அறிவுடையார் எல்லாம் உடையார்! | ஆராய்ச்சித் துறை குறித்த தலையங்கம்

சுதந்திர இந்தியாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் இதுவரை ஒருவர்கூட எந்தவொரு பிரிவிலும் நோபல் விருது பெறவில்லை என்கிற வேதனையான உண்மை சுடுகிறது. அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாமல் இருந்த பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில் இயற்பியலுக்காக நோபல் விருது பெற்ற சர் சி.வி. ராமனுக்குப் பிறகு, பல இந்தியர்கள் பல்வேறு அறிவியல் துறைகளில் அந்த விருதை வென்றிருக்கிறார்கள் என்றாலும்கூட, அவர்களின் ஆராய்ச்சிகள் மேலை நாடுகளில், குறிப்பாக, அமெரிக்காவில் நடந்தன என்பதால் இந்தியா சொந்தம் கொண்டாட முடியாது.
 ஆராய்ச்சி மேம்பாட்டில் தனியார் நிறுவனங்களும் பங்களிப்பதற்கு வழிகோல மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை திட்டமிட்டிருக்கிறது. ஆண்டொன்றுக்கு ரூ.40 கோடி அளவிலான ஆராய்ச்சி நிதிக்கு வழிகோலும் இந்தத் திட்டத்தில் இந்திய நிறுவனங்களும், இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்களும் பங்களிப்பு நல்கி, முக்கியமான உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி நடத்தும் விஞ்ஞானிகளுக்கு நிதியுதவி வழங்குவது என்பதுதான் அந்தத் திட்டத்தின் நோக்கம். தனியார் துறை ஊக்குவிக்கப்படுவது வரவேற்புக்குரியது. அதே நேரத்தில்ஆராய்ச்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு வரம்பு நிர்ணயத்துடன் செயல்படக் கூடாது.
 இந்தியா விடுதலை பெற்றது முதல் 20 ஆண்டுகளில் நமது ஆராய்ச்சி நிறுவனங்களை வலுப்படுத்துவதிலும், மேம்படுத்துவதிலும் சர்வதேசத் தரத்தில் உயர்த்துவதிலும் அன்றைய ஆட்சியாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். ஆனால், அதற்கு ஏற்ற அளவில் இந்தியாவின் பொருளாதாரம் இருக்கவில்லை. ஆராய்ச்சி நிறுவனங்களுக்குப் போதுமான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படவில்லை. பல மேலை நாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களின் உதவியுடனும், அவற்றுடன் இணைந்தும் இந்தியாவின் ஆராய்ச்சி நிறுவனங்கள் சில செயல்பட முற்பட்டன. பல திறமையான விஞ்ஞானிகளை உருவாக்கவும் செய்தன.
 விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா அடைந்த அளவிலான மேம்பாட்டையும் வெற்றியையும் ஏனைய துறைகளில் நம்மால் அடைய முடியவில்லை. முதல் கால் நூற்றாண்டு காலம் எழுதப் படிக்கத் தெரிந்த இந்தியர்களை உருவாக்குவதே மிகப் பெரிய சவாலாக இருந்தது.
 அனைவருக்கும் கல்வி வழங்குவதும், பள்ளிக்கூடங்கள் கட்டுவதும், கல்லூரிகள் உருவாக்குவதும், கல்விக்கான நிதி ஒதுக்கீட்டின் பெரும் பங்கை எடுத்துக்கொண்ட நிலையில், உயர் கல்விக்காக செலவிடும் நிலையில் இந்தியா இருக்கவில்லை.
 அப்படியே செய்யப்பட்ட ஒதுக்கீடுகளிலும் அணுசக்தி, செயற்கைக்கோள் ஆராய்ச்சிகள் முன்னிலை வகித்த அளவுக்கு இயற்பியல், வேதியியல், உடற்கூறு இயல், பொறியியல், மருந்தியல் போன்றவை கவனம் பெறவில்லை.
 80-களில் நிர்வாக மேலாண்மை, பொறியியல் தொழில்நுட்பம், ஜவுளித் தொழில்நுட்பம், விவசாயம் ஆகியவை கவனம் பெறத் தொடங்கின என்றாலும், தேவைப்பட்ட அளவிலான நிதியாதாரம் இல்லாததால் எதிர்பார்த்த முன்னேற்றம் காணவில்லை. சர்வதேச அளவிலான ஆராய்ச்சிகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ஆராய்ச்சித் துறை மிகவும் அடிப்படையிலான அளவில்தான் காணப்பட்டது. அதனால், தலைசிறந்த ஆராய்ச்சி மாணவர்கள் மேலை நாடுகளுக்குக் குடிபெயர்ந்து, அந்த நாடுகளின் ஆராய்ச்சிகளுக்கும் தொழில்நுட்பத்துக்கும் தங்களது பங்களிப்பை வழங்க நேரிட்டது.
 இந்தியாவின் ஆராய்ச்சித் துறை வளர்ச்சி முழுக்க முழுக்க அரசின் ஆதரவைச் சார்ந்ததாக இருந்து வருகிறது. உயர் கல்வி நிறுவனங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் நடத்தப்படும் ஆராய்ச்சிகள் மூலம் சர்வதேசத் தரத்திலான அல்லது உலகை வியக்க வைக்கும் அளவிலான ஆராய்ச்சிகள் எதுவுமே வெளிவரவில்லை.
 ஆராய்ச்சி மாணவர்களுக்காக வழங்கப்படும் மானியம் பெரும்பாலும் விரயமாகிறதே தவிர, திறமைகளை ஊக்குவிப்பதாக அமையவில்லை. தனியார் நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் ஆராய்ச்சிகள் மூலம் அறிவுசார் சொத்துரிமை பெறும் அளவிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளாகத்தான் ஆராய்ச்சியிலும் ஆய்வுகளிலும் முதலீடு செய்வதற்கு தனியார் துறையும் ஊக்குவிக்கப்படுகிறது.
 இந்தியாவின் ஆராய்ச்சித் துறையில் பெரும் பகுதி முதலீடு அரசால் மட்டுமே செய்யப்படுகிறது. 2004-05-இல் தனியார் துறையின் பங்களிப்பு 28% என்றால், 2016-17-இல் அதுவே 40%-ஆக அதிகரித்தது என்பது ஆறுதல் அளிக்கும் முன்னேற்றம். பெரும்பாலான வளர்ச்சி அடைந்த பொருளாதாரங்களில், தனியார் நிறுவனங்கள் ஆராய்ச்சிகளை நடத்தித் தங்களது ஆய்வுகளுக்கான அறிவுசார் சொத்துரிமையைப் பெறுவதில் முனைப்புக் காட்டுகின்றன. இந்தியாவில் இன்னும் அப்படியொரு நிலை ஏற்படவில்லை.
 30 ஆண்டுகளுக்கு முன்பு உலகமயக் கொள்கையை இந்தியா வரித்துக்கொண்டது முதல் மேலை நாட்டு ஆராய்ச்சிகளை அதற்கான கட்டணத்தைச் செலுத்தி பெற்றுக்கொள்ளும் எளிய முறையை கையாளத் தொடங்கிவிட்டோம். நமக்கென்று ஆய்வுகள் செய்து அறிவுசார் சொத்துரிமை பெறும் முனைப்புக்கு அரசும் தனியார் துறைகளும் ஊக்கம் தருவதில்லை. அமெரிக்காவும் சீனாவும் ஆராய்ச்சிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தையும் முதலீட்டையும் நாம் செய்யாதவரை, சர்வதேச அளவில் பொருளாதார வல்லரசாக இந்தியா மாறவே முடியாது.
 உண்மையான ஆராய்ச்சியாளர்களுக்கு முழுமையான உதவியும் ஊக்கமும் வழங்குவதும், போலி ஆராய்ச்சி மாணவர்களை அடையாளம் கண்டு அகற்றி நிதி விரயத்தை அகற்றுவதும் உடனடி அவசியம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com