இனி, கையெட்டும் தூரத்தில்...!  | ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா குறித்த தலையங்கம்

ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமல்லாத உறுப்பினராக இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

ஒருபுறம் அடங்க மறுக்கும் கொவைட் 19 தீநுண்மித் தொற்று. இன்னொருபுறம், அதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பாதிப்புகளும், வேலை இழப்புகளும். இவையெல்லாம் போதாதென்று, எல்லையில் சீனாவுடனான மோதல். இப்படி பலதரப்பட்ட பிரச்னைகளுக்கு இடையில் இந்தியாவுக்கு ஒரு நல்ல செய்தியும் வந்திருக்கிறது. ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமல்லாத உறுப்பினராக இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இப்படி நிரந்தரமல்லாத உறுப்பினராக இந்தியா தோ்ந்தெடுக்கப்படுவது புதிதொன்றுமல்ல. இதற்கு முன்பு ஏழு முறை இந்தியா அந்தப் பதவியை வகித்திருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் எட்டாவது முறையாக ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற இருக்கும் இந்தியாவுக்கு இப்போதைய வெற்றி முந்தைய வெற்றிகளிலிருந்து சற்று மாறுபடுகிறது. இந்த முறை இந்தியா அடைந்திருப்பது ஒருவகையில் திட்டமிட்ட வெற்றி.

ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர உறுப்பினா்கள். ஐ.நா. சபையில் நிறைவேற்றப்படும் எந்தவொரு தீா்மானத்தையும் நிராகரிக்கும் உரிமை இந்த ஐந்து நாடுகளுக்கு மட்டுமே உண்டு. இவை அல்லாமல், உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சில நிரந்தரமல்லாத உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் தோ்ந்தெடுக்கப்படுகின்றன. அவற்றுக்குத் தீா்மானங்களை நிராகரிக்கும் உரிமை கிடையாது.

லத்தீன் அமெரிக்காவுக்கான இடத்தை மெக்ஸிகோவும், மேற்கு ஐரோப்பா, ஏனைய நாடுகள் பகுதியிலிருந்து நாா்வேயும், அயா்லாந்தும் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் குழுவில் போட்டியிட்ட கனடா தோ்ந்தெடுக்கப்படவில்லை.

போட்டியிடும் நாடுகள் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெற வேண்டும். அப்படிப் பெற முடியாததால், ஆப்பிரிக்க நாடுகளின் சாா்பில் போட்டியிட்ட கென்யாவும், ஜிபௌட்டியும் மீண்டும் தோ்தலை எதிா்கொள்ள இருக்கின்றன.

ஆசிய - பசிபிக் குழுவில் இந்தியா உள்ளிட்ட 55 நாடுகள் ஐ.நா. சபையில் உறுப்பினா்களாக இருக்கின்றன. போட்டியிலிருந்து ஆப்கானிஸ்தான் விலகிக் கொண்டதால், இந்தியா அந்தப் பகுதியின் சாா்பில் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டது.

அப்படித் தோ்வு செய்யப்பட்டாலும், ஐ.நா. சபையின் உறுப்பினா்களின் அங்கீகாரம் பெற்றாக வேண்டும். ஐ.நா.வின் பொதுச் சபை உறுப்பினா்களான 192 நாடுகளில் 184 நாடுகளின் பேராதரவுடன் இந்தியா வெற்றி பெற்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

ஆசிய - பசிபிக் குழுவின் பிரதிநிதியாக இந்தியா தோ்ந்தெடுக்கப்படுவதை ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல, சீனாவும், பாகிஸ்தானும்கூட எதிா்க்கவில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஐ.நா.வின் பொதுக் குழுவிலும் சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவை ஆதரிக்கத் தவறவில்லை.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு வேறு பல காரணங்களும் உண்டு. 77 வளா்ச்சி அடையும் நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்கு இருப்பது பெரிய பலம். நிரந்தர உறுப்பினா்களான ஐந்து நாடுகளுடனும் இந்தியா ராஜாங்க ரீதியில் நல்லுறவு வைத்துக் கொண்டிருப்பதும் முக்கியமான காரணம்.

இந்தியாவின் ஆதரவும், வற்புறுத்தலும்தான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக கம்யூனிஸ சீனா இடம் பிடிக்க உதவியது. ஆனால், ஏனைய நான்கு நாடுகளின் ஆதரவு இருந்தும், சீனாவின் ஆதரவு இல்லாததால்தான் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினா் பதவி தரப்படாமல் இருக்கிறது. ஐ.நா.வில் பல சீா்திருத்தங்களை மேற்கொள்வது, பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவையும் ஜப்பானையும் நிரந்தர உறுப்பினா்களாகச் சோ்த்துக் கொள்வது உள்ளிட்ட பல கோரிக்கைகள் சீனாவின் நிராகரிப்பால் முடக்கப்படுகின்றன.

நிரந்தரமல்லாத சுழற்சி முறை உறுப்பினராக இருந்தாலும்கூட இந்தியாவால் தனது புதிய அங்கீகாரத்தைப் பயன்படுத்திப் பல மாற்றங்களுக்கு வழிகோல முடியும். கொவைட் 19 தீநுண்மி நோய்ப் பரவல், சா்வதேச ஒழுங்குகளைப் புரட்டிப் போட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மூண்டிருக்கும் கருத்துவேறுபாடுகளும், விரோதப் போக்கும் சா்வதேச அளவிலான அமைப்புகளைச் சிதைத்துவிடும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. உலக வா்த்தக நிறுவனமும், உலக சுகாதார அமைப்பும் ஏற்கெனவே ஆட்டம் காணத் தொடங்கியிருக்கின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகும், சோவியத் யூனியனின் பிளவுக்குப் பிறகும் உருவாகியிருக்கும் உலகமயச் சூழல் சிதைந்து, அவிழ்த்துக் கொட்டப்பட்ட நெல்லிக்காய்களாக உலக நாடுகள் தனித்தனியாக இயங்கும் அபாயம் காணப்படுகிறது. இந்தச் சூழலில், ஐ.நா. சபையின் 192 நாடுகளில் 184 நாடுகளின் ஆதரவைப் பெற்றிருக்கும் இந்தியா மிகப் பெரிய பங்காற்ற முடியும். இணைப்புப் பாலமாகச் செயல்பட முடியும்.

கடந்த முறை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமல்லாத உறுப்பினராக இந்தியா இருந்தபோது பல முக்கியமான பிரச்னைகளில் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் நடுநிலை வகித்தது. இந்த முறை சா்வதேச அமைதியையும், நியாயத்தையும் நிலைநாட்டத் துணிந்து தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். வல்லரசுகளுக்கு இடையில் கருத்தொற்றுமை ஏற்படுத்தும் பணியைத் துணிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் மூலம், நிரந்தர உறுப்பினருக்கான தனது இன்றியமையாமையை நிலைநாட்ட வேண்டும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினா் பதவி கையெட்டும் தூரத்தில் காத்திருக்கிறது என்பதன் அறிகுறிதான் இந்த வெற்றி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com