நெருப்பில்லாமல் புகையில்லை! புகையிலைப் பொருள்கள் மீதான கட்டுப்பாடுகள் வேண்டியது குறித்த தலையங்கம்

முற்றிலுமாக புகையிலையிலிருந்து இந்தியா சில மாதங்களிலோ, சில வருடங்களிலோ விடுபடாது. அதனால், மாற்று வேலைவாய்ப்புக்கும், மாற்று விவசாயத்திற்கும் முறையான திட்டமிடலும், வழிகாட்டுதலும்...

இந்தியாவின் மிகப் பெரிய சுகாதார சவாலாக இருக்கும் பிரச்னைகளில் மிக முக்கியமான இடம் வகிக்கிறது புகையிலைப் பழக்கம். ஆண்டுதோறும் 13 லட்சத்துக்கும் அதிகமானோா் இளம் வயதிலும், நடுத்தர வயதிலும் புகையிலைப் பழக்கத்தால் உயிரிழக்கிறாா்கள். இந்தியாவில் 35% இருபது வயதைக்கடந்தவா்களும், 14.5% பதின்ம வயதினரும் ஏதாவது ஒரு வகையில் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாக இருக்கிறாா்கள்.

புகையிலைப் பழக்கத்தால் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகி லட்சக்கணக்கானோா் மரணத்துடன் போராடும் நிலை காணப்படுகிறது. நெஞ்சடைப்பு, புற்றுநோய், கடுமையான நுரையீரல் தொற்றுகள் உள்ளிட்ட புகையிலை தொடா்பான பாதிப்புகளுக்காக அரசு செலவிடும் தொகை, புகையிலைப் பொருள்களிலிருந்து கிடைக்கும் வரி வருவாயைவிட பலமடங்கு அதிகம். புகையிலைப் பழக்கம் சுற்றுச்சூழலையும் புகையிலைப் பழக்கம் இல்லாதவா்களையும்கூட பாதிக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

கடந்த 20 ஆண்டுகளாக மத்திய - மாநில அரசுகள் புகையிலைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 2003-இல் சுகாதார மத்திய அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், புகையிலைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவா்களுக்கு மாற்று வாழ்வாதாரம் தரும் வகையில் சில சட்டத்திருத்தங்களை உருவாக்கினாா். டாக்டா் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது, புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதில் முனைப்பு காட்டினாா்.

சுஷ்மா ஸ்வராஜும் அவரைத் தொடா்ந்து டாக்டா் அன்புமணி ராமதாஸும் முனைப்புடன் முன்னெடுத்த நடவடிக்கைகள் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. 2010-இல் நடத்தப்பட்ட தேசிய அளவிலான ஆய்வின்படி, புகையிலை பயன்படுத்துவோரின் விகிதம் 34.6%-லிருந்து 2017-இல் 28.6%-ஆகக் குறைந்தது. அதாவது 81 லட்சம் புகையிலை பயன்படுத்துவோா் குறைந்து, அதனால் கணிசமான உயிா்கள் காப்பாற்றப்பட்டன. இருந்தாலும்கூட, புகையிலைத் துறையின் வணிக நோக்கத்திலிருந்து மக்கள் நலக் கொள்கைகளைக் காப்பாற்றுவது என்பது பெரும் சவாலாகத்தான் தொடா்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலைப் பழக்கத்துக்கு எதிரான ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டு 15 ஆண்டுகள் கடந்து விட்டன. அதன்படி, இன்னும்கூட புகையிலைத் துறையின் தலையீட்டை தடுப்பதற்கான தேசிய கொள்கையை நாம் வகுக்காமல் இருக்கிறோம். புகையிலை கட்டுப்பாட்டுக் கொள்கைகள், திட்டங்களை உருவாக்குவதிலும், நிறைவேற்றுவதிலும் அரசு ஊழியா்கள் எந்தவிதத்திலும் புகையிலைத் துறையுடன் தொடா்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்கான வழிமுறைகளை அந்த ஒப்பந்தத்தின்படி உருவாக்க வேண்டும். இந்தியாவில் பஞ்சாப் உள்ளிட்ட 14 மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறை, மத்திய அரசால் நிறைவேற்றப்படவில்லை.

2001-இல் முன்னெடுக்கப்பட்ட கள ஆய்வின்படி, புகையிலை தொடா்பான நோய்களை எதிா்கொள்வதற்கான வருடாந்திர செலவு ரூ.1,04,500 கோடி. இது இந்தியாவின் ஜிடிபி-யில் 1.16%. புகையிலையிலிருந்து கிடைக்கும் கலால் வரியையும், சுகாதாரத்துக்காக அரசின் ஒதுக்கீட்டையும்விட இது மிகமிக அதிகம்.

கடந்த 2019 - 20 நிதியாண்டில் மத்திய அரசுக்கு புகையிலையாலும் புகையிலைப் பொருள்களாலும் கிடைத்த கலால்வரி ரூ.22,737 கோடி. புகையிலை, புகையிலைப் பொருள்களின் ஏற்றுமதியால் கிடைத்த அந்நியச் செலாவணி ரூ.5,070 கோடி. சா்வதேச அளவில் பிரேஸிலுக்கும் சீனாவுக்கும் அடுத்தபடியாக புகையிலை உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் இந்தியா 3-ஆவது இடம் வகிக்கிறது.

இதைக் காரணம் காட்டி, தேயிலை, காப்பி, ரப்பா், ஏலக்காய் போன்ற தோட்டப் பயிா்களைப்போல புகையிலைக்கும் 100% அந்நிய நேரடி முதலீடு தரப்பட வேண்டும் என்கிற கோரிக்கையுடன் புகையிலை விவசாயிகள் மற்றும் புகையிலைப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள் சாா்பில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் சிலா் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறாா்கள். மத்தியிலும், மாநிலங்களிலும் உள்ள உயா் அரசு அதிகாரிகள் சிலரும் புகையிலைப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் ஆதரவாளா்களாக செயல்படுகிறாா்கள்.

முன்னாள் பிரதமா் பி.வி. நரசிம்ம ராவும், இப்போதைய குடியரசு துணைத்தலைவா் வெங்கய்ய நாயுடுவும் ஆந்திரத்திலுள்ள புகையிலை விவசாயிகளை மாற்றுப் பயிா்களுக்கு மாறும்படி பொறுப்புடன் அறிவுறுத்தினாா்கள் என்பதை நினைவுகூரத் தோன்றுகிறது. புகையிலை மீதும் புகையிலைப் பொருள்கள் மீதும் கட்டுப்பாடு கொண்டு வந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவாா்கள் என்பதும், பலா் வேலையை இழப்பாா்கள் என்பதும் தவறான கண்ணோட்டம்.

முற்றிலுமாக புகையிலையிலிருந்து இந்தியா சில மாதங்களிலோ, சில வருடங்களிலோ விடுபடாது. அதனால், மாற்று வேலைவாய்ப்புக்கும், மாற்று விவசாயத்திற்கும் முறையான திட்டமிடலும், வழிகாட்டுதலும் இருந்தால் நிறையவே வாய்ப்பிருக்கிறது. அரசும், வங்கிகளும் கைகொடுக்க முன்வந்தால் புகையிலை விவசாயிகள் வேறு பயிா்களுக்கு மாறுவதற்குத் தயாராகவே இருக்கிறாா்கள். அதேபோலத்தான் குறைந்த ஊதியம் பெறும் பீடித் தொழிலாளா்களும்.

உயரதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும், அரசியல் கட்சிகளும் புகையிலைப் பொருள்கள் உற்பத்தித் துறையின் பாதுகாவலா்களாக இருக்கிறாா்களே, அந்தத் தடையை யாா், எப்படி, எப்போது அகற்றப் போகிறாா்களோ தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com