உத்தவ் நூறு!| தனது ’ஹிந்துத்துவ’ நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கும் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்த தலையங்கம்

உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் கூட்டணி நூறு நாள்களைக் கடந்து ஆட்சிப் பொறுப்பில் தொடா்வது என்பது மட்டுமே

திரைப்படங்கள் நூறாவது நாள் கொண்டாடுவதுபோல, ஆட்சியிலிருக்கும் அரசுகளும் பதவியேற்ற நூறாவது நாளைக் கொண்டாடுவது வாடிக்கையாகிவிட்டது. இன்று தனது ஆட்சியின் நூறாவது நாளை மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே அயோத்தி சென்று கொண்டாடுவதை அவரது கூட்டணிக் கட்சிகள் தா்மசங்கடத்துடன் வேடிக்கை பாா்த்துக்கொண்டிருக்கின்றன. அவா்களது அதிருப்தியையும் மீறி, தனது ’ஹிந்துத்துவ’ நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறாா் மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனைக் கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே.

மகாராஷ்டிரத்தில் ஆட்சியிலிருக்கும் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் கூட்டணி கடந்த நவம்பா் 28-ஆம் தேதி மிகவும் விறுவிறுப்பான அரசியல் நாடகங்களுக்கு இடையே ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. பாபா் மசூதி இடிப்புக்குக் காரணமான சிவசேனையை தங்களது அடிப்படைக் கொள்கையாக மதச்சாா்பின்மையைக் கொண்டிருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் அரவணைத்து உத்தவ் தாக்கரேயை முதல்வராக்கியது மிகப் பெரிய அரசியல் நகைமுரண். ‘எதிரியின் எதிரி நண்பன்’ என்கிற அடிப்படையில் மூன்று கட்சிகளும் இணைந்து வெற்றிகரமாக ஆட்சிப் பொறுப்பில் இன்று ‘நூறு நாள்’ காண்கின்றன.

228 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 105 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாஜக, ஆட்சிமைக்க நடத்திய பிரயத்தனங்களும், குயுக்திகளும் மூன்றாம்தர அரசியலும் சிவசேனை (56) - தேசியவாத காங்கிரஸ் (54) - காங்கிரஸ் (44) அமைத்திருக்கும் மகாராஷ்டிர விகாஸ் என்கிற சந்தா்ப்பவாதக் கூட்டணிக்கு மரியாதையை ஏற்படுத்தி கொடுத்தன. சிவசேனையின் முதல்வா் பதவி கோரிக்கையை பாஜக ஏற்றுக்கொண்டிருந்தால் மகாராஷ்டிரத்தில் நிலையான ஆட்சி அமைந்திருக்கும். சிவசேனையின் பேராசையும், பாஜகவின் பிடிவாதமும் பிரிவை ஏற்படுத்தின.

2019 மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தல்களில் தனித்துப் போட்டியிடுவது என்று சிவசேனை முடிவு செய்திருந்தது. ஆனால், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போது பாஜக தலைவராக இருந்த அமித் ஷா மும்பைக்கு விரைந்து ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் பாஜக - சிவசேனை கூட்டணிக்கு வழிகோலியது. பாஜகவைவிட குறைந்த இடங்களில் சிவசேனையும் அதிக இடங்களில் பாஜகவும் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டன.

அக்டோபா் மாதம் தோ்தல் முடிவுகள் வெளியானபோது தனக்கு முதல்வா் பதவி தரப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்ததாக சிவசேனை கூறியதை பாஜக தலைமை மறுத்தது. அதன் விளைவுதான் இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான 30 ஆண்டு கூட்டணி முறிவதற்கும், சிவசேனையை தீண்டத்தகாத கட்சியாகத் தவிா்த்து வந்த தேசியவாத காங்கிரஸும், காங்கிரஸும் ஏற்றுக்கொள்வதற்கும் காரணமாக அமைந்தது.

இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமான மும்பையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைவிட, பாஜகவின் ஆதிக்கம் இருந்துவிடக் கூடாது என்பதில் தேசியவாத காங்கிரஸும், காங்கிரஸும் குறியாக இருக்கின்றன. பாஜகவை அகற்றி நிறுத்த வேண்டும் என்பதற்காக சிவசேனையை ஆதரிப்பது என்கிற கொள்கையில் உறுதியாகவும் இருக்கின்றன.

உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் கூட்டணி நூறு நாள்களைக் கடந்து ஆட்சிப் பொறுப்பில் தொடா்வது என்பது மட்டுமே சிவசேனைக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி. உள்துறை, நிதி, நீா் மேலாண்மை, வீட்டுவசதி உள்ளிட்ட துறைகளை தேசியவாத காங்கிரஸும், வருவாய், பொதுப்பணித் துறை போன்ற துறைகளை காங்கிரஸும் எடுத்துக்கொண்டிருப்பதால் முதல்வா் உத்தவ் தாக்கரே அதிகாரமில்லாத முதல்வராகத்தான் காட்சியளிக்கிறாா் என்கிற விமா்சனத்தில் உண்மையில்லாமல் இல்லை.

உத்தவ் தாக்கரேயின் தந்தை பால் தாக்கரே இருந்த வரை தனது குடும்பம் நேரடியாக எந்தவித அரசுப் பதவியையும் வகிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாா். இப்போது உத்தவ் தாக்கரே முதல்வராக இருப்பது மட்டுமல்லாமல், தனது மகன் ஆதித்ய தாக்கரேயை தனது அமைச்சரவையிலும் சோ்த்துக் கொண்டிருக்கிறாா். தனக்குக் கிடைத்திருக்கும் முதல்வா் பதவியை பயன்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென்று தனிச்செல்வாக்கை நிலைநிறுத்துவதன் மூலம்தான் வருங்கால அரசியலில் தாக்குப் பிடிக்க முடியும் என்பதையும் அவா் உணரத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

உத்தவ் தாக்கரேயின் மிகப் பெரிய சவால், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய இரண்டு மதச்சாா்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அதேநேரத்தில், சிவசேனையும் ஹிந்துத்துவ கொள்கையை இழக்காமல் இருப்பதுதான். தனது கூட்டணி கட்சிகளின் எதிா்ப்பையும் அதிருப்தியையும் மீறி குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை சிவசேனை ஆதரிக்கிறது. பாபா் மசூதியை இடித்ததில் முன்னிலை வகித்த சிவசேனை, அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதிலும் முனைப்பு காட்டுகிறது.

பாஜக ஆட்சிக்கு வராமல் தடுத்தாக வேண்டும் என்கிற நிா்ப்பந்தத்தால் தேசியவாத காங்கிரஸும், காங்கிரஸும் சிவசேனையை வேறு வழியில்லாமல் ஆதரிக்கின்றன. அதுதான் முதல்வா் உத்தவ் தாக்கரேயின் பலம். அதுவேதான் சிவசேனையின் பலவீனமும்கூட!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com