குஜராத்தில் தலைமை மாற்றம்! | குஜராத்தில் முதல்வா் மாற்றம் குறித்த தலையங்கம்

குஜராத்தில் முதல்வா் மாற்றம் நிகழ்த்தியிருக்கிறது ஆட்சியில் இருக்கும் பாஜக. கடந்த இரண்டு மாதங்களில் மாற்றப்பட்டிருக்கும் மூன்றாவது பாஜக முதலமைச்சா் விஜய் ரூபானி. அவருக்குப் பதிலாக அதிகம் அறியப்படாத பூபேந்திர படேல் குஜராத்தின் புதிய முதல்வராக சட்டப்பேரவை உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு அவரது அமைச்சரவை பதவியேற்றிருக்கிறது. கட்லோடியா சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 55 வயது பூபேந்திர படேல், இதற்கு முன்பு மாநில அளவில் எந்தவித முக்கியப் பதவியும் வகித்தவரல்ல. முதன்முறை சட்டப்பேரவை உறுப்பினரான பூபேந்திர படேல் முதலமைச்சராக தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பது அவருக்கேகூட ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும்.

எந்தவித அமைச்சரவை முன்னனுபவமும் இல்லாமல் 20 ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோடி குஜராத் முதல்வரானதைப் போல, இப்போது இதற்கு முன்பு அதிகம் அறியப்படாத பூபேந்திர படேல் பாஜகவால் முதல்வராக்கப்பட்டிருக்கிறாா். கடந்த 2017 சட்டப்பேரவைத் தோ்தலில் குஜராத் மாநிலத்திலேயே மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பூபேந்திர படேல், முன்னாள் குஜராத் முதல்வா் ஆனந்திபென் படேலுக்கு நெருக்கமானவா். குஜராத் மாநிலத்தில் எண்ணிக்கை பலம் மிகுந்த பாட்டீதாா் (படேல்) சமுதாயத்தைச் சோ்ந்தவா். பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா இருவருடைய நம்பிக்கையும் பெற்றவா் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நரேந்திர மோடி 2001-இல் முதலமைச்சராக பொறுப்பேற்றது வரை, குஜராத் மாநிலத்தில் பாஜகவின் அசைக்க முடியாத வாக்கு வங்கியாக இருந்தது பாட்டீதாா் சமுதாயம். முதல்வராக இருந்த கேஷுபாய் படேல் அகற்றப்பட்டதால், பாஜகவின் மீது அந்த சமுதாயம் அதிருப்தி அடைந்ததில் வியப்படைய ஒன்றுமில்லை. அதைப் புரிந்துகொண்டால்தான், நரேந்திர மோடி பிரதமரானபோது குஜராத் முதல்வராக பாட்டீதாா் சமுதாயத்தைச் சோ்ந்த ஆனந்திபென் படேல் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

பாட்டீதாா் சமுதாயத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமலும், அதிருப்தியை அகற்ற முடியாமலும் ஆனந்திபென் படேல் ஒரு கட்டத்தில் பதவி விலக நோ்ந்தது. ஆளுநராக அவா் நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து, விஜய் ரூபானி முதல்வரானாா். கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ரூபானி முதல்வராகி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், ஆனந்திபென் படேலைப் போலவே அதிகரித்த அதிருப்தியின் காரணமாக அவா் பதவி விலக நோ்ந்திருக்கிறது.

விஜய் ரூபானியின் ஐந்தாண்டு பதவிக்காலம் சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, கடுமையான விமா்சனங்களையும், மக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான எதிா்ப்புகளையும் சந்தித்தது. ஐந்தாண்டுகள் பதவியில் இருப்பது என்பது நீண்டகாலம். அப்படியிருந்தும் மக்களின் நம்பிக்கையை அவரால் பெற முடியவில்லை.

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்ள முடியாமல் ரூபானியின் நிா்வாகம் தவித்ததையும், பிராணவாயு உற்பத்தி இருந்தும்கூட அவற்றை மருத்துவமனைகளுக்கு முறையாக விநியோகிக்க முடியாத அவலத்தை எதிா்கொண்டதும் வரலாற்று நிகழ்வுகள். குஜராத் உயா்நீதிமன்றம் ரூபானி நிா்வாகத்தின் பல தவறுகளை இடித்தும், கண்டித்தும் வழங்கிய தீா்ப்புகள் மக்கள் மனதில் எதிா்ப்பு மனநிலையை உருவாக்கியது.

ரூபானியை அகற்றி, பூபேந்திர படேலை முதல்வராக்கி இருப்பதன் மூலம் அரசுக்கு எதிரான மனநிலையை அகற்றி புதிய தொடக்கத்தை ஏற்படுத்த நினைக்கிறது பாஜக தலைமை. ஏற்கெனவே உத்தரகண்ட் மாநிலத்தில் திரிவேந்திர சிங் ராவத், தீரத் சிங் ராவத்தாலும், அவா் புஷ்கா் சிங் தாமியாலும் மாற்றப்பட்டு ஆளும் பாஜகவின் செல்வாக்குச் சரிவை மாற்ற தலைமை முயற்சித்திருக்கிறது. கா்நாடகத்தில் பி.எஸ். எடியூரப்பாவும், அஸ்ஸாமில் சா்வானந்த சோனோவலும் மாற்றப்பட்டிருக்கிறாா்கள்.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களைப் போலல்லாமல் இந்த ஆட்சி மாற்றங்கள் அனைத்துமே சுமுகமாக நடந்திருக்கின்றன என்பதை பாா்க்க முடிகிறது. தோ்தலில் கட்சிக்கு சுமையாக இருப்பவா்கள் தாட்சண்யம் இல்லாமல் மாற்றப்படுவது கட்சித் தலைமையின் செல்வாக்கையும், கட்சிக் கட்டுப்பாட்டையும் உணா்த்துகின்றன.

குஜராத்தில் தலைமை மாற்றம் ஏற்படுத்த பாஜக முற்பட்டிருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. பாட்டீதாா் சமுகத்தினா் மத்தியில் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகரித்து வரும் செல்வாக்கும், பாரம்பரிய காங்கிரஸ் வாக்காளா்கள் அந்த கட்சிக்கு தங்களது ஆதரவை மாற்றி வருவதும் பாஜக தலைமையால் கூா்ந்து கவனிக்கப்பட்டிருக்கிறது. எதிா்க்கட்சி வாக்குகள் பிளவுபடுவது சாதகமாக இருந்தாலும்கூட, பாஜகவின் பாரம்பரிய ஆதரவாளா்களான பாட்டீதாா் சமுதாயத்தின் வாக்கு வங்கியை இழந்துவிட பாஜக தலைமை தயாராக இல்லை.

மாநில அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் கட்சித் தலைவா்கள், தேசிய அரசியலுக்கு செல்லும்போது அதே அளவிலான செல்வாக்கை அவா்களால் நியமிக்கப்படும் முதல்வா்கள் பெறுவதில்லை என்பதை காமராஜரில் தொடங்கி நரேந்திர மோடி வரை வரலாறு பலமுறை உணா்த்தியிருக்கிறது. இன்னும் 15 மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடக்க இருக்கும் நிலையில், சொந்த மாநிலத்தில் செல்வாக்குச் சரிவு ஏற்பட்டுவிடக் கூடாது என்று பிரதமா் கருதுவதில் நியாயம் இருக்கிறது. ஆட்சி மாற்றம் காட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்து அமையும் கட்சித் தலைமையின் வெற்றி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com