மதம் கைகொடுக்குமா? | துருக்கியில் ஹாஜியா சோபியா மாதா கோயில் பிரச்னை குறித்த தலையங்கம்

இங்கே அயோத்தி பிரச்னை போலத்தான் துருக்கியில் ஹாஜியா சோபியா மாதா கோயில் பிரச்னை. துருக்கி அதிபர் எர்டோகன் எடுத்திருக்கும் முடிவு, ஒட்டுமொத்த மேலை நாடுகளை மட்டுமல்ல,


இங்கே அயோத்தி பிரச்னை போலத்தான் துருக்கியில் ஹாஜியா சோபியா மாதா கோயில் பிரச்னை. துருக்கி அதிபர் எர்டோகன் எடுத்திருக்கும் முடிவு, ஒட்டுமொத்த மேலை நாடுகளை மட்டுமல்ல, மத அடிப்படைவாதத்தில் நம்பிக்கை இல்லாத இஸ்லாமியர்கள் மத்தியிலும் கடுமையான வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

துருக்கி அதிபர் எர்டோகன், தன்னை ஆட்சியில் நிலைநிறுத்திக் கொள்ள, துருக்கியின் மதச்சார்பற்ற தன்மையை ஒன்றன்பின் ஒன்றாகத் திட்டமிட்டுத் தகர்த்து வருகிறார். அதற்கு அவர் கையாள்வது இஸ்லாமிய மத அடிப்படைவாதம் என்கிற ஆயுதத்தை. அதன் ஒரு பகுதியாக, உலகப் பிரசித்திபெற்ற, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஹாஜியா சோபியா மாதா கோயில் மீண்டும் மசூதியாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த மாதா கோயிலுக்கு ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் பின்னணி உண்டு என்பதால், சர்வதேச வரலாற்றுச் சின்னமாக அது கருதப்பட்டிருந்தது. இனிமேல் அது தொழுகை நடத்தப்படும் சாதாரண மசூதியாகக் கருதப்படும்.

இஸ்லாம் உருவாவதற்கு முன்னால், ஆறாம் நூற்றாண்டில் பைசான்டைன் சாம்ராஜ்யத்தால் உருவாக்கப்பட்டது ஹாஜியா சோபியா மாதா கோயில். 1453-இல்  ஓட்டோமான் பேரரசு இஸ்தான்புல்லைக் கைப்பற்றியபோது, அந்த மாதா கோயில் ஒரு மசூதியாக மாற்றப்பட்டது. மத்திய ஆசியப் பகுதிகளில் அதற்குள் இஸ்லாம் பரவி, முழு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி விட்டது. பிரார்த்தனை நடத்தப்பட்ட மாதா கோயில், இஸ்லாமியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, மசூதியாக மாற்றப்பட்டது. அந்தக் காலத்தில்  இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே மிகப்பெரிய போராட்டப் பிரச்னையாக அது கருதப்பட்டது.

ஹாஜியா சோபியா உலக கலாசார சின்னங்களில் முக்கியமானதாகக் கருதப்பட்டதற்குப் பல காரணங்கள் உண்டு. அதன் சுவர்களின் பின்னால் பல நூற்றாண்டு வரலாறு மறைந்து கிடக்கிறது. கலாசாரங்களும்,  கட்டமைப்பு கலை வடிவங்களும் ஹாஜியா சோபியாவை மிகப் பெரிய சுற்றுலாத் தலமாகவும், வியப்புக்குரிய நினைவுச் சின்னமாகவும் மாற்றியிருக்கின்றன. அதனுடைய மேற்கூரையிலும், கோபுரத்திலும் கிறிஸ்தவ இறை தூதர்கள், தேவதைகள் போன்றோரின் உருவங்கள் காணப்படுகின்றன. பிற்காலத்தில் அதன் சுவர்கள் முழுவதும் இஸ்லாமிய திருக்குர்ஆன் வாசகங்கள் பதிக்கப்பட்டன.

1923-இல் முஸ்தபா கமால் அட்டாடுர்க் தலைமையில் நவீன துருக்கி உருவானபோது,  அவர் நவீன துருக்கியின் அடையாளமாக ஹாஜியா சோபியாவை மாற்ற முனைந்தார். கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பொதுவாக,  அதை ஒரு காட்சியகமாக  மாற்றி அமைத்தார்.  இஸ்தான்புல் செல்லும் அனைத்து சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கும் அது திறந்துவைக்கப்பட்டது. துருக்கியில் கிறிஸ்தவமும் இஸ்லாமும் இணைந்து இருந்ததன் அடையாளமாக ஹாஜியா சோபியா நினைவகம் காட்சி அளித்து வந்தது. 

இப்போது அந்த நினைவகத்தைத்தான் அதிபர் எர்டோகன் மீண்டும் மசூதியாக மாற்றி, அங்கே தொழுகை நடத்துவதற்கு வழிகோலியிருக்கிறார். போப்பாண்டவர்  உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலர் அதிபர் எர்டோகனின் முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், துருக்கியை இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நோக்கி நகர்த்துவது என்று முடிவெடுத்திருக்கும் அதிபர் எர்டோகன், அதுகுறித்து கவலைப்படாமல் இருப்பதில் ஆச்சரியமொன்றும் இல்லை.

1923-இல் முஸ்தபா கமால் அட்டாடுர்க் நவீன துருக்கி குடியரசை நிறுவியபோது, கடுமையான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். பெண்கள் "பர்தா' அணிவதைத் தடை செய்ததில் தொடங்கி, நபிகள் நாயகத்தின் (ஸல்) வழித்தோன்றல்களால் அமைக்கப்பட்ட  "கலீஃபா'  என்கிற இஸ்லாமிய சாம்ராஜ்ய  அமைப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.  விரைவிலேயே, துருக்கி, ஏனைய ஐரோப்பிய அண்டை நாடுகளுடன் சமூக, பொருளாதார ரீதியிலாகத் தனது உறவைப் பலப்படுத்திக் கொண்டு வாழத் தொடங்கியது. அவையெல்லாம் இப்போது பழங்கதைகளாகிவிட்டன.

2014-இல்  அதிபர் எர்டோகன் பதவிக்கு வந்தது முதல், ஒன்றன் பின் ஒன்றாக எல்லா அடிப்படைவாத நடவடிக்கைகளையும் எடுக்கத் தொடங்கிவிட்டார். அதிகாரம் அதிபர் கையில் முழுமையாகக் குவிந்தது. தனி மனித உரிமைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. தன்னுடைய சர்வாதிகார ஆட்சிக்கு வலு சேர்ப்பதற்காக, அதிபர் எர்டோகன் துருக்கியை ஓர் இஸ்லாமிய அடிப்படைவாத நாடாக மாற்றத் தொடங்கிவிட்டார். இஸ்லாமிய "கலீஃபா'  அதிகாரத்துக்குள்பட்ட சாம்ராஜ்யமாகத் துருக்கியை மாற்றுவதுதான் தனது இலக்கு என்று வெளிப்படையாகவே கூறவும் தொடங்கியிருக்கிறார். துருக்கியின் கல்வி முறையை மாற்றி, மீண்டும் இஸ்லாமியக் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் திட்டத்தையும் அதிபர் எர்டோகன் நடைமுறைப்படுத்திவிட்டார்.

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், துருக்கியின் பொருளாதாரம் கடுமையாகத் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. பல்வேறு பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதும், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதும் மக்கள் மத்தியில் அதிருப்தியை அதிகரித்திருக்கிறது. போதாக்குறைக்கு கொவைட்-19 தீநுண்மித் தொற்று முறையாகக் கட்டுப்படுத்தப்படாமல் பரவிக் கொண்டிருக்கிறது.  ஐரோப்பிய நாடுகள் துருக்கியைக் கைவிட்டுவிட்டன. ஹாஜியா சோபியா மாற்றத்துக்குப் பிறகு, எதிரியாகவே பார்க்கத் தொடங்கிவிட்டன.

தனது அதிகாரத்தை நிலைநிறுத்த அதிபர் எர்டோகன் கையிலெடுத்திருக்கும் ஆயுதம் மத அடிப்படைவாதம். அல்லாதான் அவரைக் காப்பாற்ற வேண்டும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com