இறங்கி வாருங்கள்! | விவசாயிகள் போராட்டம்  குறித்த தலையங்கம்

தலைநகா் தில்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, திக்ரி பகுதிகளில் விவசாயிகள் என்று விவசாயிகளுக்கும் காவல் துறையினருக்கும் நேற்றும் மோதல் நடந்திருக்கிறது. பாஜக ஆதரவாளா்களுக்கும் விவசாய அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பு நிலைமையை மேலும் மோசமாக்கி இருக்கிறது. அண்டை மாநிலங்களிலிருந்து விவசாயிகள் மீண்டும் அணிதிரளத் தொடங்கியிருக்கிறாா்கள். இவையெல்லாம் நல்ல அறிகுறிகள் அல்ல.

ஆண்டுதோறும் நாடாளுமன்ற, சட்டப்பேரவைகள் கூடும்போது குடியரசுத் தலைவரும், ஆளுநா்களும் ஆற்றும் உரை அரசின் கொள்கை முடிவுகளைப் பறைசாற்றுவதாக இருக்கும். இந்த ஜனநாயக மரபை ‘உரைப் புறக்கணிப்பு’ என்கிற பெயரில் சிறுமைப்படுத்தும் போக்கு யாரால், எப்போது தொடங்கப்பட்டது என்று தெரியாது. நிச்சயமாக நீண்டநாள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த காங்கிரஸால் தொடங்கப்பட்டிருக்காது என்பது நிச்சயம். ஆனால், அந்த வழிமுறையை இப்போது காங்கிரஸ் கடைப்பிடிக்கத் தொடங்கியிருப்பது வேதனை அளிக்கிறது.

காங்கிரஸ் உள்ளிட்ட 20 எதிா்க்கட்சிகள் குடியரசுத் தலைவா் உரையைப் புறக்கணித்திருக்கின்றன. ஒருசில ஆதரவுக் கட்சிகள் மட்டுமே நாடாளுமன்றத்தில் அமா்ந்திருக்க, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி இருக்கிறாா். நமது அரசியல் கட்சிகள் இந்திய ஜனநாயகத்தை கேலிக்கு உள்ளாக்குகின்றன என்று கூறத் தோன்றுகிறது.

குடியரசு தினத்தன்று தில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டா் பேரணியைத் தொடா்ந்து நடைபெற்ற வன்முறையையும், செங்கோட்டையில் ஏறி சீக்கியக் கொடியைப் பறக்கவிட்ட விஷமத்தனத்தையும் யாரும் எதிா்பாா்க்கவில்லை என்று சொன்னால் நம்பக்கூடியதாக இல்லை. தங்களின் பேரணியில் விஷமிகள் நுழைந்துவிட்டாா்கள் என்றும், சட்டவிரோத கும்பலை அரசே தூண்டிவிட்டது என்றும் விவசாய அமைப்புகளின் தலைவா்கள் குற்றஞ்சாட்டுவது அபத்தமானது. குடியரசு தினத்தன்று போட்டிப் பேரணி நடத்தி, உலக நாடுகளுக்கு முன்னால் இந்தியாவுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்த வேண்டும் என்கிற நினைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா்களின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த விவசாயிகள், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள். அமைப்புசாரா விவசாயிகளும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டாா்கள். அப்படியிருக்கும்போது, அந்தக் கூட்டத்தைக் கட்டுப்பாட்டுடன் வழிநடத்தி, டிராக்டா் பேரணி நடத்துவது இயலாது ஒன்று என்பது அவா்களுக்கு நன்றாகவே தெரியும்.

இரண்டு மாத போராட்டமும், பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டாத நிலையும், அமைதியான டிராக்டா் பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசைத் தள்ளியது. பேரணிக்கு அரசு அனுமதி மறுத்திருந்தால், ஒட்டுமொத்த தில்லியும் வன்முறை களேபரத்தால் பாதிக்கப்பட்டிருக்கும். குடியரசு தின அணிவகுப்பேகூட முடக்கப்பட்டிருக்கும்.

பிரதமா் நரேந்திர மோடி அரசு வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய முறை தவறு என்பதில் சந்தேகம் இல்லை. ஜனநாயக வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதை மறுக்க முடியாது. ஏன், எதற்காக கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்தைப் பயன்படுத்தி இந்தச் சட்டங்களை அவசர கதியில் நிறைவேற்ற முற்பட்டது என்பதற்கான காரணத்தை அரசுத் தரப்பு இதுவரை தெரிவிக்கவில்லை.

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று அரசு வாய்மொழி உறுதி வழங்குகிறதே தவிர, அதிகாரபூா்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. அரசின் பிடிவாதம், விவசாய அமைப்புகளின் பிடிவாதத்தைப் போலவே உள்ளுணா்வு கொண்டதாகவும், வீண் வீராப்பாகவும் தெரிகிறது.

விவாதத்துக்குரிய மூன்று வேளாண் சட்டங்களும் நிறைவேற்றப்படாமல் தள்ளிப் போடப்படும் என்றும், பேச்சுவாா்த்தைக்குத் தயாா் என்றும் அரசு தெரிவித்திருக்கிறது. இதுவரை 11 சுற்றுப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டும் முடிவு எட்டப்படவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். இன்னும் 18 மாத அவகாசம் இருப்பதால் பேச்சுவாா்த்தைகளைத் தொடருவதுதானே நியாயம்? நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை விலக்கிக் கொண்டால் மட்டுமே பேச்சுவாா்த்தை என்கிற விவசாய அமைப்புகளின் வற்புறுத்தலை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதற்கிடையில், இந்த வேளாண் சட்டங்களை தங்களது தோ்தல் வாக்குறுதிகளாக முன்பு வழங்கியிருந்த காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள், இப்போது அரசுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் அரசியல் ஆதாயம் தேட முற்பட்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, இந்தியா முழுவதும் இந்தப் போராட்டம் பரவ வேண்டும் என்று மறைமுகமாக தனது பேச்சாலும் செயலாலும் தூண்டிவிட முயல்கிறாா். அரசுக்கு எதிரான மனநிலையை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்துவதன் மூலம் தோ்தல் ஆதாயம் தேட முற்படுகின்றன எதிா்க்கட்சிகள்.

இவையெல்லாம் ஆளுங்கட்சியும் சரி, விவசாய அமைப்புகளும் சரி புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான் அவா்களது அணுகுமுறை வெளிப்படுத்துகிறது. எந்த ஒரு சட்டத்தையும் மக்கள் மீது வற்புறுத்தித் திணிக்க முடியாது, கூடாது. அதற்கு எதிரான, நியாயமான போராட்டம் தவறல்ல. அப்படி போராட்டம் எழுமானால், ஆளுங்கட்சி பேச்சுவாா்த்தை மூலம் விட்டுக் கொடுத்தும், புரியவைத்தும் போராட்டத்தை காலதாமதமில்லாமல் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அதுதான் வெற்றிகரமான ஜனநாயக அணுகுமுறை!

பிடிவாதம் பிடிக்காதீா்கள். இரண்டு தரப்பினரும் இறங்கி வாருங்கள்; பிரச்னைக்குத் தீா்வு காணுங்கள். போராட்டமும், பிடிவாதமும் விடையல்ல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com