பந்து உருளத் தொடங்குகிறது... | கால்பந்து தொடர் பற்றிய தலையங்கம்

 கொள்ளை நோய்த்தொற்றின் மூன்றாவது அலை வரக் காத்திருக்கிறது என்கிற எச்சரிக்கையும், உலகில் நான்கில் மூன்று பங்கு மக்கள் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்கிற உண்மையும் நம்மை அச்சுறுத்தாமல் இல்லை. அதற்காக மனித இனம் நம்பிக்கையைக் கைவிட்டு முடங்கிவிடவில்லை என்பதுதான் நமது வெற்றி.
 கலை, இலக்கியம் ஆகிய எல்லாவற்றையும்விட மொழி, மதம், இனம், நாடு ஆகியவற்றைக் கடந்து ஒட்டுமொத்த மனித இனத்தையும் இணைக்கும் சக்தி விளையாட்டுக்கு மட்டுமே உண்டு. கொள்ளை நோய்த்தொற்றால் ஏற்பட்ட நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ஐரோப்பாவிலும் தென் அமெரிக்காவிலும் மீண்டும் மைதானங்கள் சுறுசுறுப்படையத் தொடங்கியிருக்கின்றன. விளையாட்டு வீரர்கள் கால்களில் தங்களது பூட்ஸ்களை அணியத் தயாராகி வருகிறார்கள். விளையாட்டு தொடங்குவதற்கான விசில் சத்தம் கேட்க இருக்கிறது. பந்து உருண்டோடுவதும், பார்வையாளர்களின் கைதட்டல்களும் மீண்டும் அரங்கேற இருக்கின்றன.
 பூமிப் பந்தைப் போலவே கால்பந்தாட்டப் பந்துக்கும் உள்ளார்ந்த சக்தி ஒன்று உண்டு. உலகம் எப்படி காற்றால் இயங்குகிறதோ அதேபோல, தன்னுள்ளே நிறைந்து நிற்கும் காற்றால்தான் துடிப்புடன் இயங்குகிறது கால்பந்து. அதனால்தானோ என்னவோ முடங்கிக் கிடக்கும் உலகத்தைப் புத்துணர்வுடன் மீண்டெழச் செய்வதற்கு கால்பந்து உருள முற்பட்டிருக்கிறது. ஒருபுறம் கொள்ளை நோய்த்தொற்றுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில், நோய்த்தொற்று மேலும் பரவுவதற்கு அனுமதிக்காமல் விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடிந்தால் அது விளையாட்டு வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகத்துக்கும் மிகப்பெரிய உற்சாகமாக அமையும்.
 உலகின் பல பாகங்கள் கொவைட்-19 கொள்ளை நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், நோய்த்தொற்றுப் பரவல் குறைந்து காணப்படும் ஐரோப்பாவும், பிரேசிலும் துணிந்து விளையாட்டு மைதானங்களைத் திறந்துவிட முற்பட்டிருக்கின்றன. கடந்த ஓராண்டாகத் தள்ளிப்போடப்பட்டு வந்த சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் தொடங்க இருக்கின்றன. ஐரோப்பாவிலும் தென் அமெரிக்காவிலும் கால்பந்துப் போட்டிகள் தொடங்க இருக்கின்றன என்றால், ஜப்பான், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதில் மும்முரமாக இறங்கியிருக்கிறது.
 கொள்ளை நோய்த்தொற்று பரவத் தொடங்கியதையடுத்து, கடந்த ஓராண்டாக எந்தவித சர்வதேசப் போட்டிகளும் நடக்கவில்லை. மிகப்பெரிய சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளான யூரோ கோப்பை, கோபா அமெரிக்கா கோப்பைப் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. "யுவெஃபா டோர்னமென்ட்' என்று அறியப்படும் யூரோ 2020 தொடங்கிவிட்டது. இத்தாலியும், துருக்கியும் களத்தில் இறங்கியதுடன் கால்பந்தாட்ட ரசிகர்கள் மீண்டும் உற்சாகமடைந்திருக்கிறார்கள். கொள்ளை நோய்த்தொற்று பரவத் தொடங்கியதற்குப் பிறகு நடைபெறும் மிகப் பெரிய சர்வதேச விளையாட்டுப் போட்டி இதுதான்.
 ஐரோப்பாவில் நோய்த்தொற்று பாதிப்பு குறைந்திருப்பதால், குறைந்த அளவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மைதானத்திலும் எத்தனை பேர் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை அந்தந்த நாடுகள் தீர்மானிக்கின்றன. பார்வையாளர்களுடன் மீண்டும் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியிருப்பது ஒட்டுமொத்த உலகத்தையும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
 யூரோ கோப்பையின் 60-வது ஆண்டு போட்டி 11 நாடுகளில் உள்ள 11 மைதானங்களில் நடத்தப்படுகிறது. அதில் கலந்துகொள்ள தகுதிபெற்ற 24 நாடுகள் யூரோ கோப்பையைக் கைப்பற்றுவதற்கு தயாராகி இருக்கின்றன. லண்டன், ரோம், புடாபெஸ்ட், கோபன்ஹேகன் என்று ஐரோப்பா முழுவதும் யூரோ கோப்பை ஜுரத்தில் இருக்கின்றன. அதனால்தான் யூரோ கோப்பைக்கான பந்துக்கு "யூனிஃபோபியா' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
 தென் அமெரிக்க கால்பந்து போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அதில் பிரேசிலும் ஆர்ஜென்டீனாவும் மோதும் விளையாட்டை எதிர்பார்த்து ஒட்டுமொத்த உலகமும் காத்திருக்கிறது. மிகக் கடுமையான சோதனைகளுக்கு இடையில் தென் அமெரிக்காவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன என்பதுதான் உண்மை. போட்டிகள் தொடங்குவதற்கு சில நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஆர்ஜென்டீனாவில் அதிகரித்து வரும் கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலும், கொலம்பியாவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பமும் விளையாட்டுப் போட்டியை நடத்தத் தடையை ஏற்படுத்தின. கடைசியில் பிரேசிலில் நடத்துவது என்று முடிவாகியது. பிரேசில் நாட்டிலுள்ள 5 நகரங்களில் தென் அமெரிக்க கால்பந்துக் கோப்பை போட்டிகள் இன்று முதல் தொடங்க இருக்கின்றன.
 ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டியை ஜூலை 23-ம் தேதி முதல் நடத்துவது என்று சர்வதேச ஒலிம்பிக் குழுவும், ஜப்பான் அரசும் உறுதியாக இருக்கின்றன. உலகத்தின் மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக்ஸ் வெற்றிகரமாக நடத்தப்பட்டால், கொள்ளை நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அது மிகப் பெரிய வெற்றியாக அமையும்.
 லண்டன் வெம்பிளியில் யூரோ கோப்பை வெற்றியும், ரியோ டி ஜெனிரோவில் (பிரேசில்) தென் அமெரிக்க கால்பந்து சாம்பியன் போட்டி கோப்பையும் நிறைவு விழாவை எட்டும்போது, வெற்றி பெறப்போவது ஓர் அணியோ, ஒரு நாடோ, கால்பந்தாட்ட விளையாட்டோ மட்டுமல்ல; கொள்ளை நோய்க்கு எதிரான போராட்டத்தில் துணிந்து நிற்கும் மனித இனத்தின் தன்னம்பிக்கையும்தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com