நிதிநிலைமை அலசல்! | இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்த தலையங்கம்

நிதிநிலைமை அலசல்! | இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்த தலையங்கம்

 வழக்கமாக நிதியாண்டின் இறுதிக் காலாண்டில்தான் அடுத்த பட்ஜெட்டுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கும். அதற்கு மாறாக, மத்திய நிதியமைச்சகம் இப்போதே அதற்கான முஸ்தீபுகளைத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. அது மட்டுமல்ல, நிதியமைச்சரும் அவரது குழுவினரும் தற்போதைய நிதிநிலைமையால் உற்சாகம் அடைந்திருப்பதை அவர்களது தன்னம்பிக்கையும், அணுகுமுறையும் எடுத்துரைக்கின்றன.
 மத்திய அரசின், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - செப்டம்பர் மொத்த வரி வருவாய், கடந்த ஆண்டின் இதே மாதங்களைவிட 64.2% அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில், மொத்த செலவினங்கள் 9.9% தான் அதிகரித்திருக்கிறது. முதல் அரையாண்டில் காணப்படும் நிதிப்பற்றாக்குறையான ரூ.5,26,851 கோடி என்பது இந்த நிதியாண்டின் மொத்தப் பற்றாக்குறையில் 35% ஆகும். 2007 - 08-க்குப் பிறகு இந்த அளவுக்குக் குறைவான நிதிப்பற்றாக்குறையை அரசு பார்த்ததில்லை.
 எதிர்பார்ப்பைவிட அதிகமான வரி வருவாயும், வரிசாரா வருவாயும், தேவையில்லாத செலவினங்களின் கட்டுப்பாடும் நிதியாண்டின் முதல் பாதியில் பற்றாக்குறையைத் திறம்பட நிர்வகிக்க உதவியிருக்கின்றன. பட்ஜெட் திட்ட ஒதுக்கீடுகளில் ஏறத்தாழ ரூ.ஒரு லட்சம் கோடி செலவினத்தைக் குறைக்க முடியும் என்று நிதியமைச்சகம் எதிர்பார்க்கிறது. அதன் மூலம் வேறுபல தேவைகளின் செலவினங்களை எதிர்கொள்ள முடியும் என்றும் கருதுகிறது. 2021 - 22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் செலவினங்கள் ரூ.34.83 லட்சம் கோடி என்று கணக்கிடப்பட்டிருந்தது. அதில், முதல் ஆறு மாதங்களில் பட்ஜெட் மதிப்பீட்டில் 46.7% தான் (ரூ.16,26,017 கோடி) செலவாகியிருக்கிறது.
 செலவினங்களை அரசு முடக்கவில்லை என்றும், முறையான கண்காணிப்பின் மூலம் தேவையில்லாத செலவினங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. அதனால் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்ட 2020 - 21 நிதியாண்டுக்கான கடன் இலக்கு (ரூ.12.5 லட்சம் கோடி) அதிகரிக்காது என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.
 இந்தியாவின் நிதிநிலைமையில் வரவேற்கத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. கொள்ளை நோய்த்தொற்று தாக்கம் இல்லாத 2019 நிதியாண்டின் முதல் அரையாண்டைவிட மொத்த வரி வருவாய் 28.7% அதிகரித்திருப்பதற்கு இந்தியப் பொருளாதாரம் முறைப்படுத்தப்பட்டிருப்பது முக்கியமான காரணம். உயர் மதிப்பு செலாவணி செல்லாததாக்கப்பட்டது, சரக்கு சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது, பொதுமுடக்கம் ஆகியவற்றின் விளைவால் முறைசாரா வர்த்தகம் கணிசமாகக் குறைந்து, அமைப்பு ரீதியான வணிகத்தின் அளவு அதிகரித்திருக்கிறது.
 ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பிறகு பெரும்பாலான வர்த்தகம் முறையான கணக்கு வழக்குகளுடன் நடைபெறுவதால் அவை கண்காணிக்கப்பட்டு அதிகரித்த வரி வசூலைத் தருகின்றன. கார்ப்பரேட் வரி 23.8%-உம், வருமான வரி 28.7%-உம் 2019-இன் முதல் அரையாண்டைவிட அதிகமாக வசூலாகி இருக்கின்றன.
 வரி வசூல் அதிகரித்திருப்பதற்கு பெட்ரோல், டீசல் முக்கியமான காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. 2019 நிதியாண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடும்போது, மத்திய அரசின் கலால் வரி 79% (ரூ.1,71,684 கோடி) அதிகரித்திருக்கிறது. இவை இரண்டும்தான் மத்திய அரசின் வரி வருவாய் கணிசமாக அதிகரித்திருப்பதற்கான காரணங்களாக இருக்க முடியும்.
 அதிகரித்த வரி வருவாயைத் தொடர்ந்து, விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல நிவாரணங்களை அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. பெட்ரோல் விலையில் ரூ.5-உம், டீசல் விலையில் ரூ.10-உம் கலால் வரியில் குறைத்திருப்பதன் மூலம் அரசு ரூ.45,000 கோடி வரி வருவாயை இழக்கக் கூடும். அதேபோல சமையல் எண்ணெய்யின் விலையைக் கட்டுப்படுத்த இறக்குமதி வரிகளைக் குறைத்திருப்பதும், அடுத்த அரையாண்டில் வரி வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். ராபி பருவத்திற்காக உரங்களின் மீதான மானியம், அதிகரிக்கும் தடுப்பூசித் திட்டச்செலவு, பல அமைச்சகங்களின் உபரி செலவுகளுக்குத் தடை விலக்கம் போன்றவை நிதியாண்டின் இரண்டாவது பகுதியில் செலவினங்களை கடுமையாக அதிகரிக்கக்கூடும் என்பதையும் நிதியமைச்சகம் கருத்தில் கொண்டுதான் செயல்படுகிறது என்றும் நம்பலாம்.
 மத்திய அரசின் நிதிநிலைமை மீது அழுத்தம் அதிகரிக்கும்போது அதை எதிர்கொள்வதற்காக மூலதனச் செலவுகளை குறைத்து விடாமல் இருக்க வேண்டும். கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, 2021 - 22 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் பட்ஜெட் எதிர்பார்ப்பைவிட மூலதனச் செலவுகள் 38% அதிகரித்திருக்கின்றன. அதனால் கூடுதல் மூலதனச் செலவுகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசு வருவாய் செலவினங்களின் மீது கவனமாக இருந்தாக வேண்டும். பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு வரிச் சலுகைகள் எந்த அளவுக்குத் தேவையோ, அதேபோல மூலதனச் செலவுகளின் மூலம் மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதும் அவசியமாகிறது.
 மூலதனச் செலவுகளில் மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்களுடையது. அதனால் ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மாநிலங்கள், மத்திய அரசால் முன்மொழியப்படும் திட்டங்களில் கவனம் செலுத்தாமல் போனால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சி தாமதப்படும் அல்லது தோல்வியடையும். மத்திய அரசைப்போல மாநில அரசுகளும் தேவையில்லாத வருவாய் செலவினங்களைக் குறைத்து மூலதனச் செலவுகளை அதிகரிப்பதன் மூலம்தான் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது சாத்தியமாகும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com