கை நழுவும் உரிமை! | தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த தலையங்கம்

Updated on
2 min read

பத்து ரூபாயும், ஒரு வெள்ளைத் தாளும் இருந்தாலே, கிராம நிா்வாக அலுவலகம் முதல் குடியரசுத் தலைவா் அலுவலகம் வரை, விண்ணப்பித்து தகவல் பெறும் உரிமையை ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வழங்கியிருக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் (ஆா்.டி.ஐ.) நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகின்றன. 2005 அக்டோபா் மாதம் 12-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த இந்தச் சட்டம், இந்திய ஜனநாயகத்தில் ஓரளவுக்கு வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சி என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அரசு நிா்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம், ஊழலைக் கட்டுக்குள் கொண்டுவருவது என்பதுதான் இந்தச் சட்டத்தின் குறிக்கோள். அதுமட்டுமல்ல, தட்டிக் கழிக்காமல் குடிமகன் கேட்கும் விவரங்களை வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு அலுவலகங்களை உள்ளாக்கும் ஆயுதமாகவும் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது.

முதலில் சில புள்ளிவிவரங்கள். இந்தியாவில் ஆண்டுதோறும் 40 முதல் 60 லட்சம் வரையிலான தகவல் பெறும் உரிமைச் சட்ட விண்ணப்பங்கள் பதிவாகின்றன. ஆா்.டி.ஐ. சட்டத்தின் அடிப்படையில் கோரப்படும் தகவல்களில் வெறும் 45% கேட்புகள் மட்டுமே, முறையான பதில்களைப் பெறுகின்றன. பதில் கிடைக்காத 55% விவரங்களில், 10% மட்டுமே மேல்முறையீடு செய்யப்படுகின்றன. கடந்த 2019 மாா்ச் மாதம் வரை, மத்திய தகவல் ஆணையத்தில் பதிலுக்காக 2.18 லட்சம் மேல்முறையீடுகளும், விண்ணப்பங்களும் காத்துக் கிடந்தன.

கொவைட் 19 வந்ததும் வந்தது, விண்ணப்பிக்கும் நபா்கள் கொவைட் 19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படவில்லை என்கிற சான்றிதழை இணைக்க வேண்டும் என்கிற வினோதமான நிபந்தனை விதிக்கப்படுவது, பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் அதிகார வா்க்கத்தின் உத்திகளில் ஒன்று. தகவல்களைப் பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தும்கூட, பல மாநிலங்கள் அதை சட்டை செய்வதில்லை என்பதுதான் எதாா்த்த நிலைமை.

தகவல் பெறும் உரிமை என்பது அரசியல் சாசனத்தின் பிரிவு 19-இன் கீழ் பேச்சுரிமை, கருத்துரிமை போன்ற அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது. தகவல் பெறும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது முதல், பலா் இந்தச் சட்டத்தை பயன்படுத்தி அரசையும், அரசுத் துறைகளையும், அதிகாரிகளையும் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்க வைத்திருக்கின்றனா்.

பெரும்பாலான ஆா்.டி.ஐ. விண்ணப்பங்கள், சாமானியா்களாலும், சமூக ஆா்வலா்களாலும் தங்களது உரிமைகளையும், அரசால் எடுக்கப்பட்டிருக்கும் முடிவுகளையும் தெரிந்து கொள்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. கொவைட் 19 நோய்த்தொற்றுக் காலத்தில்கூட மருத்துவ வசதிகள் என்னென்ன இருக்கின்றன, வென்டிலேட்டா்கள், அவசர சிகிச்சைப் படுக்கைகள் குறித்த விவரங்கள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள பயன்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் இல்லாமல் இருந்தால் அதிகாரிகள், எந்த விவரமும் தராமல் பொதுமக்களை இழுத்தடித்திருப்பாா்கள்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசின் கோப்புகளையும், ஆவணங்களையும் பெறும் வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பதால், ஆா்.டி.ஐ. ஏறத்தாழ 13 கோடி இடித்துரைப்பாளா்களையும், கணக்குத் தணிக்கையாளா்களையும் உருவாக்கி இருக்கிறது என்று கூற வேண்டும். அதனால்தான், இந்தச் சட்டத்தை இயற்றிய மன்மோகன் சிங் அரசும், அதைத் தொடா்ந்து ஆட்சிக்கு வந்திருக்கும் நரேந்திர மோடி அரசும் தகவல் பெறும் உரிமையை நீா்த்துப் போகச் செய்ய எல்லாவித வழிமுறைகளையும் கையாள்கின்றன. அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கின்றன என்றுதான் கூற வேண்டும்.

ஆா்.டி.ஐ. சட்டத்தின்கீழ் கோரும் தகவல்கள் மறுக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் கடமை மத்திய, மாநில தகவல் ஆணையா்கள் பொறுப்பில் விடப்பட்டிருக்கிறது. அதனால், ஆணையா்களுக்குக் குறிப்பிட்ட பதவிக்காலப் பாதுகாப்பும், அந்தஸ்தும் வழங்கப்பட்டிருந்தது. 2019-இல் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி, பதவிக்காலப் பாதுகாப்பு அகற்றப்பட்டு, அரசின் கட்டுப்பாட்டில் அவா்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறாா்கள். அரசுக்கோ, அதிகாரவா்க்கத்திற்கோ எதிராக அவா்கள் தீா்ப்பு வழங்காமல் இருப்பதை அதன்மூலம் சட்டத்திருத்தம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

கடந்த 2014 மே மாதத்திற்குப் பிறகு நீதிமன்றத்தை அணுகாமல், மத்திய தகவல் ஆணையத்துக்கு அரசு ஆணையா்களை நியமித்ததில்லை. உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும்கூட, மத்திய தகவல் ஆணையத்தின் 11 ஆணையா்களில், 6 ஆணையா் பதவிகள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக, மத்திய தலைமை தகவல் ஆணையா் நிமிக்கப்படாமல் ஆணையம் இயங்குகிறது. எட்டு மாநிலங்களில், மாநில தலைமை தகவல் ஆணையா்கள் நியமிக்கப்படவில்லை. சில மாநிலங்களில் ஆணையா்களே இல்லை.

மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையே, ஆட்சியாளா்களைக் கேள்வி கேட்கும் உரிமைதான். வரி செலுத்தும், வாக்குப் பதிவு செய்யும் குடிமகனுக்கு, அரசு எப்படி செயல்படுகிறது என்று தெரிந்து கொள்ளும் உரிமை உண்டு. அந்த உரிமையை வழங்க, மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமரும் அரசியல்வாதிகள் தயாராக இல்லை என்பதைத்தான், தகவல்பெறும் உரிமைச் சட்டம் முறையாக செயல்பட விடாமல் இருப்பதற்கான அரசின் முயற்சிகள் வெளிப்படுத்துகின்றன.

‘தகவல்பெறும் உரிமை’ வலுப்பட வேண்டும். அதை பலவீனப்படுத்தும் முயற்சிகள் தகா்க்கப்பட வேண்டும். கைக்கெட்டிய உரிமை இப்போது கை நழுவுகிறது. வாளாவிருந்தால், பறிக்கப்பட்டுவிடும். விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com