அதிகாரிகளின் இயலாமை! | அரசு அதிகார அமைப்பின் இயலாமை குறித்த தலையங்கம்

சீனாவின் வூஹான் நகரில் புதுமையான நோய்த்தொற்று பரவி இருப்பது கடந்த டிசம்பர் மாதம் தெரியவந்தது. அதை எதிர்கொள்ள, சீனாவின் கம்யூனிஸ சர்வாதிகார அரசு மின்னல் வேகத்தில் நோயாளிகளுக்கு ஆயிரக்கணக்கில் மருத்துவமனைப் படுக்கைகளை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து தைவான், தென் கொரியா போன்ற அண்டை நாடுகளுக்கும், இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கும் நோய்த்தொற்று பரவியது. அவர்களும் அதை எதிர்கொள்ள முடியாமல் திணறினார்கள்.
 இத்தனைக்குப் பிறகும் கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சோதனைகளை மேற்கொள்ளவும், பாதிப்படைந்திருப்பவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் முடியாமல் இருக்கிறோம் என்றால், நமது நிர்வாக இயந்திரத்தில் கோளாறு இருக்கிறது என்பதைத்தான் அது காட்டுகிறது.
 பொது முடக்கத்தை மார்ச் 25-ஆம் தேதி இந்தியா அறிவித்து, கொவைட் 19 தீநுண்மித் தொற்றை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது. மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைக் கடந்து, தினந்தோறும் பத்தாயிரத்துக்கும் அதிகமாகப் புதிய பாதிப்புகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன. பொது முடக்கம் படிப்படியாகத் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரிக்கின்றன என்பது தெரிகிறது. அதை எதிர்பார்த்து எதிர்கொள்ள அரசு நிர்வாகம் ஏன் தவறுகிறது என்பதுதான் புரியவில்லை.
 சோதனைகள் அதிகரித்தால் அதற்கேற்றாற்போல நோயாளிகளை எதிர்கொள்ள மருத்துவமனை வசதிகள் நம்மிடையே இல்லை என்கிற உண்மை அச்சமடையச் செய்கிறது. மத்திய, மாநில அரசுகள் நம்மிடம் போதிய மருத்துவமனைப் படுக்கைகள் இருப்பதாகவும், ரயில் பெட்டிகளைக்கூட படுக்கைகளாக மாற்றியிருப்பதாகவும், எத்தகைய பாதிப்பானாலும் எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருப்பதாகவும் சொன்னதெல்லாம் உண்மையல்ல என்பது இப்போது தெரிகிறது. நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்கிற உண்மை வெளிப்படுகிறது.
 கொவைட் 19 தீநுண்மித் தொற்றின் பாதிப்பு இந்தியாவில் ஒரு லட்சத்தை எட்டுவதற்கு 64 நாள்கள், அதாவது இரண்டு மாதங்களுக்கு மேல் எடுத்தது. ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சத்தை எட்டுவதற்கு வெறும் இரண்டே வாரங்கள்தான் எடுத்தது. இப்போது மேலும் இரண்டு லட்சத்தைப் பதினேழு நாள்களில் எட்டிக் கடந்திருக்கிறோம். நோய்த்தொற்று தீவிரமடைந்து அதிவேகமாகப் பரவுகிறது என்பதை இது தெளிவுபடுத்துகிறது.
 போகிற போக்கைப் பார்த்தால், ஜூலை மாத இறுதிக்கு முன்பாகவே இந்தியாவில் நோய்த்தொற்று பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்துவிடும் என்று தோன்றுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 4% நோயாளிகளுக்காவது தீவிர சிகிச்சைப் பிரிவு தேவைப்படும். அதாவது, தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 40,000 படுக்கைகள் இருந்தால்தான் அவர்களுக்கு சிகிச்சை அளித்துக் காப்பாற்ற முயற்சிக்க முடியும்.
 மத்திய சுகாதாரம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் தகவல்படி, இந்தியாவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 32,362 படுக்கைகள் இருப்பதாகத் தெரிவிக்கிறது. ஆக்சிஜன் இணைக்கப்பட்ட படுக்கைகள் 1,20,104 இருப்பதாகவும், தனிமைப் படுக்கைகள் 8,91,828 இருப்பதாகவும் கூறுகிறது. அமைச்சகம் குறிப்பிட்டிருக்கும் தீவிர சிகிச்சைப் படுக்கைகள் பொது மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் எல்லாம் சேர்த்து இந்தியாவில் இருக்கும் தீவிர சிகிச்சை வசதிகளின் புள்ளிவிவரமே தவிர, அவை கொவைட் 19 தீநுண்மித் தொற்று நோயாளிகளுக்கு மட்டுமானதல்ல. இதில்தான் பிரச்னை.
 தீநுண்மித் தொற்றல்லாத இதய நோய், பக்கவாதத் தாக்குதல், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட ஏனைய பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வழியில்லாமல் எல்லா அவசர சிகிச்சை படுக்கைகளையும் தீநுண்மித் தொற்று பாதிப்புக்கான அதிதீவிர சிகிச்சைக்காக ஒதுக்கிவிடுவது எப்படி சரியாக இருக்கும்? எல்லா மருத்துவமனைகளையும் கொவைட் 19 தீநுண்மித் தொற்றுக்கான சிகிச்சை மையங்களாக மாற்றினால், அவையேகூட நோய்த்தொற்றுக் கேந்திரங்களாக மாறிவிடாதா? அங்குள்ள மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் பாதிக்கப்பட்டால், அதன் பின்விளைவுகளை எப்படி எதிர்கொள்வது?
 உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவை ஏற்படுத்திவிட முடியாது. அதிலும் ஆயிரக்கணக்கில் ஏற்படுத்துவது என்பது அசாத்தியம். அதற்குத் தேவையான உபகரணங்கள், கருவிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு எங்கே போவது? இது குறித்து ஏன் முன்யோசனையுடன் அரசு இயந்திரம் சிந்திக்கவில்லை என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.
 கொவைட் 19 தீநுண்மித் தொற்றுக்கான தனிமை மருத்துவமனைகளை அரசு தற்காலிகமாக அதிக அளவில் உருவாக்க வேண்டும். நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கான மருத்துவமனைகளையும், ஏனைய சிகிச்சைகளுக்கான மருத்துவமனைகளையும் வேறுபடுத்திப் பட்டியலிட வேண்டும்.
 அரசு மருத்துவமனை மீதான நம்பிக்கையின்மையால்தான் தனியார் மருத்துவமனைகளை நோயாளிகள் நாடுகிறார்கள். போதுமான வசதிகளுடனும் மருத்துவர்களுடனும் நோய்த்தொற்றுக்கான தற்காலிக தனிமை மருத்துவமனைகள் உருவாக்கப்படுவதும், தனியார் மருத்துவமனைகளை நோயாளிகள் நாடாமல், அரசு மருத்துவர்களின் பராமரிப்பில் துணிந்து சிகிச்சை பெற்று குணமடைவதற்கு வழிகோலுவதும் அரசின் கடமை.
 அரசு அதிகார வர்க்கத்தின் இயலாமையின் வெளிப்பாடுதான் நாம் எதிர்கொள்ளும் அவலம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com