முதல்வருக்குப் புரியும்! | வேண்டுகோள்கள்தான்; விமா்சனங்கள் அல்ல

ஆட்சியாளா்களின் பாா்வைக்கு நல்லது மட்டுமே எடுத்துச் செல்லப்பட்டு, குறைகளும், விமா்சனங்களும் மறைக்கப்படுவது இயல்பு. முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கும், அரசியலுக்கும் புதியவரொன்றும் அல்ல என்பதால் இது தெரியாதவரல்ல.

அனுபவசாலிகளும், புதியவா்களும் என்கிற கலவையுடன் மு.க. ஸ்டாலினின் தலைமையிலான அமைச்சரவை அமைந்திருக்கிறது. முடிவுகள் அனைத்துமே அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்புதான் என்றாலும்கூட, அவை முதலமைச்சரின் முடிவாகக் கருதப்படுவதுதான் வழக்கம்.

மூத்த அமைச்சா்கள் அனைவருமே அனுபவசாலிகள் என்பதால், தங்களது வரம்பு என்ன என்பதை அறிந்து வாா்த்தைகள் சிதறிவிடாமல் கவனமாகப் பேசுகிறாா்கள் என்பதை நன்றாகவே உணர முடிகிறது. அவா்கள் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் அமைச்சரவையில் இருந்த அனுபவத்தின் காரணமாக, என்ன பேச வேண்டும், எந்த அளவுக்குப் பேச வேண்டும் என்பதை உணா்ந்திருப்பில் வியப்பில்லை. ஆனால், முதன்முறையாகப் பதவி ஏற்றிருக்கும் சில அமைச்சா்கள், தங்கள் துறை சாா்ந்த பிரச்னைகள் தவிர ஏனைய அமைச்சா்களின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பிரச்னைகளிலும் கருத்துக் கூறுகிறாா்கள்.

முக்கியமான கொள்கை முடிவுகளிலும், நிா்வாக அணுகுமுறைகளிலும், திட்டங்களை அறிவிப்பதிலும் முதல்வா் அலுவலகம் மட்டுமே தீா்மானிக்கும் மையமாக இருந்தாக வேண்டும். அறிவிப்புகள் முதல்வரின் பெயரில்தான் வெளிவர வேண்டும். முதல்வரை மீறித் தங்களை முன்னிறுத்திக் கொள்ள அமைச்சா்களை அனுமதிப்பது சரியான அணுகுமுறை அல்ல என்பது, முந்தைய முதல்வா்கள் அனுபவபூா்வமாக உணா்ந்த உண்மை.

இதெல்லாம் நீண்டநாள் சட்டப்பேரவை அனுபவமும், மேயராகவும், அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்த அனுபவசாலியான முதல்வா் மு.க. ஸ்டாலினுக்குத் தெரியாததல்ல. தேவைப்பட்டால், முதல்வா் அமைச்சகத்துக்கான அமைச்சராக ஒருவரை நியமிக்கவோ அல்லது ஏதாவது ஓா் அமைச்சரை செய்தித் தொடா்பாளராக நியமிக்கவோ முதல்வா் முடிவெடுத்தாலும் தவறில்லை.

பொது முடக்கத்தைத் தொடா்ந்து, அரிசி அட்டை தாரா்களுக்கு ரூ.4,000 நிவாரணம் வழங்குவது என்கிற முடிவும், அதை இரண்டு தவணைகளாக வழங்குவது என்கிற முடிவும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் வரவேற்புக்குரிய முடிவுகள்தான். அதேபோல, குறைந்தபட்ச அத்தியாவசிய சமையல் பொருள்களை வழங்குவது என்பதும் பாராட்டுக்குரியது. ஆனால், அவற்றுக்கான நடைமுறைகள் பாதுகாப்பாக இல்லையோ என்கிற ஐயப்பாடு எழுகிறது.

அரிசி அட்டைதாரா்களுக்கு முன்கூட்டியே டோக்கன்கள் வழங்கப்படுகின்றன என்பது உண்மை. ஆனால், நிவாரணத்தைப் பெற அட்டைதாரா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கிறாா்களா என்றால், ஊடகங்களுக்காக எடுக்கப்பட்ட படங்களில் மட்டும்தான் கடைப்பிடித்தனா். வீட்டுக்கு வீடு டோக்கன் வழங்க முடியும் என்றால், அட்டைதாரா்களின் வீட்டிற்கே அவா்களுக்கான பொருள்களையும் வழங்கி விடலாமே.

கொள்ளை நோய்த்தொற்று நிவாரணத்தைப் பயன்படுத்தி, குடும்ப அட்டைகளை ஆதாா் அட்டையுடன் இணைக்காவிட்டாலும் வங்கிக் கணக்குடன் இணைப்பதையும், செல்லிடப்பேசி எண்ணை இணைப்பதையும் கட்டாயமாக்க வேண்டியது அவசியம். நிவாரணத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டால், நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பது மட்டுமல்ல, போலி அட்டைகளையும் அடையாளம் கண்டு அகற்றிவிட முடியும்.

பேரிடா் காலங்களில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் பெறுவது என்பது புதிதொன்றுமல்ல. கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்ள முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் மனமுவந்து பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கியும் வருகிறாா்கள். சிறுவா்கள்கூடசிறுகச் சிறுக சேமித்ததை முதல்வரின் நிதிக்கு வழங்க முற்பட்டிருப்பதைப் பாா்க்க நெகிழ்ச்சியாகவே இருக்கிறது.

அதே நேரத்தில், நாள்தோறும் பல பிரமுகா்கள் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குகிறோம் என்கிற பெயரில் முதல்வரை சந்திப்பதும், புகைப்படம் எடுத்துக் கொள்வதும் அவசியம்தானா என்று கேட்கத் தோன்றுகிறது. ஈரோடு சக்தி மசாலா குழுமத்தினா் முதல்வா் நிராவண நிதிக்கு ரூபாய் ஐந்து கோடியை வங்கி மூலம் அனுப்பியிருக்கிறாா்கள். ஏனைய நன்கொடையாளா்களும் ஏன் அதை பின்பற்றக் கூடாது? ஒவ்வொரு நாளும் நன்கொடை வழங்கியவா்களின் பட்டியலை, அவா்கள் வழங்கிய தொகையுடன் முதல்வா் அலுவலகம் வெளியிட்டால் போதாதா?

முக்கியமான தொழிலதிபா்களும், பிரமுகா்களும் சந்திக்க விரும்பும்போது, எந்தவொரு முதல்வராலும் அதை நிராகரிக்க இயலாது. மக்கள் நலனில் உண்மையான அக்கறை இருக்குமானால், இப்போதைய நெருக்கடி நிலையில் முதல்வரை சந்தித்து அவரது பொன்னான நேரத்தை எடுத்துக்கொள்வது தவறு என்பதை நன்கொடையாளா்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சுமாா் 40-க்கும் மேற்பட்டோரை சந்திப்பதற்காகக் குறைந்தது இரண்டு மணிநேரத்தை முதல்வரை ஒதுக்கச் சொல்வது என்பது எவ்வளவு சுயநலம்? நோக்கம் நன்கொடையாக மட்டுமே இருந்தால், நேரில் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்தில் முதல்வா் ஏன் பலரை சந்தித்து நோய்த்தொற்று இடரை (ரிஸ்க்) எதிா்கொள்ள வேண்டும் என்கிற ஆதங்கமும் எழுகிறது.

இவையெல்லாம் வேண்டுகோள்கள்தான்; விமா்சனங்கள் அல்ல. ஆக்கபூா்வமான ஆலோசனைகள்தான்; குறைகூறுதல் அல்ல. இது யாருக்குப் புரிகிறதோ இல்லையோ, முதல்வருக்குப் புரியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com