இனி, பொம்மை அரசு! | கர்நாடகத்தின் புதிய முதல்வர் குறித்த தலையங்கம்

 ஜனதா தளத்தின் மூத்த தலைவராகவும், முன்னாள் முதல்வராகவும் இருந்த எஸ்.ஆர். பொம்மையின் மகன் பசவராஜ் சோமப்ப பொம்மை, கர்நாடகத்தின் புதிய முதல்வராக இன்று பதவியேற்க இருக்கிறார். முதல்வர் பதவியிலிருந்து 78 வயதான பி.எஸ். எடியூரப்பா தானே முன்வந்து விலகியிருப்பது அந்த மாநில அரசியலில் புதியதொரு அத்தியாயம் தொடங்க இருப்பதற்கான அறிகுறி.
 எடியூரப்பாவின் பதவி விலகலும், அவருக்குப் பதிலாக பசவராஜ் பொம்மை நியமிக்கப்பட்டிருப்பதும் பாஜக மேலிடத்தின் திட்டமிட்ட நகர்வு என்றுதான் தெரிகிறது. எடியூரப்பா பதவியிலிருந்து அகற்றப்படுவதற்கு லிங்காயத் சமுதாய அமைப்புகளும், அவர்களது தலைமை மத ஆச்சார்யரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். லிங்காயத் தலைவர்களில் ஒருவரான பசவராஜ் பொம்மை முதல்வராக நியமிக்கப்பட்டிருப்பதால், எடியூரப்பா சார்ந்த லிங்காயத் சமுதாயத்தின் அதிருப்தியையும், கோபத்தையும் பாஜக எதிர்கொள்ளாது என்பது மேலிடத்தின் எதிர்பார்ப்பு.
 இந்தியாவின், குறிப்பாக தென்னகத்தின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவராக எடியூரப்பா இருந்து வந்திருக்கிறார். விந்திய மலைக்குக் கீழே பாரதிய ஜனதா கட்சிக்கு நுழைவாயில் அமைத்துக் கொடுத்து, கர்நாடக மாநிலத்தில் ஆட்சியையும் கைப்பற்ற அவரது அரசியல் சாதுரியம்தான் காரணம்.
 தனது கல்லூரி நாள்களிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்துவிட்ட எடியூரப்பாவின் பொது வாழ்க்கை, ஷிக்காரிபுரா பகுதியின் ஆர்எஸ்எஸ் செயலாளராக 1970-இல் நியமிக்கப்பட்டதிலிருந்து தொடங்குகிறது. 1983-இல் முதன்முறையாக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடியூரப்பாவின் அரசியல் பயணம், ஆரம்பம் முதலே கரடுமுரடாகத்தான் இருந்து வந்திருக்கிறது.
 கர்நாடக மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக பாஜக-வை உருவாக்கிய எடியூரப்பா, ஒவ்வொரு முறையும் பல சவால்களுக்கு இடையேதான் முதல்வராகி இருக்கிறார். 2008 முதல் இதுவரை நான்கு முறை கர்நாடகத்தின் முதல்வராக எடியூரப்பா பதவி வகித்திருந்தாலும், ஒவ்வொரு முறையும் ஏதாவதொரு பிரச்னையில் சிக்கி அல்லது மேலிடத்தின் அதிருப்தி காரணமாக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்ய முடியாமல் விலகியிருக்கிறார். அந்தப் பட்டியலில் இப்போதைய பதவி விலகலும் அடங்கும்.
 பிரதமர் மோடி - அமித் ஷா தலைமையின் முழு சம்மதத்துடன் இந்த முறை அவர் முதல்வராகவில்லை. 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலம் பெற முடியாத நிலையில், எடியூரப்பாவின் ராஜதந்திரமும், செல்வாக்கும்தான் ஆட்சியைக் கைப்பற்ற அடித்தளம் வகுத்தன. காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி மீதான அதிருப்தி எம்எல்ஏ-க்களின் உதவியுடன், 2019-இல் எடியூரப்பா பெரும்பான்மை பலத்தை ஏற்படுத்தியபோதும்கூட, அவரை முதல்வராக அறிவிப்பதற்கு பாஜக மேலிடம் தயக்கம் காட்டியது.
 முதல்வர் பதவி கைநழுவி விடுமோ என்கிற அச்சம், மேலிடத்தின் அனுமதி பெறாமலே ஆளுநரை சந்திக்க அவரைத் தூண்டியது. வேறு வழியில்லாமல் எடியூரப்பாவை முதல்வராக ஏற்றுக்கொண்டபோதே, அவருக்கு மேலிடம் இரண்டாண்டு கெடு விதித்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.
 பாஜகவானாலும், காங்கிரஸானாலும் மாநிலத் தலைமை வலிமையாக இருப்பதை தேசிய கட்சிகள் விரும்புவதில்லை என்பது 1969-க்குப் பிறகு, அதாவது காங்கிரஸ் பிளவுபட்டதற்கு பிறகு காணப்படும் போக்கு. குறிப்பாக, தென்னிந்தியாவில் காமராஜர், சஞ்சீவ ரெட்டி, நிஜலிங்கப்பா போன்ற செல்வாக்குள்ள தலைவர்கள் உருவாகிவிடக் கூடாது என்பதற்கு அடித்தளமிட்டது அன்றைய இந்திரா காந்தி தலைமை. ராமகிருஷ்ண ஹெக்டே, அஞ்சையா, சரத் பவார், அர்ஜுன் சிங், ராஜசேகர் ரெட்டி என்று மேலிடத்தின் இந்தக் கண்ணோட்டத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத் தலைவர்கள் ஏராளம்.
 உத்தரகண்டில் நான்கு மாத இடைவெளியில் இரண்டு முதல்வர்களை பாஜக தலைமை மாற்றியது. பஞ்சாபில் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் செல்வாக்குக்கு கடிவாளம் போடும் விதத்தில், அவரது அரசியல் எதிரியான நவ்ஜோத் சிங் சித்துவை மாநிலத் தலைவராக காங்கிரஸ் நியமித்ததும்கூட தேசிய தலைமைகளின் கண்ணோட்டத்தின் எடுத்துக்காட்டு. அந்த வரிசையில் இணைகிறார் இப்போது பதவி விலகி இருக்கும் எடியூரப்பா.
 ஆர்எஸ்எஸ் பின்னணியுடன் கூடிய லிங்காயத் சமுதாயத்தின் அசைக்க முடியாத அரசியல் தலைவராக இருந்தாலும்கூட, எடியூரப்பாவின் அணுகுமுறை வித்தியாசமானது. அனைத்து மதத்தினர், ஜாதிப் பிரிவினரின் நன்மதிப்பைப் பெற்றிருந்தவர் அவர். எந்தவொரு சமுதாயப் பிரிவும் அவரை விரோதியாகப் பார்க்கவில்லை என்பது மட்டுமல்ல, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு தனது மதத்தையோ, ஜாதியையோ அவர் பயன்படுத்தியதில்லை. துவேஷ அரசியல் எடியூரப்பாவுக்கு எப்போதும் இருந்ததே கிடையாது. அவருக்கு துரோகம் இழைத்தவர்களிடம்கூட அவர் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துகொண்டதில்லை என்பதை மாற்றுக் கட்சியினரும்கூட ஒப்புக்கொள்வார்கள்.
 காங்கிரஸ் - மஜத-வில் இருந்து விலகி பாஜக அரசு அமையக் காரணமாக இருந்தவர்களை புதிய முதல்வர் பசவராஜ் பொம்மை எப்படி நடத்தப்போகிறார் என்பதைப் பொருத்து, பாஜக அரசின் ஸ்திரத்தன்மை அமையும். பதவியிலிருந்து விலகினாலும் கர்நாடக அரசியலில் எடியூரப்பாவின் இன்றியமையாமையை அகற்றிவிட முடியாது. ஆளுநர் பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார் எடியூரப்பா. அடுத்தது என்ன?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com