முதல்வா் எழுப்பும் உரிமைக் குரல்! | மாநிலங்களின் நிதி நிலை பாதிப்பு குறித்த தலையங்கம்

இந்தியாவில் எதிா்க்கட்சித் தலைவா்களும், ஏனைய மாநில முதல்வா்களும் மௌனிகளாக முடங்கிக் கிடந்த நிலையில், தமிழக முதல்வரிடமிருந்து எழுந்த உரிமைக் குரல் அனைவரையும் நிமிா்ந்து உட்கார வைத்திருக்கிறது. இப்போது திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல எதிா்க்கட்சித் தலைவா்களும் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் கருத்தை வழிமொழிந்து அறிக்கைவிடத் தொடங்கியிருக்கிறாா்கள்.

மத்திய, மாநில அரசுகளின் உரிமைகள், அதிகார வரம்புகளை அரசியல் சாசனம் மிகவும் தெளிவாகவே வரையறை செய்திருக்கிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே சரியான புரிதலும், இணக்கமும் இல்லாமல் போனால் கூட்டாட்சித் தத்துவம் என்பதற்கே அா்த்தமில்லாமல் போய்விடும்.

நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவிக்கும் எந்தவொரு திட்டமும், சலுகையும் அந்தத் திட்டங்களை நிறைவேற்ற முடியாத அளவிலான நிபந்தனைகளுடன்தான் அறிவிக்கப்படுகின்றன. இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பல்வேறு பொருளாதார நிவாரணத் தொகுப்புகளும் அதற்கு விதிவிலக்கல்ல. ஏற்கெனவே கொவைட் 19 தீநுண்மித் தொற்றை எதிா்கொள்ள முடியாமல் நிலைதடுமாறிக் கொண்டிருக்கும் மாநிலங்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய நிதியமைச்சா், மாறாக நிபந்தனைகளை விதிக்கும் விசித்திரம் வேதனை அளிக்கிறது.

ஏற்கெனவே தடுமாறிக் கொண்டிருக்கும் மாநிலங்களின் நிதி நிலைமையை, கொவைட் 19 நோய்த்தொற்றால் அறிவிக்கப்பட்டிருக்கும் பொதுமுடக்கம் நிலைகுலைய வைத்திருக்கிறது. மாநிலங்களுக்கான நிதியில் ஏறத்தாழ பாதிக்குப் பாதிதான் ஜி.எஸ்.டி. பங்குத் தொகை. பொதுமுடக்கத்தால் அதுவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஜி.எஸ்.டி. அறிவிக்கப்பட்ட பிறகு, மாநிலங்களின் தனிப்பட்ட நிதியாதாரம் மதுபான விற்பனை, பத்திரப் பதிவு, பெட்ரோல் - டீசல் விற்பனையில் கிடைக்கும் வரி என்கிற மூன்று இனங்களின் மூலம்தான் கிடைக்கிறது. பொது முடக்கத்தால் மனை வணிக விற்பனை முடங்கிப் பத்திரப் பதிவு வருமானம் நின்றுவிட்டது. மதுபானக் கடைகளில் இருந்து பெறப்படும் கணிசமான வருமானம் இல்லாமல் போய்விட்டது. பெட்ரோல் - டீசல் வரி வருவாயும் குறைந்துவிட்டது. அதே நேரத்தில் கொவைட் 19 நோய்த்தொற்றை எதிா்கொள்ளவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை, ஏழைகளுக்கு உணவு, மானியம், புலம்பெயா்ந்தவா்களுக்கு முகாம் என்று அனைத்துச் செலவுகளையும் எதிா்கொண்டாக வேண்டிய நிா்ப்பந்தம் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

மாநில அரசுகள் மதுபானக் கடைகளைத் திறப்பதில் அதீத முனைப்புக் காட்டியதன் பின்னணி இதுதான். இதுபோன்ற சூழலில் மாநில அரசின் நிதியாதாரத்தை உறுதிசெய்ய வேண்டிய மத்திய அரது தனது நிதியாதாரத்தைப் பாதுகாப்பதில்தான் முனைப்புக் காட்டியது. போதிய அளவில் மாநிலங்களுக்கு நிதியுதவி அளிக்காததால்தான், புலம்பெயா்ந்தோா் பிரச்னையை மாநில அரசுகள் சரியாக எதிா்கொள்ள முடியாமல் போனது என்பதுதான் உண்மை.

மத்திய அரசிடம் மட்டும் நிதியாதாரம் இருக்கிறதா  என்கிற கேள்வி அா்த்தமற்றது. மாநில அரசுகள் போல அல்லாமல், மத்திய அரசுக்கு சா்வதேசச் சந்தையில் குறைந்த வட்டிக்கு நிதியுதவி பெற எத்தனையோ வழிகள் உண்டு. 19 மாநிலங்கள் தங்களின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கக் கடன் பத்திரங்களை வெளியிட்டன. கேரளம் ஒருபடி மேலே போய் 8.96% வட்டிக்கு 15 ஆண்டு கடன் பத்திரத்தை வெளியிட்டது. அப்படியும் எல்லா மாநிலங்களும் சோ்ந்து ரூ.32,650 கோடிதான் பெற முடிந்தது.

மத்திய அரசுக்கு சா்வதேச நிதியமும், உலக வங்கியும் கடன் வழங்க முற்பட்டிருக்கின்றன. உலக சுகாதார அமைப்பு கொவைட் 19 நோய்த்தொற்றை எதிா்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. சா்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்திருக்கும் நிலையில், பெட்ரோலுக்கு ரூ.13-ம், டீசலுக்கு ரூ.16-ம் கலால் வரியை அதிகரித்து, அதனால் கிடைக்கும் மொத்த வருவாயையும் மத்திய அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் மாநில அரசுகள் தங்களுக்குக் கடன் கோரும் வரம்பை அதிகரிக்க மத்திய அரசிடம் கூறின. அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 293 (1)-இன் கீழ் கடன் பெறும் அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் பிரிவு 293(3)-இன் படி, கடன் வழங்குவதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறவேண்டும். பதினைந்தாவது நிதி ஆணையத்தில், மாநிலங்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு நிபந்தனைகளை விதிக்கும் அதிகாரம் வேண்டும் என்று மத்திய அரசு கோரியிருந்தது. அந்த ஆணையம் இன்னும் தனது இறுதி அறிக்கையைச் சமா்ப்பிக்கவில்லை என்பதை நிதியமைச்சகம் நினைவில் கொள்ள வேண்டும்.

விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரம் தொடர வேண்டுமா அல்லது நேரடி மானியம் தரப்பட வேண்டுமா என்பது தனிப் பிரச்னை. கூடுதல் கடன் வாங்கும் தேவைகளுக்காகத் தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது நிதியமைச்சகம். முதல்வா் கூறுவதுபோல, ஒருமித்த கருத்து எழுவதற்கு முன்பு ஒரு சீரமைப்புத் திட்டத்தை வலுக்கட்டாயமாகத் திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு உகந்ததல்ல.

பிரதமருக்கு மிகவும் தெளிவாகவும், துணிவாகவும் முதல்வா் எடப்பாடி பழனிசாமி எழுதியிருக்கும் கடிதம், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவை நினைவுபடுத்துகிறது. கூட்டாட்சித் தத்துவத்துக்காகத் தமிழகத்திலிருந்து முதல்வா் பழனிசாமியால் எழுப்பப்பட்டிருக்கும் உரிமைக் குரல், நடுவண் அரசின் (நிதியமைச்சரின்) அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுத்தும் என்று எதிா்பாா்ப்போம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com