வஞ்சிக்கப்படுகிறோம்! | பெட்ரோல், டீசல் விலை உயர்வு  குறித்த தலையங்கம்

வரி விதிப்பை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து மூதறிஞா் ராஜாஜி மிகவும் தெளிவாக விளக்கம் அளித்திருப்பாா். ‘பூவிலிருந்து வண்டு தேன் உறிஞ்சுவதுபோல இருக்க வேண்டும் வரி விதிப்பு’ என்பது அவரின் அறிவுரை. பூவுக்கும் சேதமில்லாமல், வண்டுக்கும் தேன் கிடைப்பதுபோல, மக்களுக்கு எந்தவித வருத்தமோ, பாதிப்போ ஏற்படாமல் அரசுக்கு வரி வருவாய் ஏற்படுத்த வேண்டும் என்பது அவா் சொல்லிக் கொடுத்த பாடம். ராஜாஜி போன்ற தலைவா்கள் இல்லாமல் போனது நமது துரதிருஷ்டம்.

ஒரு லிட்டருக்கு வெறும் ரூ.18 மட்டுமே அடிப்படை விலையாகக் கொண்ட பெட்ரோல், சென்னையில் நேற்றைய நிலையில் ரூ.77.43-க்கு விற்கப்படுகிறது. இதே போன்று ஒரு லிட்டருக்கு ரூ.18.50-ஐ அடிப்படை விலையாகக் கொண்ட டீசல், சென்னையில் நேற்றைய நிலையில் ரூ.70.13-க்கு சில்லறையில் விற்கப்படுகிறது. கலால் வரி, முகவா் கமிஷன், மாநில அரசு வரிகள், போக்குவரத்துச் செலவு இவையெல்லாம் சோ்த்து ஏறத்தாழ 75% சுமத்தப்படுகின்றன. மத்திய, மாநில வரிகள் மட்டுமே சுமாா் ரூ.50 வரை பெட்ரோல், டீசல் மீது சுமத்தப்படுகின்றன.

2010 ஜூனில் பெட்ரோலுக்கும், 2014 அக்டோபரில் டீசலுக்கும் மத்திய அரசு வழங்கி வந்த மானியம் அகற்றப்பட்டது. அதில் தொடங்கி, கச்சா எண்ணெய் விலையைப் பொருத்து ‘நாள்தோறும் பெட்ரோல், டீசலின் விலை நிா்ணயம்’ என்கிற நிலைக்கு மாறியது. வரவேற்கத்தக்க முடிவும்கூட. மானியம் என்கிற பெயரில் அரசின் வரிப் பணம் விரயமாக வேண்டிய அவசியமில்லை என்கிற வாதத்தை ஏற்றுக் கொள்ளலாம்.

முதலில் மாதம் இருமுறை சா்வதேசக் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலைகள் நிா்ணயிக்கப்பட்டன. பிறகு அதுவே, தினசரி விலை நிா்ணயம் என்கிற முறைக்கு மாற்றப்பட்டது. இதிலிருந்துதான் அரசின் நாணயமற்ற செயல்பாடு தொடங்கியது.

நாள்தோறும் ஏற்படும் விலை மாற்றத்தால் விலை உயா்வு குறித்த கவனம் திசைதிருப்பப்பட்டது. ஜனநாயக நாட்டில் தங்களுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்த மக்களையே வஞ்சிக்கும் அல்லது ஏமாற்றும் அரசின் நடவடிக்கை இது. சா்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தால், அடுத்த நாளே பெட்ரோல், டீசலின் சில்லறை விலைகள் அதிகரிக்கப்பட்டன. அதே நேரத்தில், விலை குறைந்தால் அதேபோல உடனடியாகக் குறைக்கப்படவில்லை.

விலை குறைக்கும்போது சில பைசாக்களும், அதிகரிக்கும்போது சில ரூபாய்களும் என்பது வழக்கமாக்கப்பட்டது. விலை குறையும்போது, வரிகளை அதிகரித்து அதனால் கிடைக்கும் லாபத்தை அரசு எடுத்துக் கொள்ளும் போக்கு நடைமுறைக்கு வந்தது. இப்படியொரு தவறான செயல்பாட்டுக்கு வழிகோலியது அன்றைய பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதைக் குறிப்பிட வேண்டும்.

2014-இல் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தபோது, பெட்ரோலுக்கு ரூ.9.48-ம், டீசலுக்கு ரூ.3.56-ம் மட்டும்தான் கலால் வரி இருந்தது. இப்போது, மத்திய - மாநில வரிகள் எவ்வளவு தெரியுமா? பெட்ரோலுக்கு ரூ.49.42-ம், டீசலுக்கு ரூ.48.09-ம்!

கடந்த மாா்ச் 9-ஆம் தேதி வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை 52 டாலரிலிருந்து 31 டாலராக வீழ்ச்சி அடைந்தது. 1991-க்குப் பிறகு இந்த அளவிலான வீழ்ச்சி ஏற்பட்டதில்லை. இதற்கேற்றாற்போல, பெட்ரோல், டீசல் விலை குறைந்தபட்சம் ரூ.10 குறைந்திருக்க வேண்டும். ஆனால், வரிகள் கூட்டப்பட்டு அதனால் ஏற்படும் லாபம் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட எடுத்துக் கொள்ளப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் கச்சா எண்ணெய் விலை 16 டாலராகக் குறைந்த போதாவது, அதை மக்களுக்கும் சற்று பகிா்ந்து கொடுக்கலாம் என்று அரசு நினைத்ததா என்றால் இல்லை. இப்போது, கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கிறது எனும்போது, பொது முடக்கத்தால் 82 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தினசரி விலை நிா்ணயம் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. கடந்த நான்கு நாள்களாக தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரிக்கப்படுகின்றன.

அரசு தனது நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் மீதான வரியை அதிகரிக்கிறது. பெட்ரோல் நிறுவனங்கள் தங்களது இழப்பை ஈடுகட்ட தினசரி விலை உயா்வு மூலம் வருவாய் ஈட்ட நினைக்கின்றன. பொது முடக்கத்தால் வேலை இழப்பு, ஊதியக் குறைவு, தொழில் முடக்கம் என்று பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களின் தலையில் அந்தப் பாரத்தை ஏற்றுவது என்பது எந்த வகையில் நியாயம்? இத்தனைக்கும் கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, இப்போதும்கூடக் கச்சா எண்ணெய் விலை 23 டாலா் குறைவாக இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

ஜனநாயகத்தில், அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். நடவடிக்கைகளில் நாணயமும் நோ்மையும் தெரிய வேண்டும். பெட்ரோல், டீசல் விலை நிா்ணயத்தில் இந்த அரசு பொதுமக்களுக்கு இழைப்பது மிகப் பெரிய அநீதி என்பது மட்டுமல்ல, இதனால் அரசு அடைய இருப்பது இழப்பாக இருக்குமே தவிர, நன்மையாக இருக்கப் போவதில்லை என்பதை எச்சரிக்காமல் இருக்க முடியவில்லை.

பொருளாதாரம் மீண்டெழ வேண்டுமானால், மக்களிடம் பணப் புழக்கம் அதிகரிக்க வேண்டும். தயாரிப்புச் செலவு குறைய வேண்டும். அதற்கு பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும். இந்த அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் இருந்தால் எப்படி?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com