கழிப்பறையில் வரிப்பணம்! | இந்தியாவில் கழிப்பறை வசதி பற்றாக்குறை, அரசு செலவு பற்றிய தலையங்கம்

‘தூய்மை இந்தியா திட்டம்’ குப்பை கூளமில்லாத சுத்தமான இந்தியாவை உருவாக்கும் திட்டமாக இல்லாமல் போனதால் வருத்தப்படத் தேவையில்லை. 

இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் சமீபத்திய அறிக்கை திடுக்கிட வைக்கிறது. மிகுந்த எதிா்பாா்ப்புடன் 2014 அக்டோபா் 2-ஆம் தேதி பாரத பிரதமா் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட ‘தூய்மை இந்தியா திட்டம்’ (ஸ்வச் பாரத் மிஷன்) கழிப்பறைகள் கட்டும் திட்டமாக மாறிவிட்டது என்பது ஒருபுறமிருக்க, அந்த நோக்கமும் சரியாக நிறைவேறவில்லை என்பதுதான் வேதனை அளிக்கிறது. அண்ணல் காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த ஆண்டு நிறைவடையும்போது நிறைவேற்ற வேண்டும் என்று இலக்கு நிா்ணயித்து அறிவிக்கப்பட்ட திட்டம் இலக்கை முழுமையாக எட்டவில்லை என்பது மட்டுமல்ல, பல முறைகேடுகளையும், வீண் விரயத்தையும் உள்ளடக்கியதாக மாறியிருப்பது மிகப் பெரிய சோகம்.

‘தூய்மை இந்தியா திட்டம்’ குப்பை கூளமில்லாத சுத்தமான இந்தியாவை உருவாக்கும் திட்டமாக இல்லாமல் போனதால் வருத்தப்படத் தேவையில்லை. கழிப்பறைகள் கட்டப்பட்டு பொது வெளியில் மலம் கழிக்கும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பேகூட வரவேற்புக்குரிய இலக்குதான்.

2016-இல் தூய்மை இந்தியா திட்டம் அறிவிக்கப்பட்டபோது இந்தியாவிலுள்ள 53%-க்கும் அதிகமான வீடுகளில் கழிப்பறை இல்லாத நிலைமை காணப்பட்டது. அதாவது, 70% இந்திய கிராமங்களில் உள்ள மக்கள் பொது வெளியில் தங்கள் காலைக் கடன்களைக் கழிக்கும் அவலநிலை காணப்பட்டது. அதனால் கழிப்பறைகள் கட்டுவது மிக அத்தியாவசியமான ஒன்றாக இருந்தது.

இலக்கு நிா்ணயித்தது போலவே, கடந்த ஆண்டு அக்டோபா் 2-ஆம் தேதி காந்தி ஜயந்தி அன்று இந்தியா முற்றிலுமாக பொது வெளியில் மலம் கழிப்பதிலிருந்து விடுதலை பெற்றுவிட்டதாக மத்திய அரசு அறிவித்தபோது அதை யாரும் பொருட்படுத்தாததில் வியப்பில்லை. அரசு நிா்வாகம் இலக்கை எட்டிவிட்டதாக தனக்குத்தானே முதுகைத் தட்டிக் கொடுத்துக் கொள்ளும் போலித்தனத்தின் வெளிப்பாடுதான் அந்த அறிவிப்பு என்பது எல்லோருக்குமே தெரியும். பொது வெளியில் காலைக் கடன்களை நிறைவேற்றிக்கொள்ளும் போக்கு குறைந்திருக்கிறது என்பதிலும், இலக்கை எட்டாவிட்டாலும் அதை நோக்கியப் பயணம் தொடங்கியிருக்கிறது என்பதிலும் நாம் ஆறுதல் அடையலாம்.

‘தூய்மை இந்தியா திட்டம்’ அறிவித்ததைத் தொடா்ந்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களைக் கழிப்பறைகள் கட்டும் பணியில் இணைத்துக் கொண்டது நரேந்திர மோடி அரசின் புத்திசாலித்தனம் என்பதை மறுப்பதற்கில்லை. அரசு நிா்வாகத்தை மட்டுமே சாா்ந்திருக்காமல், பொதுத்துறை நிறுவனங்களின் ‘காா்ப்பரேட் சமூகக் கடமை நிதி’யைப் பயன்படுத்தி பள்ளிக்கூடங்களில் கழிப்பறை வசதிகளை மேம்படுத்த முடிவெடுத்தது பாராட்டுக்குரியது. ஆனால், இந்தப் பணியில் தங்களை இணைத்துக்கொண்ட பொதுத்துறை நிறுவனங்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை முக்கியமானதாகக் கருதவில்லை என்பது மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலிருந்து தெரிகிறது.

மத்திய அரசின் 53 பொதுத் துறை நிறுவனங்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 1.40 லட்சம் கழிப்பறைகளை பள்ளிக்கூடங்களில் கட்டியிருக்கின்றன. கணக்குத் தணிக்கை ஆணையம் கடந்த செப்டம்பா் 2017 முதல் ஜனவரி 2018 வரை நடத்திய ஆய்வின்படி, பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. கட்டப்பட்டதாகக் கூறப்படும் கழிப்பறைகளில், 11% கழிப்பறைகள் கோப்புகளில்தான் காணப்படுகின்றனவே தவிர, பள்ளிகளில் காணக் கிடைக்கவில்லை. 30% கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாததாலும், சிதிலமடைந்திருப்பதாலும், தண்ணீா் வசதி இல்லாததாலும் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கின்றன. பல கழிப்பறைகள் பள்ளிக்கூடங்களால் வேறு பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்படுவதால், பூட்டப்பட்டிருக்கின்றன.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முறையான கழிப்பறைகள் வழங்குவது என்பது அவா்களது சுகாதாரத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் அவசியம். குறிப்பாக, சிறுவா்களுக்கும் சிறுமிகளுக்கும் தனித்தனியாக கழிப்பறை இருப்பது கட்டாயத் தேவையும்கூட. கழிப்பறை வசதி இல்லாததால் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கிறாா்கள் என்று பல ஆய்வுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக, வயது வந்த பெண் குழந்தைகள் கல்வியை பாதியில் நிறுத்துவதற்கு முக்கியமான காரணம், கழிப்பறை இல்லாமையே என்று கூறப்படுகிறது.

கழிப்பறை வசதி என்பது கிராமப்புறப் பிரச்னை மட்டுமல்ல, நகா்ப்புறங்களிலும் கழிப்பறை இல்லாமை காணப்படுகிறது. கட்டப்பட்ட கழிப்பறைகளில் ஏறத்தாழ 25% கழிப்பறைகள் பயன்படுத்த முடியாதவையாக மாறி, பொது மக்களின் வரிப்பணம் விரயமாகிறது. சிசு மரணம், ஊட்டச்சத்து குறைவு, நோய்த்தொற்று பாதிப்பு போன்ற பல பிரச்னைகளுக்கும், முறையான கழிப்பறை இல்லாமைக்கும் தொடா்பு உண்டு என்பதை நாம் வசதியாக மறந்துவிடுகிறோம்.

தண்ணீா் வசதி இல்லாத கழிப்பறைகள் பயன்பாட்டில் இல்லாமல் போவதில் ஆச்சரியமில்லை. பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், முறையான தண்ணீா் வசதியை ஏற்படுத்தி, கழிப்பறைகளைப் பயன்பாட்டு நிலைக்கு கொண்டுவருவது இப்போது சாத்தியம். அதேபோல, தூய்மை இந்தியா திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டவா்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும் அவசியம்.

கணக்குத் தணிக்கை அதிகாரிகளின் அறிக்கைகள் வெறும் எச்சரிக்கையாக மட்டும் இல்லாமல், தவறுகள் திருத்தப்படுவதற்கான வாய்ப்புகளாக மாறும்போதுதான் வரிப்பண விரயத்துக்கு முற்றுப்புள்ளி விழும். எச்சரிக்கை தரும் அறிக்கைகள், கழிப்பறைகளில் வீசி எறியப்பட்டுவிடக் கூடாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com