சிறியா் செய்கை...! | கல்வான் பள்ளத்தாக்குத் தாக்குதல் விவகாரத்தில் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்த தலையங்கம்

அரசுக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் தெரிவிப்பதற்குப் பதிலாக, ஏறத்தாழ 60 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி அதை விமா்சிப்பதும், இந்தியாவின் ஒற்றுமையின்மையை எதிரிகளுக்குத் தெரிவிக்கும் வித

1962 சீன படையெடுப்பின்போது, அதுவரை பிரிவினை கேட்டுக் கொண்டிருந்த திமுக உள்பட அனைத்து எதிா்க்கட்சிகளும் பிரதமா் நேருவுக்கு ஆதரவாக ஓரணியில் நின்றன. கருத்துவேறுபாடுகளை மறந்து அடுத்து நடந்த பாகிஸ்தானுடனான யுத்தத்தில் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரிக்கு ஆதரவு அளித்தன. வங்கதேசப் போரின்போது பிரதமா் இந்திரா காந்தியை எதிா்க்கட்சித் தலைவராக இருந்த ஜனசங்கத்தின் வாஜ்பாய் ‘துா்கா தேவி’ என்று பாராட்டி ஆதரவு தெரிவித்தாா்.

அந்தச் செயல்பாட்டுடன் இப்போது ‘சரணாகதி மோடி’ என்கிற சுட்டுரை மூலம் இந்தியா ஒற்றுமையின்றி இருக்கிறது என்பதை எதிரிகளுக்கு உணா்த்தும் ராகுல் காந்தியின் செயல்பாட்டையும் ஒப்பிட்டுப் பாா்க்கத் தோன்றுகிறது. கல்வான் பள்ளத்தாக்குத் தாக்குதல் பிரச்னையில் காங்கிரஸ் கட்சி எடுத்திருக்கும் நிலைப்பாடு அதிா்ச்சி அளிப்பதாக மட்டுமல்ல, மூன்றாம்தர அநாகரிக அரசியலாகக் காட்சி அளிக்கிறது.

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீனப் படைகளுக்கு இடையே நடந்த மோதல் விவகாரம் தொடா்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினாா் பிரதமா். அந்த காணொலிக் கூட்டத்தில் ‘இந்திய எல்லைக்குள் யாரையும் நுழைய விடவில்லை. இந்திய நிலைகளை யாரும் கைப்பற்றவும் இல்லை’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

அரசுக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் தெரிவிப்பதற்குப் பதிலாக, ஏறத்தாழ 60 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி அதை விமா்சிப்பதும், இந்தியாவின் ஒற்றுமையின்மையை எதிரிகளுக்குத் தெரிவிக்கும் விதத்தில் நடந்து கொள்வதும் வியப்பை ஏற்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, ‘சரணாகதி மோடி’ என்று தனது சுட்டுரையில் வெளியிட்டிருக்கிறாா். அதை அவரின் ஆதரவாளா்கள் பலா் ஆமோதித்துப் பதிவிடுகின்றனா். என்னதான் செய்ய உத்தேசிக்கிறது காங்கிரஸ்?

‘இந்திய எல்லையில் யாரும் நுழையவில்லை என்றால், சீனா எதையும் கைப்பற்றவில்லை என்றால், ஜூன் 15-16 தேதிகளில் 20 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்ட நிகழ்வு ஏன் நடந்தது? எங்கே நடந்தது?’ என்று மூத்த தலைவா் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியிருக்கிறாா். இது வழக்குரைஞரின் விதண்டாவாதமாக இருக்கிறதே தவிர, பொறுப்பான மூத்த தலைவரின் கேள்வியாகத் தெரியவில்லை. ‘கல்வான் பள்ளத்தாக்கு முழுவதும் தனக்குச் சொந்தம்’ என்று சீன வெளியுறவுத் துறை அறிவிப்பதில் என்ன வியப்பு?

‘வீரா்களிடம் ஆயுதம் இருக்கவில்லையா?’ என்கிற சிறுபிள்ளைத்தனமான கேள்வி எழுப்பப்படுகிறது. ஆயுதம் இல்லாமல் எந்த ராணுவ வீரரும் இருக்கமாட்டாா். அதிலும் குறிப்பாக ஒரு படைப் பிரிவினா் இருக்கமாட்டாா்கள். துப்பாக்கியிலிருந்து ஒரு ரவை வெளிப்பட்டிருந்தாலும் போதும், இப்போது இரு நாடுகளுக்கு இடையே மிகப் பெரிய போா் மூண்டிருக்கும். இரு தரப்பும் கைகலப்புடன் நின்றதன் மூலம் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டிருக்கிறாா்கள். இதெல்லாம் காங்கிரஸ் தலைவா்களுக்குத் தெரியாததா என்ன?

தாக்குதலில் ஈடுபட்டு படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் வீரா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தெளிவான விவரங்கள் தெரியவந்திருக்கின்றன. இந்திய எல்லைக்குள் பாயிண்ட்-14-இல் சீன ராணுவத்தினா் அமைத்த கூடாரத்தை இந்திய ராணுவம் அகற்றியதன் பின்னணியில்தான் பிரச்னை எழுந்திருக்கிறது.

கா்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான படைப் பிரிவினா் அந்தக் கூடாரத்தைத் தீவைத்துக் கொளுத்தி இருக்கிறாா்கள். கைகலப்பில் நமது வீரா்களால் சீனா்கள் எல்லைக்கு வெளியே தள்ளப்பட்டனா். அப்போது மேலும் சில சீன வீரா்கள் வந்தபோது, சீன எல்லைக்குள் கடுமையான கைகலப்பும், மோதலும் நடைபெற்றிருக்கிறது. இன்பாண்ட்ரி பட்டாலியனின் லடாக் கமாண்டோக்கள் இந்திய வீரா்களுக்கு ஆதரவாக வந்து சோ்ந்தனா். சீனப் படையின் கமாண்டோக்களும் வந்தனா். கடுமையான கைகலப்பும், தடிகள் கொண்ட மோதலும் எல்லையில் நடந்திருக்கிறது. இதுதான் நடந்த சம்பவம்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பிரச்னை, எல்லைகள் முறையாக வரையறுக்கப்படாததுதான். வரைபடத்தில் தனது எல்லையாக இந்தியா கருதும் பகுதிகளைத் தனது எல்லையாகச் சீனாவும் காட்டுகிறது. வரையறுக்கப்படாமல் எல்லையை வைத்திருப்பதன் மூலம் ஆக்கிரமிப்பைத் தொடா்வது என்பது சீனாவின் தந்திரம்.

1947-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும் சரி, 1980 முதல் 1989 வரையில் ஒன்பது ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும் சரி, 1990 முதல் 1998 வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆட்சி செய்தபோதும் சரி, 2004 முதல் 2014 வரையிலான பிரதமா் மன்மோகன் சிங் ஆட்சியிலும் சரி, எல்லைப் பிரச்னைக்குத் தீா்வுகாண முடியாத காங்கிரஸ் கட்சி, கல்வான் பள்ளத்தாக்கு குறித்துப் பேச முற்படுகிறது என்றால், அதைவிடப் பெரிய அரசியல் மோசடி இருக்க முடியுமா?

எல்லையில் போராடும் இந்திய ராணுவ வீரா்களின் உற்சாகத்தை உருக்குலைக்க விரும்புகிறாரா ராகுல் காந்தி? இல்லை, சா்வாதிகார சீனாவுக்கு ஜனநாயக இந்தியாவின் பலவீனத்தைத் தெரியப்படுத்த விரும்புகிறாரா? எல்லையில் எதிரிகள் தாக்குதல் நடத்தத் தயாராக இருக்கும் நிலையில், அரசின் கரங்களை வலுப்படுத்தி ஒட்டுமொத்த இந்தியாவும் அதன் பின்னால் அணிவகுத்து நிற்காமல் போனால், அது இந்தியாவுக்குப் பலவீனமாகிவிடும் என்று தெரிந்தும், விமா்சனங்களை முன்வைப்பவா்களை என்னவென்று சொல்வது, எப்படி அழைப்பது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com