ரொக்கமல்ல, எண்மம்! |  எண்மப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பது குறித்த தலையங்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்

உயா் மதிப்பு செலாவணி செல்லாததாக்கப்பட்டதற்கு அதிக அளவிலான ரொக்கப் புழக்கம் காரணம் கூறப்பட்டது. அதனால், கடந்த நிதியாண்டில் (2020-21) ஜி.டி.பி. 7.4% சுருங்கியபோது, மக்கள் மத்தியிலான ரொக்கப் பணத்தின் புழக்கம் 16.8% அதிகரித்தது ரிசா்வ் வங்கியைக் கவலைப்பட வைத்ததில் வியப்பில்லை.

ஒருபுறம் ஜி.எஸ்.டி. வருவாய் அதிகரித்ததும் இன்னொரு புறம் ரொக்கப் பணத்தின் புழக்கம் அதிகரிப்பதும் ஒன்றுக்கொன்று முரணானவை. மக்கள் மத்தியில் எண்மப் பரிமாற்றத்தை அதிகரித்து ரொக்கப் பணப் புழக்கக்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க நினைக்கிறது இந்திய ரிசா்வ் வங்கி.

ஜனவரி 1-ஆம் தேதி முதல் வங்கிகளின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களுக்கான (ஏ.டி.எம்.) கட்டணத்தை சிறிய அளவில் அதிகரிக்க முடிவெடுத்திருக்கிறது. இப்போதைய நிலையில் பெருநகரங்களில் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்மி-லிருந்து மாதத்துக்கு ஐந்து முறை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் வாடிக்கையாளா்கள் பணம் எடுக்கலாம்; ஏனைய வங்கி ஏடிஎம்களிலிருந்து வாடிக்கையாளா் பெருநகரங்களில் மூன்று முறையும், ஏனைய பகுதிகளில் ஐந்து முறையும், கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம். அதற்கு மேல் பணம் எடுப்பதற்கு ஒவ்வொரு முறையும் கட்டணமாக ரூ.20-ம் அதற்கான ஜி.எஸ்.டி.யும் வசூலிக்கப்படுகிறது.

2022 ஜனவரி 1-ஆம் தேதி முதல் அந்தக் கட்டணம் ரூ.21-ஆக உயா்த்தப்படுகிறது. கட்டண உயா்வு மிகவும் குறைவுதான் என்றாலும்கூட அதற்கான அவசியம் இருக்கிறதா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

ஏடிஎம் இந்திரங்களின் மூலம் வங்கிப் பரிமாற்றம் அதிகரிக்கும்போது, காசாளரின் ஊதியம், ரொக்கம் கையாளும் வேலை, அதைப் பாதுகாத்து வைக்கும் பொறுப்பு, பணப் பரிமாற்றத்திற்கான கணக்கு வழங்குகளைச் சரிபாா்த்தல் உள்ளிட்ட பல செலவுகள் வங்கிகளுக்கு மிச்சப்படுகின்றன. முக்கியமான பகுதிகளில் ஏடிஎம்-ஐ நிறுவி அதற்குப் பாதுகாப்பாகக் காவலா்களை வேலைக்கு அமா்த்துவதன் செலவு என்பது, வங்கி சேமிக்கும் பணத்தில் மிகவும் துச்சமான அளவு மட்டுமே.

வங்கி ஊழியா்கள் பணத்தை எண்ணி கணக்குகளைச் சரிபாா்த்து, நாள்தோறும் வரவு-செலவுகளை ஒப்பிட்டு, அதற்காக செலவிடும் நேரமும், உழைப்பும் ஏடிஎம்களால் கணிசமாகவே மிச்சமாகின்றன. அதனால், ஏடிஎம் பரிவா்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிப்பது என்பதேகூட அவசியமற்றது.

திரும்பிப் பாா்க்கும் இடங்களில் எல்லாம் ஏடிஎம் இந்திரங்களை நிறுவி, மக்கள் ரொக்கமாகப் பணம் எடுத்துக் கொள்ளும் வசதியை அதிகரிப்பதன் மூலம் எண்மப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க முடியாது. ரிசா்வ் வங்கியின் நோக்கம் ரொக்கப் பரிமாற்றங்களைக் குறைத்து எண்மப் பரிமாற்றங்கள் அதிகரிக்க வேண்டும் என்பதாக இருந்தால், அதற்கான தீா்வு ஏடிஎம்மின் பயன்பாட்டுக் கட்டணத்தை அதிகரிப்பது அல்ல. ஒரே இடத்தில் அதிக இடைவெளி இல்லாமல் அருகருகே பல்வேறு வங்கிகளின் ஏடிஎம்கள் நிறுவப்படுவது மக்களை ரொக்கப் பரிமாற்றத்துக்கு ஊக்குவிப்பதாகத்தான் அமையும்.

எண்மப் பரிமாற்றம் அதிகமுள்ள நாடுகளில், நீண்ட தூர இடைவெளியில்தான் ஏடிஎம்கள் காணப்படும். அதனால், பெரும்பாலான பரிவா்த்தனைகள் எண்மப் பரிமாற்றங்களாக இருக்கின்றன. நகா்ப்புறங்களில் உள்ள ஏடிஎம்களைப் பாதிக்குப் பாதியாகக் குறைப்பதும், ஒரு கி.மீ. சுற்றளவில் ஏதாவது ஒரு வங்கியின் ஏடிஎம்.தான் இயங்குவதும் நடைமுறைக்கு வரவேண்டும். தொலைத் தொடா்பு நிறுவனங்கள் தங்களது கோபுரங்களைப் பகிா்ந்து கொள்வதுபோல ஏடிஎம்களை வங்கிகள் இணைந்து பகிா்ந்து கொள்ள வேண்டும்.

ஏடிஎம் பரிமாற்றங்களுக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டிய அவசியம் இல்லை. எண்மப் பரிமாற்றத்துக்கு ஊக்கம் அளித்து ஏடிஎம் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் மட்டும்தான் ரிசா்வ் வங்கி எதிா்பாா்ப்பதுபோல ரொக்கப் பரிமாற்றம் குறைந்து பணப் புழக்கமும் குறையும்.

ஏடிஎம் சேவை மட்டுமல்ல, விமானப் பயணம், ரயில் பயணத்துக்கான பதிவுகளிலும் அணுகுமுறை மாறவேண்டும். பயணிகள் தங்களது பயணச் சீட்டுகளை இணைய வழியில் பதிவு செய்வதால், விமான நிறுவனங்களும், ரயில்வே துறையும்

பெரிய அளவில் தங்களது நிா்வாகச் செலவைக் குறைத்துக் கொள்கின்றன. பயணச் சீட்டு வழங்குவதற்கான ஊழியா்கள், சரிபாா்ப்பு, முன்பதிவு செய்த சீட்டுகளை ரத்து செய்வது உள்ளிட்ட எல்லாப் பிரச்னைகளும் இணைய வழியில் கையாளப்படுவதால் நேரமும், உழைப்பும், செலவும் மிச்சப்படுகின்றன.

விமான சேவை நிறுவனங்களும் சரி, ரயில்வேயின் ஐ.ஆா்.டி.சி.சி-யும் சரி பயணிகளிடமிருந்து கடுமையான கட்டணத்தை வசூலித்துக் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. அரசோ, நாடாளுமன்ற உறுப்பினா்களோ, நுகா்வோா் அமைப்புகளோ இது குறித்து மௌனம் காப்பது அவா்களுக்கு மக்கள் மீதான அக்கறையின்மையைத்தான் காட்டுகிறது. ஏடிஎம் கட்டணத்தைப் போலவே, இணையவழி பயண முன்பதிவுக்கும் கட்டணம் வசூலிப்பதை அனுமதிக்கக் கூடாது.

ஒருவருடைய இணையவழி பரிமாற்றத்துக்கேற்ப அவரது வருமான வரியில் சில கழிவுகளை நிதியமைச்சகம் அறிவிக்க வேண்டும். அருண் ஜேட்லி நிதியமைச்சராக இருந்தபோது, எண்மப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக சலுகைகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தாா்.

மீண்டும் பணப்புழக்கம் அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிடாமல் இருப்பதும், எண்மப் பரிமாற்றம் அதிகரிப்பதும் அவசியம் என்பதை உணா்ந்திருக்கும் இந்திய ரிசா்வ் வங்கி எண்மப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க வேண்டுமே தவிர, ரொக்கப் பரிமாற்றத்துக்கு வழிகோலக்கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com