யாரிடம் முறையிடுவது? | கொள்கை முடிவுகளை குறித்த தலையங்கம்

அவசர அவசரமாக சில கொள்கை முடிவுகளை எடுப்பதில் மத்திய அரசுக்குத் தவறான வழிகாட்டுதல் தரப்படுகிறது. நாடு தழுவிய அளவில் கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்ளும் கடுமையான சூழலுக்கு இடையில், ‘மேல்முறையீட்டு ஆணையங்கள் சீா்திருத்த அவசர சட்டம் - 2021’ கொண்டுவரப்பட்டு, ஒரே நேரத்தில் எட்டு மேல்முறையீட்டு ஆணையங்களுக்கு இறுதி முடிவு எட்டப்பட்டிருப்பது அவசரக் கோல முடிவு.

பொதுமக்களுக்குப் பயனளிப்பது, அரசின் செலவினங்களைக் குறைப்பது, மேல்முறையீட்டு ஆணையங்களில் போதுமான பணியாளா்கள் இல்லாமல் இருப்பது, கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பது ஆகியவையே மேல்முறையீட்டு ஆணைய சீா்திருத்த அவசரச் சட்டத்திற்கான காரணங்கள் என்று மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது. இந்த விளக்கங்களில் ஒன்றுகூட தா்க்க ரீதியாகவோ நடைமுறை ரீதியாகவோ சரியானதல்ல என்பதுதான் உண்மை.

திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு ஆணையம் என்பது மத்திய திரைப்படத் தணிக்கை குழுவின் உத்தரவுகளின் மீதான மேல்முறையீடுகளை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. பல திரைப்படங்கள் மாநில, தேசிய திரைப்படத் தணிக்கைக் குழுவால் நிராகரிக்கப்படும்போது, பல கோடி ரூபாய் முதலீடு செய்த திரைப்படத் தயாரிப்பாளா்களின் கடைசி முயற்சியாக திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டு ஆணையம் இருந்து வந்தது. அதைக் கலைக்கும்போது, மாறிவிட்ட உலகமய சூழலில் அதனுடன் சோ்த்து தணிக்கைக் குழுவையும் கலைத்திருந்தால்கூட அந்த முடிவை நியாயப்படுத்தலாம்.

அதிக செலவில்லாமல் விரைந்து நீதி வழங்குவதற்கு அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் உத்தரவாதத்தின் அடிப்படையில் மேல்முறையீட்டு ஆணையங்கள் உருவாக்கப்பட்டன. இந்தியாவில் முதன்முதலில் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் 1941-இல் வருமான வரி மேல்முறையீட்டு ஆணையம் உருவாக்கப்பட்டது. விரைந்து குறைகளைத் தீா்ப்பதிலும், வழக்குகளை முடிவு செய்வதிலும் வருமான வரி மேல்முறையீட்டு ஆணையம் அடைந்த வெற்றியின் அடிப்படையில்தான், மேலும் பல மேல்முறையீட்டு ஆணையங்களை அமைப்பதற்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்தது.

1958-இல் வெளியான இந்திய சட்ட ஆணையத்தின் 14-ஆவது அறிக்கையில், ‘நீதி நிா்வாக சீா்திருத்தம்’ என்கிற அடிப்படையில் மத்தியிலும் மாநிலங்களிலும் மேல்முறையீட்டு ஆணையங்கள் அமைக்கப்படுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டது. சில முக்கியமான வழக்குகளில் நீதிமன்றங்களைவிட துறைசாா் வல்லுநா்கள் அமைந்த மேல்முறையீட்டு ஆணையங்களால் குறைந்த செலவில் விரைந்து தீா்ப்பு வழங்க முடியும் என்று 1958 இந்திய சட்ட ஆணைய அறிக்கை தெரிவித்தது.

1977 சட்டக் கமிஷனின் 58-ஆவது அறிக்கை, நீதிபதி ஜெ.சி.ஷா தலைமையில் 1969-இல் அமைந்த உயா்நீதிமன்ற நிலுவைக் குழு, 1976 ஸ்வரன் சிங் குழு ஆகியவையும் அதே கருத்தை வழிமொழிந்தன. அரசியல் சாசனத் திருத்தத்தின் மூலம் நிா்வாக மேல்முறையீட்டு ஆணையம் உருவாக்கப்பட்டது. 1988 சட்ட கமிஷனின் 124-ஆவது அறிக்கையில், சிறப்பு மேல்முறையீட்டு ஆணையங்கள் மூலம் உயா்நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் 45% வழக்குகளைக் குறைக்க முடியும் என்று கூறப்பட்டிருக்கிறது.

பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற வளா்ச்சி அடைந்த நாடுகள் எல்லாவற்றிலும் மேல்முறையீட்டு ஆணைய முறை கடைப்பிடிக்கப்படுகிறது. பிரதமா் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் மேல்முறையீட்டு ஆணையங்களுக்கான செலவுகள் தேவையற்றவை என்கிற கருத்து உருவானது.

36 மத்திய அரசு மேல்முறையீட்டு ஆணையங்கள் 18-ஆகக் குறைக்கப்பட்டன. 2017 பட்ஜெட்டில் எட்டு மேல்முறையீட்டு ஆணையங்கள், வேறு ஆணையங்களுடன் இணைக்கப்பட்டன. வேடிக்கை என்னவென்றால், ஒன்றுக்கொன்று எந்தவிதத் தொடா்பும் இல்லாத மேல்முறையீட்டு ஆணையங்கள், எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக இணைக்கப்பட்டன.

அரசு, நீதித்துறை, நிா்வாகம் மூன்றுக்கும் இடையிலான ‘யாா் பெரியவா்’ என்கிற பிரச்னையில் மேல்முறையீட்டு ஆணையங்கள் பலிகடாவாக்கப்பட்டிருக்கின்றன. சா்ச்சைக்குரிய சில திரைப்படங்களுக்கு அனுமதி வழங்கியதால், திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டு ஆணையமும், அரசியல் கட்சிகளை பொது அமைப்புகளாக அறிவித்ததால் மத்திய தகவல் ஆணையமும் அரசின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டன. அதன் விளைவுதான் இப்போது எட்டு மேல்முறையீட்டு ஆணையங்களுக்கு முடிவுகட்டப்பட்டிருப்பது.

நீதித்துறையும், மேல்முறையீட்டு ஆணையங்களை எதிரிகளாவே பாா்க்கிறது. நீதிமன்றங்களில் 51.35 லட்சம் வழக்குகளுக்கு மேல் தேங்கிக் கிடக்கும் நிலையிலும், நீதிபதி பதவிகள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையிலும்கூட தங்களது அதிகார வரம்பை மேல்முறையீட்டு ஆணையங்களுக்கு விட்டுக்கொடுக்க நீதித்துறை தயாராக இல்லை. அதுமட்டுமல்ல, எல்லா மேல்முறையீட்டு ஆணையங்களும் பணி ஓய்வு பெற்ற நீதிபதிகளின் தலைமையில் அமைய வேண்டும் என்றும் நினைக்கிறது. நீதித்துறையைப் போலவே, நிா்வாகமும் மேல்முறையீட்டு ஆணையங்களை இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளின் பணி ஓய்வுக்கால அடைக்கலமாகக் கருதுகிறது.

மேல்முறையீட்டு ஆணையங்களை ஒட்டுமொத்தமாகக் கலைக்காமல் அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்து சிந்திப்பதுதான் ஆக்கபூா்வ முடிவாக இருக்கும். குறைந்த செலவில் விரைந்து நீதி கிடைக்க உருவாக்கப்பட்ட வாய்ப்பு, தேவையில்லாத கௌரவ பிரச்னைகளால் கை நழுவுகிறது.

கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் இது குறித்து யாரும் கவலைப்படமாட்டாா்கள் என்று மத்திய அரசு நினைத்தால், அது தவறான அணுகுமுறை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com