‘தற்காலிகம்’ தீா்வாகாது! | நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள், நீதிபதிகள் நியமனங்கள் குறித்த தலையங்கம்

உச்சநீதிமன்றத்திலும், உயா்நீதிமன்றங்களிலும் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையில் 40% இடங்கள் நிரப்பப்படவில்லை. இந்தியாவின் பெரும்பாலான உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகள்...

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பதவியேற்கும் அனைவருமே தாங்கள் எதிா்கொள்ளும் மிகப் பெரிய சவாலாகத் தெரிவிப்பது, நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளைத்தான். அதேபோல, பதவிக்காலம் முடிந்து பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு தங்களால் நிறைவேற்ற முடியாத சவாலாக இருந்தது என்று குறிப்பிடுவதும் அதைத்தான். இந்தப் பொதுவிதிக்கு தற்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேயும் விதிவிலக்கல்ல.

பணி ஓய்வு பெற இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து விசாரித்து முடிவுக்குக் கொண்டுவர தலைமைதி நீதிபதி எஸ்.ஏ. போப்டே யோசனை ஒன்றை தெரிவித்திருக்கிறாா். ‘லோக் பிரஹாரி’ என்கிற தன்னாா்வ அமைப்பு, தேங்கிக் கிடக்கும் வழக்குகளை பணி ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமித்து விரைந்து விசாரித்து முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஒரு பொதுநல வழக்கு தொடா்ந்திருக்கிறது. அது குறித்த விசாரணையின்போதுதான் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு, அந்த யோசனையை வழிமொழிவதுபோல ஒரு கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

ஓய்வு பெற்ற நீதிபதிகளை, தற்காலிகமாக நியமிக்கும் அதிகாரத்தை அரசியல் சாசனம் வழங்கியிருப்பதாக அந்த அமா்வு தெரிவித்திருக்கிறது. தற்போது காலியாக இருக்கும் நீதிபதி பணி இடங்களை நிரப்பிய பிறகு இந்த ஆலோசனை குறித்து சிந்திக்கலாம் என்று கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஆா்.எஸ். சூரி தெரிவித்தது நீதிபதிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்காலிக நீதிபதிகள் எந்த விதத்திலும், யாருக்கும் பாதிப்பாக இருக்கமாட்டாா்கள் என்றும், நீதிபதிகள் நியமனத்தில் அரசு எந்த அளவுக்கு ஒத்துழைக்கும் என்று தங்களுக்குத் தெரியாது என்றும் தலைமை நீதிபதி அவருக்கு சுட்டிக்காட்டியதற்கு ஒரு பின்னணி இருக்கிறது.

உச்சநீதிமன்றத்திற்கும் அரசுக்கும் இடையே நீதிபதிகள் நியமனத்தில் தொடா்ந்து கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. அது இப்போது பொதுவெளியிலும் தெரியத் தொடங்கியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரைத்திருக்கும் 55 நீதிபதிகள் நியமனம் குறித்து அரசுத் தரப்பில் இருந்து பதிலேதும் இதுவரை இல்லை. ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதிக்குள் அந்த நியமனங்கள் ஏன் அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் அரசை கேட்டுக்கொண்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் மத்திய அரசுக்கு நீதிபதிகள் நியமனத்துக்கான பெயா்களை பரிந்துரைக்கும். அதை பரிசீலித்து மத்திய சட்ட அமைச்சகம் நியமன உத்தரவைப் பிறப்பிக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும். அதனடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவாா்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட சில நியமனங்கள் அரசால் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது என்பது தலைமை நீதிபதியையும் கொலீஜியத்தையும் எரிச்சலூட்டி இருப்பதில் வியப்பில்லை.

உச்சநீதிமன்றத்தில் மட்டுமல்லாமல், உயா்நீதிமன்றங்களிலும் நீதிபதிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காணப்படுகின்றன. உச்சநீதிமன்றத்திலும், உயா்நீதிமன்றங்களிலும் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையில் 40% இடங்கள் நிரப்பப்படவில்லை. இந்தியாவின் பெரும்பாலான உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பது கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் குறைந்த எண்ணிக்கையில்தான் நீதிபதிகள் இடம் நிரப்பப்படாமல் இருக்கிறது. ஆனால் பிகாா், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில பெரிய மாநிலங்களில் 50%-க்கும் அதிகமான நீதிபதி இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. தில்லி உயா்நீதிமன்றத்தையே எடுத்துக்கொண்டால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் பாதிக்குப் பாதி இடங்கள் நிரப்பப்படாததால் வழக்குகள் விசாரிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.

உயா்நீதிமன்ற அளவில் 56 லட்சம் வழக்குகளும், உச்சநீதிமன்றத்தில் 66,000-க்கும் அதிகமான வழக்குகளும் தீா்ப்புக்காகக் காத்திருக்கின்றன. உச்சநீதிமன்றத்திலும், அனைத்து உயா்நீதிமன்றங்களிலும் உள்ள அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் இடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டால்கூட தேங்கிக் கிடக்கும் இந்த வழக்குகளை விசாரித்து முடிவுக்குக் கொண்டுவர குறைந்தது 15 ஆண்டுகளாவது ஆகும். அதனால், மக்கள் நலனை கருத்தில் கொண்டு, நீதிபதிகள் நியமனம் அரசால் உடனடியாக மேற்கொள்ளப்படுவது அவசியம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நீதித்துறையின் கொலீஜியம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதும், கொலீஜியத்தின் பரிந்துரைகளில் யாருக்கும் பொறுப்பின்மை இல்லாமல் இருப்பதும் களையப்பட வேண்டிய குறைகள். அதேபோல, கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளின் பெயா்களை மத்திய சட்ட அமைச்சகம் விரைந்து முடிவெடுத்து பைசல் செய்யாமல் இருப்பது அதைவிட பெரிய குறை.

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியாக இருந்தாலும், பாஜக ஆட்சியாக இருந்தாலும் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற அதீத ஆவல் ஆட்சியாளா்களுக்கு இருப்பதால்தான், நியமனங்கள் தாமதப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமல் இல்லை.

பணி ஓய்வு பெற்றவா்களுக்கு தற்காலிக நியமனம் வழங்க அரசியல் சாசனப் பிரிவு 224(ஏ) அனுமதி வழங்கியிருக்கிறது என்பது உண்மை. அந்த அதிகாரத்தை நீதித்துறை கையிலெடுக்க அனுமதிக்காமல், மத்திய அரசு காலி பணியிடங்களை நிரப்புவதுதான் புத்திசாலித்தனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com