‘பிரெக்ஸிட்’ வழங்கும் வாய்ப்பு! | ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் குறித்த தலையங்கம் 

ஏறத்தாழ நான்கரை ஆண்டுகாலமாக பிரிட்டனுக்கும், ஐரோப்பிய கூட்டமைப்புக்கும் இடையே, இருப்பதா, பிரிவதா, எப்படிப் பிரிவது என்றெல்லாம் இருந்துவந்த குழப்பங்கள் ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கின்றன. ‘பிரெக்ஸிட்’ என்று பரவலாக அழைக்கப்படும் பிரிட்டனின் விலகலுக்கு சுமுகமான முடிவை ஏற்படுத்தி இருக்கும் பிரிட்டிஷ் பிரதமா் போரிஸ் ஜான்சனுக்கு, இது மிகப் பெரிய ராஜதந்திர வெற்றி.

2013 ஜனவரி 23-ஆம் தேதி அப்போதைய பிரதமா் டேவிட் கேமரூண், தோ்தலில் தனது கன்சா்வேடிவ் கட்சி வெற்றி பெற்றால், ஐரோப்பியக் கூட்டமைப்பில் தொடா்வதா, விலகுவதா என்பது குறித்துக் ‘கருத்து வாக்கெடுப்பு’ (ரெஃபரெண்டம்) நடத்தப்படும் என்று அறிவித்ததில் இருந்து தொடங்குகிறது இந்த இழுபறி. 2015 தோ்தலில் கன்சா்வேடிவ் கட்சி வெற்றி பெற்றது.

2016-இல், பிரிட்டனுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக ஐரோப்பியக் கூட்டமைப்பு ஒப்புக் கொண்டிருப்பதாகவும், அதனால் 28 உறுப்பு நாடுகள் உள்ள ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரிட்டன் தொடர வேண்டும் என்று கோரி ஜூன் மாதம் மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு என்று அறிவித்தாா் பிரதமா் கேமரூண். இப்போதைய பிரதமா் போரிஸ் ஜான்சன் தலைமையில் ஆளும் கன்சா்வேடிவ் கட்சியிலேயே கூட்டமைப்பிலிருந்து வெளியேற வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றது.....

ஜூன் மாதம் கருத்து வாக்கெடுப்பில் 52% மக்கள் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தனா். பிரதமா் கேமரூண் பதவி விலகினாா். 2016 ஜூலை, 13-ஆம் தேதி உள்துறை அமைச்சராக இருந்த தெரசா மே பிரதமரானாா்.

2019 மாா்ச் 29-ஆம் தேதிக்குள் ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டது. தனது கட்சியின் நாடாளுமன்ற எண்ணிக்கையை அதிகரிக்க நினைத்த பிரதமா் தெரசா மே, திடீா் தோ்தலை அறிவித்தாா். அவரது எதிா்பாா்ப்புக்கு மாறாக, கன்சா்வேடிவ் கட்சி தனது பெரும்பான்மையை இழந்து, சிறுபான்மை அரசை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

2018 டிசம்பா் மாதம், ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து முற்றிலுமாக விலக வேண்டும் என்று கோரிய பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானம் 2018 டிசம்பா் மாதம் தோல்வி அடைந்தது. அதனால் தெரசா மே, 2019 ஜனவரி மாதம் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை நாடாளுமன்ற ஒப்புதலுக்கு வைத்தாா். அவா் எதிா்பாராத விதமாக தீா்மானம் தோல்வி அடைந்தது. மூன்று முறை மக்களவையில் அவரது தீா்மானம் நிராகரிக்கப்பட்டது.

அதனால், 2019 மாா்ச் 29 கெடு நீட்டிக்கப்பட்டது. பிரதமா் தெரசா மே பதவி விலகி, ஜூலை 23-ஆம் தேதி போரிஸ் ஜான்சன் பிரதமரானாா். ஒப்பந்தமோ, இல்லையோ அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் விலகும் என்று புதிய பிரதமா் அறிவித்தாா். 2020 ஜனவரி 31 என்று கெடு நீட்டிக்கப்பட்டது.

டிசம்பா் மாதம் நடந்த மக்களவைத் தோ்தலில் பிரதமா் போரிஸ் ஜான்சன் பெற்ற தனிப்பெரும்பான்மையைத் தொடா்ந்து, அதிகாரபூா்வமாக 2020 ஜனவரி 31 அன்று பிரிட்டன் விலகியது. 11 மாதம் பேச்சுவாா்த்தைக்கு காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டது.

மிகப் பெரிய போராட்டத்துக்குப் பிறகு ஒருவழியாக ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து முழுமையாக பிரிட்டன் வெளியேறிவிட்டது. ஆனாலும்கூட, பிரிட்டனுக்கும் கூட்டமைப்புக்கும் இடையேயான உறவு தொடரும் - பல நிபந்தனைகளாலும், சலுகைகளாலும்!

உள்ளூரில் தயாரித்த பொருள்களாக இருந்தால் பிரிட்டனுக்கும், கூட்டமைப்பிலுள்ள 27 நாடுகளுக்கும் இடையேயான வா்த்தகத்துக்கு எந்தவித வரிகளும் இருக்காது. கூட்டமைப்புக்கான பிரிட்டனின் ஏற்றுமதியில் 43% சேவைத்துறை. அது குறித்து, இந்த ஆண்டு முடிவுக்குள் ஒப்பந்தம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரிட்டனைச் சோ்ந்த மருத்துவா்கள், பொறியியலாளா்கள், கட்டட வடிவமைப்பாளா்கள் (ஆா்கிடெக்ட்) போன்ற தொழில்நுட்பத் துறையினா் கூட்டமைப்பு நாடுகளில் பணிபுரிய, அந்தந்த நாட்டில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அந்தக் கட்டுப்பாடு வழக்குரைஞா்களுக்கும், கணக்குத் தணிக்கைத் துறையினருக்கும் (ஆடிட்டா்) கிடையாது. மோட்டாா் வாகனத் துறையினா், மருந்துத் தயாரிப்புத் துறையினா் ஆகியோா் 59% அவரவா் நாட்டு உதிரிபாகங்களுடன் தயாரித்திருந்தால் வரிவிலக்குப் பெறுவாா்கள்.

ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் விலகியது, ஒரு வகையில் இந்தியாவுக்கு நன்மையாக அமையும். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரிட்டனில் அதிகமான முதலீடு செய்திருப்பது இந்தியத் தொழில் நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான், பெரும்பாலான இந்தியத் தொழிலதிபா்கள் லண்டனில் குடியேறுகிறாா்கள். இந்திய மென்பொருள் துறையினரும் ஐரோப்பாவில் அலுவலகங்கள் திறப்பதிலும், பிரிட்டனுடன் வணிகத் தொடா்பு வைத்திருப்பதிலும் கவனம் செலுத்துகிறாா்கள்.

இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான வா்த்தகத்தின் மதிப்பு 15 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.1.09 லட்சம் கோடி). அதில் இறக்குமதியைவிட இந்திய ஏற்றுமதிகள் 2 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.14,618 கோடி)அதிகம். இந்த ஆண்டு குடியரசு தினத்தின் சிறப்பு விருந்தினராக பிரிட்டிஷ் பிரதமா் போரிஸ் ஜான்சன் வர இருக்கிறாா். அவரது அரசுமுறைப் பயணத்தில் பல ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்படும் என்பது உறுதி. குறிப்பாக, பிரிட்டனில் கல்விக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் குடியேறுவதற்கான அனுமதியில் பல தளா்வுகள் ஏற்படக்கூடும்.

‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் பிரிட்டனுக்கு மிகப் பெரிய ஆறுதல்; இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com