தடுப்பூசிக்கான காத்திருப்பு! | தடுப்பூசி தொடர்பான உலகின் நம்பிக்கை பற்றிய தலையங்கம்

உலகம் மிக ஆவலுடன் காத்திருக்கும் கொவைட் 19-க்கான தடுப்பு மருந்து ஆய்வு, கடைசிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி கண்டுபிடிக்கும் தனது ஆய்வின் கடைசிக் கட்டத்தை நெருங்கியிருப்பதாக அறிவித்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது.
பிரிட்டனில் மட்டுமல்லாமல், சீனாவின் வூஹான் நகரிலுள்ள மருத்துவப் பரிசோதனை மையமும் தடுப்பூசி கண்டுபிடித்திருப்பதாகவும், அது பாதுகாப்பாக
இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. 
முதல் இரண்டு கட்ட சோதனைகள் முடிந்து, மனிதர்களுக்கு தடுப்பூசி செலுத்தி மூன்றாவது கட்ட ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. மருத்துவ விஞ்ஞானிகளும், தீநுண்மி ஆராய்ச்சியாளர்களும் (வைராலஜிஸ்ட்ஸ்) முன்னேற்றம் குறித்து அடக்கி வாசிக்கிறார்கள். கடைசிக் கட்டத் தடைகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு
வெற்றிகரமாக தடுப்பூசியின் பயன்பாடு நிரூபிக்கப்படும் வரை, விஞ்ஞானிகள் மௌனம் சாதிப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
மூன்றாவது கட்ட சோதனைக்கு 23-க்கும் அதிகமான தடுப்பு மருந்துகளின் ஆய்வுகள் கடைசிக் கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கின்றன. மேலும், 140 வெவ்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கடைசியாகக் கிடைத்திருக்கும் தகவலின்படி, 225 ஆய்வுகள் உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு கட்டங்களில் இருக்கின்றன. அவற்றில் 25 தடுப்பூசிகள் மனிதர்கள் மீதான சோதனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலும், தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி கடைசிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இதுவரை உலகெங்கிலும் 1,62,73,645 பேர் கொவைட் 19 தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 99,53,167 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.
6,49,550 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தியாவில் 13,85,522 பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 8,85,576 பேர் குணமடைந்திருக்கிறார்கள். 32,063 உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. உலகளாவிய அளவில் இந்தியாவில் உயிரிழப்புகள் குறைவாக இருக்கிறது என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. 
கடந்த ஜூன் மாதம் சீனாவில் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் கொவைட் 19-க்கான தடுப்பூசியைப்போலவே, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில்
உருவாக்கப்பட்டிருக்கும் தடுப்பு மருந்தும் மனிதர்களுக்குச் செலுத்தப்பட்டு சோதனை நடந்து வருகிறது. இதுவரை எந்தவிதத் தீவிர எதிர்வினையோ பக்கவிளைவோ இல்லையென்று கூறப்படுகிறது. அவை செலுத்தப்படும்போது மனித உடலின் எதிர்ப்பு சக்தி, கொவைட் 19 தீநுண்மி அணுக்களைத் தாக்கி அழிக்கும் திறனை உருவாக்கிக் கொள்வதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். 
மாற்று மருந்து, தடுப்பூசி ஆகியவற்றை உருவாக்குவதில் பல பிரச்னைகள் இருக்கின்றன. சோதனைக்கும் தயாரிக்கப்படும் மருந்துக்கும் இடையில் இடைவெளிகள் ஏற்படக்கூடும். பின்னடைவுகள் ஏற்படுவது மிக மிக சகஜம். ஆரம்பக்கட்ட சோதனைகள் வெற்றியடைவதாலேயே தடுப்பு மருந்து கண்டுபிடித்ததாக ஆகிவிடாது. பல ஆண்டுகள் சோதனைக்குப் பிறகு கண்டுபிடிக்கக் கூடிய மருந்துகளையும் தடுப்பூசிகளையும் ஒரு சில மாதங்களில் விரைந்து ஆய்வு செய்து உருவாக்கும்போது, தடுப்பூசி தயாரான பிறகும்கூட சில ஐயப்பாடுகளும் குறைபாடுகளும் காணக்கூடும். இதற்கெல்லாம் தயாராகத்தான் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. 
எப்போது கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி விற்பனைக்கு வரும் என்பதை ஒட்டுமொத்த உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்தக் கட்டத்தில் முறையான பரிசோதனைக் காலம், வெற்றிகரமான சோதனைகள் இவையெல்லாமே சர்வதேச மருந்து தரக்
கட்டுப்பாட்டு நிறுவனங்களாலும் உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு நிறுவனங்களாலும் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. 
அப்படியே மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், அதன் பிறகும் பல சவால்கள் காத்திருக்கின்றன. குறைந்த காலகட்டத்தில் பல கோடி தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்வது என்பது இயலாத காரியம். என்னதான் உற்பத்தித் திறனை அதிகரித்தாலும்கூட எந்த அளவுக்கு தேவைக்கேற்ப தடுப்பூசி மருந்துகள் குறைந்த கால அளவில் தயாரித்துவிட முடியும் என்பதும், அவற்றை உலகின் எல்லா நாடுகளுக்கும் எப்படி எடுத்துச் சென்று விநியோகிக்க முடியும் என்பதும் அடுத்த கட்ட சவால்களாக இருக்கப்போகின்றன. இதுகுறித்து இப்போதே பல நிறுவனங்கள் திட்டமிடத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. அமெரிக்க, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் போன்றவை இதுகுறித்த தீவிர ஆலோசனையை மேற்கொண்டிருக்கின்றன.
மிகுந்த பொருள் செலவிலும் போட்டிகளுக்கிடையிலும் தயாரிக்கப்படும் தடுப்பூசி மருந்தை அடித்தட்டு மக்களுக்குக் கொண்டு செல்வது இன்னொரு சவால்.
சாமானியர்களுக்குக் கட்டுப்படும் விதத்தில் விலை இருந்தாக வேண்டும்.  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும்கூட, உலகிலுள்ள பல ஏழை நாடுகள், அடுத்த பல மாதங்களுக்குத் தடுப்பூசி கிடைக்காமல் தவிக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. இதற்கெல்லாம் என்ன தீர்வு வைத்திருக்கிறோம்? 
இந்தியாவைப் பொருத்தவரை, ஒருவிதத்தில் அதிர்ஷ்டம் செய்திருக்கிறோம். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வு புணேயிலிருக்கும் இந்திய "சீரம் இன்ஸ்டிடியூட்டுடன் இணைந்து உருவாக்கப்படுகிறது. மனிதப் பரிசோதனைக்கு  தேசப் பற்றும் மனிதாபிமானமும் உள்ள ஆரோக்கியமான இந்தியர்கள் சிலர் முன்வந்திருப்பது பெருமையளிக்கிறது. காத்திருப்பு தொடர்கிறது. விரைவில் விடை கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் தொடர்கிறது...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com