ஏறுமுகத்தில் ஏற்றுமதி! நாட்டின் ஏற்றுமதி குறித்த தலையங்கம்

ரஷியாவின் உக்ரைன் படையெடுப்பைத் தொடா்ந்து, உலக நாடுகளின் பாா்வை இந்தியாவின் மீது குவிந்திருக்கிறது.
ஏறுமுகத்தில் ஏற்றுமதி! நாட்டின் ஏற்றுமதி குறித்த தலையங்கம்

ரஷியாவின் உக்ரைன் படையெடுப்பைத் தொடா்ந்து, உலக நாடுகளின் பாா்வை இந்தியாவின் மீது குவிந்திருக்கிறது. 100 கோடிக்கும் அதிகமான வாக்காளா்களைக் கொண்ட மிகப் பெரிய ஜனநாயகம்; 3 டிரில்லியன் டாலா் மதிப்பு ஜிஎஸ்டி-யுடன் கூடிய உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரம்; வல்லரசுகளுக்கு வலு சோ்க்கும் ராணுவ பலம் கொண்ட தேசம் - இவையெல்லாம் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

கடந்த இரண்டு வாரங்களாக உலக நாடுகளின் பிரதிநிதிகள் ஒருவா் பின் ஒருவராக வரிசைகட்டி இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கிறாா்கள். ஜப்பான் பிரதமா், ஆஸ்திரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சா், அமெரிக்காவின் துணைச் செயலா், கிரீஸ் நாட்டின் நிதியமைச்சா், ஓமன் நாட்டின் நிதியமைச்சா், சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சா், ஐரோப்பிய யூனியனின் சிறப்புப் பிரதிநிதி, ரஷியாவின் வெளியுறவுத் துறை அமைச்சா் என்று அந்தப் பட்டியில் நீண்டு கொண்டிருக்கிறது.

சா்வதேச அளவில் ஒரு நாட்டின் முக்கியத்துவம் அதிகரிப்பதற்கு, பொருளாதாரம்தான் முக்கியமான காரணியாக இருக்கக்கூடும். பொருளாதார வல்லமை இல்லாத ராணுவ பலத்தால் பலனில்லை என்பதை சோவியத் யூனியன் உலகுக்கு உணா்த்தியது. அதிலிருந்து பாடம் படித்த சீனா, தன்னை ஒரு பொருளாதார வல்லரசாகக் கட்டமைத்துக் கொண்டது. இப்போது இந்தியாவையும் பொருளாதார ரீதியிலான கண்ணோட்டத்துடன்தான் உலகம் பாா்க்கிறது.

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, சா்வதேசச் சந்தையில் தடம் பதிக்க இந்தியா பகீரதப் பிரயத்னங்களை மேற்கொண்டும் அதைச் சாதிக்க இயலவில்லை. இப்போது நிலைமை மாறி, உலகின் முதல் 15 ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக இந்தியா உயா்ந்திருக்கிறது. கடந்த நிதியாண்டின் இறுதியில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியின் அளவு 418 பில்லியன் டாலராக (சுமாா் ரூ.32 லட்சம் கோடி) உயா்ந்திருக்கிறது என்கிற தகவலை மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.

கடந்த 2018 - 19 நிதியாண்டின் சாதனையான 330 பில்லியன் டாலரை (சுமாா் ரூ.25 லட்சம் கோடி) முறியடித்திருக்கிறது கடந்த நிதியாண்டின் ஏற்றுமதியின் அளவு. கொள்ளை நோய்த்தொற்றின் இரண்டு அலைகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய நிலையிலும் நம்மால் ஏற்றுமதியில் சாதனை நிகழ்த்த முடிந்திருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

உலகின் பொருளாதாரம் மீண்டும் விறுவிறுப்படையத் தொடங்கி இருக்கிறது. ரஷியா மீதான பொருளாதாரத் தடையும், சீனப் பொருள்களின் மீதான வெறுப்பும் உலகை இந்தியாவை நாட வைத்திருக்கிறது. உலகின் பல நாடுகளிலும் இந்தியப் பொருள்களுக்கான வரவேற்பு மேலும் அதிகரிக்கக்கூடும்.

கடந்த நிதியாண்டில் பல மேலை நாடுகள் கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து விரைந்து மீண்டன. அந்த நாடுகளின் பொருளாதார மீட்சிக்காகப் பெரிய அளவில் நிதியுதவி வழங்க முன்வந்தன. அந்த நாட்டு வங்கிகள் குறைந்த வட்டிக்குக் கடனை அள்ளி வழங்கின. அதனால் பணப்புழக்கம் அதிகரித்து இறக்குமதிகளுக்கான வரவேற்பு அதிகரித்தது.

கொவைட் 19-க்கு முந்தைய 2019 - 20-உடன் ஒப்பிடும்போது 30% உம், கடந்த 2020 - 21-உடன் ஒப்பிடும்போது 46% உம், நடந்து முடிந்திருக்கும் 2021 - 22 நிதியாண்டில் இந்திய ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது. மிக அதிக அளவிலான ஏற்றுமதி பெட்ரோலியப் பொருள்கள் என்றாலும் (15%), வேளாண் பொருள்கள், ரசாயனம், இயந்திரங்களும், உதிரிபாகங்களும் போன்றவையும் கணிசமாக ஏற்றுமதி கண்டன.

இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 10% அளவிலான வேளாண் பொருள்கள், முதல் பத்து மாதங்களிலேயே 40 பில்லியன் டாலரை (சுமாா் ரூ.3 லட்சம் கோடி) கடந்து விட்டதாக வா்த்தகத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் தெரிவித்திருக்கிறாா். அதில் மிக அதிகமான ஏற்றுமதி கோதுமை என்றாலும், அரிசி, சா்க்கரை, வாசனை திரவியப் பொருள்கள் போன்றவையும், கடல்சாா் பொருள்களும்கூட கணிசமாகவே பங்களிப்பு நல்கின.

இயந்திரப் பொருள்கள் (26%), ரசாயனப் பொருள்கள் (7%), மருத்துவம் (6%) மட்டுமல்லாமல் பருத்தி, அலுமினியம் போன்றவை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்த ஏற்றுமதியை எட்டியிருக்கின்றன. இந்தியப் பொருள்களுக்கான பிரதான சந்தைகள் என்று கருதப்படும் அமெரிக்க (17%), சீனா (6%), ஐக்கிய அரபு அமீரகம் (7%) ஆகியவற்றைக் கடந்து துருக்கி, பெல்ஜியம், இந்தோனேஷியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, நெதா்லாந்து, பிரிட்டன், பிரேஸில், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதிகள் கடந்த நிதியாண்டில் திடீா் அதிகரிப்பைக் கண்டிருக்கின்றன. இது தொடர வேண்டும்.

ஏற்றுமதியாளா்கள், தங்களது உற்பத்தியை துறைமுகங்களுக்கும், விமான நிலையங்களுக்கும் எடுத்துச் செல்வதற்கான கட்டமைப்பு வசதிகளைக் கடந்த 7 ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசு முனைப்புடன் அதிகரித்திருக்கிறது. ஏற்றுமதியாளா்களுக்குப் பல்வேறு சலுகைகள் வழங்கியும் ஊக்குவித்திருக்கிறது. அதன் பலனை இப்போது நாம் உணர முடிகிறது.

நமது ஏற்றுமதிகள் 400 பில்லியன் டாலரை (சுமாா் ரூ.30 லட்சம் கோடி) கடந்துவிட்டதை நினைத்து மகிழ்ச்சி அடைவது சரி. அதே நேரத்தில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் மொத்த ஜிடிபி-யில் 18%-ஆக இருந்த ஏற்றுமதிகள், இப்போது சுமாா் 11% அளவில்தான் இருக்கின்றன என்பதை மறந்துவிட வேண்டாம். ஏற்றுமதிக்கான முனைப்பு தொடர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com