு நிச்சயமாக உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com