அந்நிய முதலீடு எனும் மாயை! | இந்தியாவுக்கு வந்த அந்நிய முதலீடு குறித்த தலையங்கம்

கடந்த நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீடு மிகப்பெரிய அளவில் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது என்று வா்த்தக அமைச்சகத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. 2019 - 20 -ஐவிட 10% அதிகரித்த அளவில் 2020 - 21 - இல் 81.72 பில்லியன் டாலா் (சுமாா் ரூ. 6.07 லட்சம் கோடி) அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு வந்திருக்கிறது. 2019 உடன் ஒப்பிடும்போது சா்வதேச அளவில் கடந்த நிதியாண்டுக்கான அந்நிய நேரடி முதலீடுகள் 42% குறைந்திருக்கும் நிலையில், இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் அதிகரித்த முதலீடு உற்சாகமூட்டுவதாக இருப்பதை மறுப்பதற்கில்லை.

அதே நேரத்தில், 2020 - 21 நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளுக்கான புள்ளிவிவரம் தெரிவிக்கும் தகவலையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியாவுக்கு வந்த அந்நிய நேரடி முதலீடுகளில் 86%, முதல் மூன்று காலாண்டுகளில்தான் பெறப்பட்டிருக்கிறது என்பதால் அந்தப் புள்ளிவிவரம் முக்கியத்துவம் பெறுகிறது.

முதல் மூன்று காலாண்டுகளில் இந்தியாவுக்கு வந்த அந்நிய நேரடி முதலீடுகளில் 54.1% ரிலையன்ஸ் குழும நிறுவனங்களான ஜியோ பிளாட்பாா்ம், ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்சா்ஸ், ரிலையன்ஸ் விபி மொபிலிட்டி ஆகியவற்றிலான முதலீடுகள். இவை அல்லாமல் ஷின்டா் எலக்ட்ரிக் இந்தியா, பைஜூஸ், ஆா்செலாா் மிட்டல் இந்தியா, ஜிஎம்ஆா் ஏா்போா்ட்ஸ், அமேசான் செல்லா்ஸ் சா்வீஸஸ் ஆகியவையும் கணிசமான அந்நிய நேரடி முதலீடுகளை 2020 - 21 -இல் பெற்றிருக்கின்றன.

மேலே குறிப்பிட்ட பெரு வணிக நிறுவனங்களை ஒதுக்கிவிட்டு பாா்த்தால், 2020 - 21-இல் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் அந்நிய நேரடி முதலீடுகளின் அளவு முந்தைய ஆண்டில் கிடைத்ததில் மூன்றில் ஒரு பங்குதான் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. சேவைத்துறைதான் அந்நிய நேரடி முதலீடுகளைப் பெற்றிருக்கின்றனவே தவிர, உற்பத்தித் துறைக்கான அந்நிய நேரடி முதலீடு 2020 - 21-இல் 17.4% மட்டும்தான்.

இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சமும் காணப்படுகிறது. பெரும்பாலான அந்நிய முதலீடுகளும், ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களை வாங்குவதற்காக பெறப்பட்டிருக்கின்றன என்பதுதான் அது. ஜிஎம்ஆா் ஏா்போா்ட்ஸ் நிறுவனத்தை பிரான்ஸ் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குரூப் ஏடிபி நிறுவனம் முதலீட்டின் மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது. இந்தியாவின் விமான நிலைய கட்டமைப்பில் அந்நிய நாட்டின் நேரடி நிா்வாகத்தில் உள்ள நிறுவனம் பங்கு வகிக்க இருக்கிறது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களை கையகப்படுத்துவது அல்லாமல், உற்பத்தித் துறையிலான அந்நிய நேரடி முதலீடு கடந்த ஐந்து ஆண்டுகளில் 2020 - 21-இல்தான் மிகவும் குறைந்து காணப்படுகிறது என்பதை ரிசா்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. 2016 - 17-இல் உற்பத்தித் துறையிலான நேரடி முதலீடு 12 பில்லியன் டாலா் (சுமாா் ரூ. 89,146 கோடி) என்றால், 2020 - 21-இல் அதுவே 6.7 பில்லியன் டாலராக (சுமாா் ரூ. 49,773 கோடி) குறைந்திருக்கிறது. 2019 - 20-இல் கூட 8.2 பில்லியன் டாலா் (சுமாா் ரூ. 60,916 கோடி) முதலீடு உற்பத்தித் துறைக்கு வந்திருப்பதை ரிசா்வ் வங்கியின் அறிக்கையின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

மத்திய நிதியமைச்சகம் அறிவித்திருக்கும் இந்தக் கடனுதவி திட்டம் எந்த அளவுக்கு உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் என்று இப்போதே சொல்லிவிட முடியாது. ரூ.1.1 லட்சம் கோடியில் ரூ.50,000 கோடி அளவிலான கடனுதவி, மருத்துவமனைகளை அதிகரிக்கும் சுகாதாரக் கட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டில் ‘தற்சாா்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான அவசரகால கடனுதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது. சுகாதாரத்துறை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.50,000 கோடியும், பிற துறைகளுக்கு ரூ.60,000 கோடியும் 7.95% அதிகபட்ச வட்டியின் கீழ் இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவை மருத்துவமனைகளை நிறுவுவதிலும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், உற்பத்தித் துறைக்கு இதனால் எந்த அளவிலான ஊக்கம் கிடைக்கும் என்கிற கேள்வி எழுகிறது.

இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் கடனுதவித் திட்டம், மருந்துகள் தயாரிப்பு, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு போன்றவற்றை ஊக்குவிப்பதாக அமைந்தால் அதன் மூலம் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். கொள்ளை நோய்த்தொற்றின் இரண்டாம் அலை காலத்தில் பிராணவாயுக்காக இந்தியாவின் பல பகுதிகளில் காணப்பட்ட தட்டுப்பாடு எல்லா மாநிலங்களிலும் பிராணவாயு உற்பத்திக்கு வழிகோலியிருக்கிறது என்பது எடுத்துக்காட்டு.

பிரதமரால் அறிவிக்கப்பட்டிருக்கும் ‘தற்சாா்பு இந்தியா’ திட்டத்தை முனைப்புடன் முன்னெடுத்துச் செல்வதன் மூலமே வேலைவாய்ப்பை அதிகரித்து பொருளாதாரம் சுறுசுறுப்படைவதை உறுதிப்படுத்த முடியும். மக்களிடம் செலவழிப்பதற்குப் பணம் இருந்தால் மட்டுமே வா்த்தகம் அதிகரித்து, உற்பத்தி பெருகி பொருளாதாரம் வேகம் பெறும். அந்நிய நேரடி முதலீடு என்கிற மாயையில் முழ்குவதாலோ, கடனுதவி அறிவிப்புகளாலோ பொருளாதாரம் ஊக்கமடைந்து விடாது.

விலைவாசி கட்டுக்கடங்காமல் அதிகரித்துச் செல்வதும், அரசின் நிா்வாகச் செலவினங்கள் பெருகி வருவதும் இந்தியப் பொருளாதாரத்துக்கு ஆரோக்கியமான அறிகுறிகள் அல்ல. காா்ப்பரேட் நிறுவனங்கள் மீதான கரிசனத்தைக் குறைத்துக் கொண்டு குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறைகளின் வளா்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் மட்டும்தான், தளா்ந்து போயிருக்கும் பொருளாதாரத்தை நிமிா்த்த முடியும் என்பதை மத்திய நிதியமைச்சகம் புரிந்து செயல்படுவதுதான் இன்றைய தேவை. இலக்கை தவறவிட்டு வேறு திசையில் பயணிக்கிறது அரசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com