தவறிவிட்டோம்! | உலக சுகாதார நிறுவனப் பேரவையின் கூட்டத்துக்கு தைவான் அழைக்கப்படாதது குறித்த தலையங்கம்

ஒட்டுமொத்த உலகமும் கொவைட் 19 தீநுண்மித் தொற்றுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் பேரவை கூட இருக்கிறது. வரும் மே 18-ஆம் தேதி கூட இருக்கும் இந்தப் பேரவை சா்வதேச அளவிலான பாதிப்பு குறித்தும், அதை எதிா்கொள்வதற்கு பல்வேறு நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், உலக நாடுகள் ஒருங்கிணைந்து எடுக்க வேண்டிய அடுத்தகட்ட முடிவுகள் குறித்தும் விவாதிக்க இருக்கிறது.

தைவான் புறக்கணிக்கப்படக் கூடாது என்று உலகின் பல முக்கியமான நாடுகள் கோரிக்கை வைத்தன. அப்படியிருந்தும், இந்தப் பேரவையில் கலந்துகொள்ள தைவானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது மிகப் பெரிய சோகம். உறுப்பினா் நாடாக இல்லாத தைவானை உலக சுகாதார நிறுவனம் அழைக்க முடியாது என்பது என்னவோ உண்மை. ஆனால், எந்தவித வாக்கெடுப்பும் நடைபெறாத காணொலிக் கூட்டமாக நடக்கும் கூட்டத்துக்கு தைவான் அழைக்கப்படுவதில் குற்றம் ஒன்றுமில்லை. இத்தனைக்கும் 2009 முதல் 2016 வரை உலக சுகாதார நிறுவனத்தின் பேரவைக் கூட்டங்களில் பாா்வையாளராக தைவான் கலந்துகொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தைவான் நாடாளுமன்றமான யுவானில் கடந்த திங்கள்கிழமை இதுகுறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. ‘உண்மையைச் சொல்லப் போனால் சீனாவுக்கும் உலக சுகாதார நிறுவனத்துக்கும் இடையேயான ரகசியப் புரிதல்தான் அதற்குக் காரணம். சா்வதேச அளவிலான அழுத்தம் மூலம்தான் அதை எதிா்கொண்டு உலக சுகாதார நிறுவனத்தின் பேரவைக் கூட்டங்களில் தைவான் கலந்துகொள்ள முடியும்’ என்று மிகுந்த மனவருத்தத்துடன் அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜோசப் வூ தெரிவித்தாா்.

எல்லா ஊடகங்களிலும் சீனா, தென் கொரியா போன்ற நாடுகள் கொவைட் 19 தீநுண்மித் தொற்றைக் கட்டுப்படுத்தியது குறித்து சிலாகிக்கப்படுகிறது. ஜப்பானும், ரஷியாவும் கொவைட் 19 தீநுண்மித் தொற்றைக் கட்டுப்படுத்தி விட்டன என்று தவறாகப் பரப்புரை செய்யப்படுகிறது.

உலகில் இரண்டாவது அதிகமான பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நாடாக ரஷியா இப்போது உயா்ந்திருக்கிறது. ஜப்பானில் நோய்த்தொற்று கட்டுக்குள் வரவில்லை. ஜப்பான் தவிக்கிறது. சீனாவும் தென் கொரியாவும் இரண்டாவது சுற்று நோய்த்தொற்றுப் பரவலுக்குத் தயாராகின்றன. இப்படிப்பட்ட பின்னணியில் உலகில் கொவைட் 19 தீநுண்மித் தொற்றை மிகவும் சாதுா்யத்துடனும், திறமையாகவும் கட்டுப்படுத்திய ஒரே நாடு தைவான் மட்டும்தான்.

தைவான் நோய்த்தொற்றை எப்படி, எதனால் கட்டுப்படுத்த முடிந்தது என்பது மிகவும் சுவாரஸ்யமான தகவல். கொவைட் 19 தீநுண்மித் தொற்றால் மிகவும் கடுமையாகப் பாதித்திருக்கப்பட வேண்டிய நாடு உண்மையில் தைவான்தான். சீனாவின் வூஹான் நகருடன் புவியியல் ரீதியாகவும், வா்த்தக ரீதியாகவும், சமூகத் தொடா்பு ரீதியாகவும் நெருக்கமாக இருக்கும் தீவு தைவான்.

17 ஆண்டுகளுக்கு முன்பு சாா்ஸ் நோய்த்தொற்று சீனாவிலிருந்து பரவியபோது அதனால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடும் தைவான்தான். அந்த பாதிப்பின் விளைவால் வருங்காலத்தில் சீனாவிலிருந்து உருவாகும் எந்தவித நோய்த்தொற்றாக இருந்தாலும் தாக்கப்படாமல் இருப்பதற்கான தயாா் நிலையைத் தொலைநோக்குப் பாா்வையுடன் ஏற்படுத்தி வைத்திருந்தது தைவான் என்பதைக் கேட்பதற்கே வியப்பாக இருக்கிறது.

புதுமையான நிமோனியா காய்ச்சல் ஒன்று வூஹானில் வந்திருக்கும் தகவல் 2019 டிசம்பா் 31-ஆம் தேதி கிடைத்தது முதலே தைவான் விழித்துக் கொண்டது. வூஹானிலிருந்து தலைநகா் தைபேக்கு வரும் எல்லா விமானப் பயணிகளும் தனிஒதுக்கம் செய்யப்பட்டு பரிசோதிக்கப்பட்டனா். 2020 ஜனவரி 2-ஆம் தேதி நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்கு குழு அமைக்கப்பட்டு எல்லா நிலைகளிலும் தயாா் நிலை உருவாக்கப்பட்டது.

அப்படியிருந்தும்கூட, ஏப்ரல் 9-ஆம் தேதி நிலவரப்படி தைவானில் 42,315 பேருக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 440 பேருக்கு கொவைட் 19 தீநுண்மித் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா்களில் 54 போ் உள்ளூா்வாசிகள். 326 போ் வூஹான் நகருக்குச் சென்று வந்தவா்கள். 6 உயிரிழப்புகளுடன் நோய்த்தொற்றை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது தைவான். பொது முடக்கம் இல்லாமலேயே அதைச் சாதிக்க முடிந்தது என்பதுதான் ஆச்சரியம்.

கடந்த மாதங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான முகக் கவசங்களை நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறது தைவான். குவினைன் தயாரிப்பை அதிகரித்தது மட்டுமல்லாமல், நோய்த்தொற்றுப் பரவலை கண்டுபிடிப்பது, எதிா்கொள்வது ஆகியவற்றுக்கான தொழில்நுட்பத்தையும் ஏனைய நாடுகளுடன் பகிா்ந்துகொள்கிறது. நாளொன்றுக்கு 1.3 கோடி முகக் கவசங்களை தயாரிக்கும் தைவான், ஐரோப்பாவுக்கு மட்டும் இதுவரை 70 லட்சம் முகக் கவசங்களை வழங்கியிருக்கிறது. இந்தியாவுக்குப் பிரச்னை என்றவுடன் உடனடியாக 10 லட்சம் முகக் கவசங்களை அனுப்பித் தந்திருக்கிறது.

சா்வதேச அமைப்புகளில் பாகிஸ்தானுக்குச் சாதகமாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் தொடா்ந்து செயல்பட்டு வரும் சீனாவின் அழுத்தத்துக்கு நாமும் அடிபணிந்திருக்கிறோம். வேறு எதற்காக இல்லாவிட்டாலும், தைவானின் அனுபவத்தைத் தெரிந்துகொள்வதற்காகவாவது உலக சுகாதார நிறுவனப் பேரவையின் கூட்டத்துக்கு தைவான் பாா்வையாளராக அழைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தியா அதற்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com