பாவம், பிளஸ் 2 மாணவர்கள்! | பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து பற்றிய தலையங்கம்

 மத்திய அரசு சிபிஎஸ்இ தேர்வையும், தமிழக அரசு பிளஸ் 2 பொதுத்தேர்வையும் ரத்து செய்து அறிவித்திருக்கின்றன. மத்திய - மாநில அரசுகள் இந்தக் கல்வி ஆண்டில் மிக முக்கியமான பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
 மத்திய அரசு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழான பிளஸ் 2 தேர்வை ரத்து செய்திருப்பதற்குக் கொள்ளை நோய்த்தொற்றைக் காரணம் காட்டி இருப்பது ஏற்புடையதாக இல்லை. மாணவர்களின் உயர்கல்விக்குப் பாலமாக இருக்கும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்துவிட்டதால், அடுத்த கட்ட மேல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு எப்படி அமையும் என்பது தெரியாத பெரும் குழப்பத்தை மாணவர்கள் எதிர்கொள்ளப் போகிறார்கள்.
 நோய்த்தொற்றின் இரண்டாவது அலை சற்று தணிந்திருந்தாலும் இன்னும் ஓய்ந்துவிடவில்லை என்பதே உண்மை. தேர்வை நடத்துவதற்கு, நோய்த்தொற்று பாதிப்பு இப்போதைய நிலையில் ஐந்தில் ஒரு பங்காகக் குறைய வேண்டும் என்றும், அது உடனடி சாத்தியமில்லை என்றும் கூறுகிறார்கள், ஏற்போம். இணையவழித் தேர்வு என்பது சமச்சீர் வாய்ப்பை அனைவருக்கும் வழங்காது என்றும் இந்தியாவில் பின்தங்கிய பகுதி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதையும் ஏற்போம்.
 பல மாநிலங்களிலும், பொது முடக்கம் அமலில் இருப்பதால் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருப்பது மாணவர்கள் தேர்வு எழுத வருவதற்குத் தடையாக இருக்கும் என்கிற வாதத்தையும் ஏற்றுக் கொள்வோம். இதே காரணங்களின் அடிப்படையில் "நீட்' தேர்வும், ஏனைய உயர்கல்வித் தேர்ச்சி தேர்வுகளும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தால் அதில் நியாயம் இருந்திருக்கும்.
 தங்களுக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும் என்பதற்காகப் பல கோடி மக்கள் பங்கெடுக்கும் - அதுவும் கூட்டம் கூட்டமாகப் பங்கெடுக்கும் - தேர்தல்களைத் தள்ளி வைக்கவோ, ரத்து செய்யவோ நமது அரசியல்வாதிகள் தயாராக இல்லை. பொதுக்கூட்டங்களையும், பேரணிகளையும் எந்தவொரு கட்சியும் தவிர்க்கவில்லை. அவர்கள் தேர்தல் பிரசாரம் காரணமாக, நோய்த்தொற்றுப் பரவலுக்கு வழிகோலினார்கள் என்பதுதான் நிஜம். தேர்தல் நடத்துவதில் காட்டப்பட்ட அதீத ஆர்வம், மாணவர்களின் வருங்காலத்தின் மீது ஏன் காட்டப்படவில்லை என்பதுதான் நமது கேள்வி.
 கல்வி கற்க வேண்டிய பருவத்தில் மாணவர்கள் கவனம் அதிலிருந்து திரும்பினால், மீண்டும் கற்கும் மனநிலைக்கு அவர்கள் வருவது சிரமம். தேர்வு இல்லை என்றதும் அனைவரும் புத்தகங்களுக்கு விடை கொடுத்துவிட்டு, தங்கள் கவனத்தை வேறு திசையில் திருப்பி விடுவார்கள். இதையே, சற்று ஆழ்ந்து சிந்தித்துத் தேர்வுகளை ஆகஸ்ட், செப்டம்பர் வரை தள்ளிப்போடுவது என்று முடிவெடுத்திருந்தால், வரப்போகும் தேர்வு கருதி மாணவர்களின் கற்றல் மனநிலை தொடர்ந்திருக்கும். அப்போதும் நிலைமை மோசமாகவே இருந்தால், தேர்வு வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கலாமே?
 சிபிஎஸ்இ தேர்வுகள் இருக்கட்டும், அதில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலோர் தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதி படைத்த குடும்பத்து மாணவர்கள். அவர்கள் தனிப்பயிற்சி பெற்று "நீட்' போன்ற தேர்ச்சித் தேர்வுகளில் கலந்து கொள்ள முடியும். தமிழகத்தில் ஏறத்தாழ ஒன்பது லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகிறார்கள். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள். மருத்துவப் படிப்பையும், "நீட்' தேர்வையும் விட்டுவிடுவோம். சட்டம், பொறியியல், நிர்வாகத்துறை படிப்புகளுக்குப் போவதாக இருந்தாலும், கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர்வதாக இருந்தாலும் அதற்கு அடிப்படை பிளஸ் 2 மதிப்பெண்கள்தான்.
 பிளஸ் 2 தேர்வுகள் இல்லையென்றாகிவிட்டது. இப்போது, அடுத்த கல்வியாண்டில் கல்லூரிச் சேர்க்கைகளுக்கு என்னதான் அடிப்படையாக அமையப் போகிறது என்பது குறித்து ஏதாவது நடைமுறை வகுக்கப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. மாணவர்
 களுக்கு ஒவ்வொரு கல்லூரியும் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை நடத்துமா? அப்படியானால், ஒவ்வொரு மாணவரும் பல கல்லூரிகளில் நுழைவுத் தேர்வில் பங்கு கொள்ள வேண்டுமா? அதைவிட, சிரமம் பார்க்காமல் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குப் பிறகு பிளஸ் 2 தேர்வையே நடத்தி இருக்கலாமே?
 கடந்த கல்வியாண்டில் எந்தப் பள்ளியும் திறக்கப்படவில்லை. தனியார் பள்ளி மாணவர்கள் இணைய வழியிலும், அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமும் பாடங்களைக் கேட்டனர். அதனால், பள்ளிக்குச் சென்று படிப்பது போன்ற அளவிலான கல்வித்திறன் அவர்களுக்கு நிச்சயமாக இருக்காது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வும் இல்லை என்றால், 2020-21 கல்வியாண்டு மாணவர்களின் தரம், நிரந்தரமாகக் குறைத்து மதிப்பிடப்படும் என்பதை மத்திய - மாநில ஆட்சியாளர்கள் ஏன் நினைத்துப் பார்க்க மறுக்கிறார்கள்?
 அடுத்த மூன்று மாதங்களில், பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு, அந்தந்தப் பள்ளிகளில் தேர்வை நடத்தி இருக்கலாம். அடுத்த கல்வியாண்டை அக்டோபரில் தொடங்குவதால் என்ன கெட்டுப் போய்விடும்?
 மாணவர்கள் உயர்கல்வியை மேற்கொள்வதற்கு ஏதாவது ஒரு தேர்ச்சித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வேண்டும். அதனடிப்படையில்தான் சேர்க்கை நடத்த முடியும். அந்தத் தேர்வு பிளஸ் 2-வாக இருப்பதுதானே சமச்சீர் வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும்?
 சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது தவறு. மாநிலக் கல்வி வாரியம் அதைப் பின்பற்றுவது அதைவிடத் தவறு. மாணவர்களுக்கு மன உளைச்சல் இனிதான் ஆரம்பமாகப் போகிறது..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com