அணுகுமுறை மாற வேண்டும்! | மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் குறித்த தலையங்கம்

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் - சுக்மா மாவட்ட எல்லைப் பகுதியில் நக்ஸல்களுடன் நடைபெற்ற மோதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 21 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 33 பேர் காயமடைந்தனர். இந்த நிகழ்வு நாடு தழுவிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தில் இதுபோல பாதுகாப்புப் படையினருக்கு எதிராக மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்துவது புதிதொன்றுமல்ல. 2010 ஏப்ரல் மாதம் 76 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்ததுதான் மிகப்பெரிய தாக்குதல். 2019 மே மாதம் மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகளால் திட்டமிடப்பட்ட குண்டுவெடிப்பில் 15 காவல் துறையினர் உயிரிழந்தனர். கடந்த மாதம் 23-ஆம் தேதி சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் சென்று கொண்டிருந்த வாகனம் மாவோயிஸ்ட்டுகளால் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளானது. இதுவரை மாவோயிஸ்ட் தாக்குதல்களில் இந்தியாவில் 12,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 2,700-க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் பலியாகியிருக்கிறார்கள்.
இப்போது நிகழ்ந்திருக்கும் நக்ஸல்களுடனான மோதல், பாதுகாப்புப் படையினரின் உளவுத் துறை எந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. நக்ஸல்கள் விரித்த வலையில் பாதுகாப்புப் படையினர் வலியப்போய் மாட்டிக் கொண்டார்கள் என்பது வேதனைக்குரிய உண்மை. 
பஸ்தர் வனப் பகுதியில் நக்ஸல்கள் பயிற்சியில் ஈடுபடப்போவதாகவும் அந்த நிகழ்வில் மக்கள் விடுதலை கொரில்லா படையின் தலைவர் மாட்வி ஹிட்மாவும் அவரது கூட்டாளி சுஜாதாவும் கலந்துகொள்வதாகவும் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் இருவரும் தேகல்கூடா-ஜோனகூடா பகுதியில் இருப்பதாகவும் தகவல் வந்தது. பாதுகாப்புப் படையினருக்கு இந்தப் பொய்த்  தகவல் திட்டமிட்டு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. 
அவர்களை வளைத்துப் பிடிக்க சிஆர்பிஎப் வீரர்கள், மாவட்ட ஆயுதக் காவல் படை, சிறப்பு அதிரடிப் படை உள்ளிட்ட 1,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் களமிறக்கப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து 2 கி.மீ. தூரத்துக்குள் இந்தத் தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியளிக்கிறது. 
உயரமான பகுதிகளில் உள்ள முக்கியமான தளங்களில் நக்ஸல்கள் தயாராகக் காத்திருந்தனர். இதுபோன்ற தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பள்ளத்தாக்கு பகுதி வழியாகச் செல்லக்கூடாது என்பது பாதுகாப்புப்படைகளுக்கு வழங்கப்படும் பொதுவான விதிமுறை. அதைக் கடைப்பிடிக்காமல் அவர்கள் பயணித்தபோது உயரமான பகுதிகளிலிருந்து நக்ஸல்கள் தாக்குதல் நிகழ்த்தினர்.
தாக்குதலில் சிக்கிக்கொண்ட படை வீரர்கள் பலர் அருகிலிருந்த கிராமத்து வீடுகளுக்குள் ஓடி ஒளிய முற்பட்டனர். முன்கூட்டிய ஏற்பாட்டின்படி, அந்த வீடுகளிலிருந்து பழங்குடியினர் நக்ஸல்களால் பாதுகாப்பான இடத்துக்கு அகற்றப்பட்டிருந்தனர். காலியாக இருந்த குடிசைகளில் அடைக்கலம் புகுந்த வீரர்களை நக்ஸல்கள் ஈவிரக்கமில்லாமல் சுட்டுக்கொன்றனர். 
பாதுகாப்புப் படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ராக்கெட்டுகள், ஏ.கே.47 இயந்திர துப்பாக்கிகள், கைக்குண்டுகள் ஆகியவற்றை பாதுகாப்புப் படையினருக்கு எதிராக நக்ஸல்கள் பிரயோகித்தது மட்டுமல்லாமல் தாக்குதலிலிருந்து தப்பித்து ஓடிய பாதுகாப்புப் படையினர் விட்டுச்சென்ற ஏராளமான ஆயுதங்களையும் வெடிகுண்டுகளையும் கைப்பற்றவும் செய்தனர். எல்லாமே நக்ஸல்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்பது தெளிவாகிறது. 
உளவுத் துறையின் தோல்வி அல்ல என்று அவசர அவசரமாக மத்திய பாதுகாப்புப்படைத் தலைவர் தெரிவித்திருப்பது நகைப்பை வரவழைக்கிறது. பஸ்தரில் நடந்த தாக்குதல் பல கேள்விகளை எழுப்புகிறது.  
நக்ஸல்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதற்கு ரகசியமாக திட்டமிடுவது அவசியம். கடந்த இரண்டு மூன்று வாரங்களாக ஹிட்மாவை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பதற்காக முக்கியமான அதிகாரிகள் பலர் ஹெலிகாப்டரில் வருவதும் போவதுமாக இருந்தது மாவோயிஸ்டுகளை தயார்படுத்தியிருக்க வேண்டும். அவர்கள் திட்டமிட்டு தாக்குதல் நடத்த காத்திருந்திருக்கிறார்கள். 
சுமார் 5 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்திருக்கிறது. அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினர் இருந்தும்கூட, தாக்குதல் நடந்த இடத்துக்கு அவர்கள் உடனடியாக வரவழைக்கப்படாதது ஆச்சரியமூட்டுகிறது. இதற்குப் பிறகும் தகவல் தொடர்பில் எந்தவிதக் குறைபாடும் இல்லையென்று காவல் துறைத் தலைவர் கூறுவது விசித்திரமாக இருக்கிறது. 
சத்தீஸ்கர் மாநிலத்தின் 27 மாவட்டங்களில் 14 மாவட்டங்கள் நக்ஸல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இதேபோல தாக்குதல்கள் நடப்பது  வழக்கமாக இருந்து வருகிறது. மலைவாழ் மக்கள் மத்தியிலும், ஏழை கிராமப்புற மக்கள் மத்தியிலும், பாதுகாப்புப் படையினரும் அரசும் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்பதை இந்தத் தாக்குதல்கள் தெளிவுபடுத்துகின்றன. 
ஆந்திரம், மகாராஷ்டிரம், ஒடிஸா மாநிலங்கள் அவர்களது மாநில புலனாய்வுத் துறையையும், காவல் துறையையும் பலப்படுத்தி நக்ஸல் பயங்கரவாதத்தை கட்டுக்குள் கொண்டுவந்திருப்பதுபோல, சத்தீஸ்கரும் தனது அணுகுமுறையை மாற்றினால் மட்டுமே இதற்குத் தீர்வு ஏற்படும். மத்திய பாதுகாப்புப் படையினரின் 20 ஆண்டு முயற்சிகள் தோல்வியடைந்திருப்பதை மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com