அருங்'காட்சி'! | 'பிரதான் மந்திரி சங்க்ரஹாலயா' என்கிற பிரதமர்களின் அருங்காட்சியகம் குறித்த தலையங்கம்

அருங்'காட்சி'! | 'பிரதான் மந்திரி சங்க்ரஹாலயா' என்கிற பிரதமர்களின் அருங்காட்சியகம் குறித்த தலையங்கம்

தலைநகர் தில்லியில் உள்ள தீன் மூர்த்தி வளாகத்தில் ரூ.27 கோடி செலவில் அமைக்கப்பட்டிருக்கும் "பிரதான் மந்திரி சங்க்ரஹாலயா' என்கிற பிரதமர்களின் அருங்காட்சியகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருக்கிறார். ஜவாஹர்லால் நேரு உள்ளிட்ட முன்னாள் பிரதமர்களுக்கு இன்றைய ஆளுங்கட்சியும், பிரதமரும் போதிய மரியாதை அளிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டைப் பொய்யாக்கும் விதத்தில் மிகப் பிரம்மாண்டமாக அந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டிருக்கிறது.
 தீன் மூர்த்தி பவனுக்கு இந்திய வரலாற்றில் தனிச் சிறப்பு உண்டு. 1911-இல் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின்போது தலைநகரை கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டது. அப்போது கட்டப்பட்டவற்றில் ஒன்றுதான் "ஃபிளாக் ஸ்டாஃப் ஹெளஸ்' என்று அப்போது அழைக்கப்பட்ட இப்போதைய தீன் மூர்த்தி பவனம்.
 இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், அது முதலாவது பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவின் அதிகாரபூர்வ இல்லமாக மாறியது. 1964 மே மாதம் அவர் மறைவது வரை, பிரதமர் ஜவாஹர்லால் நேரு அங்குதான் வாழ்ந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, தீன் மூர்த்தி பவன் வளாகத்தில் நேரு அருங்காட்சியகம், ஜவாஹர்லால் நேரு நினைவு நூலகம் உள்ளிட்டவை அங்கே இயங்குகின்றன. தில்லியின் மையப் பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவில் விரிந்து இருக்கும் தீன் மூர்த்தி பவனம் வளாகத்தில்தான் நேரு கோளரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.
 அதன் ஒரு பகுதியாக இந்தியப் பிரதமர்களுக்கான அருங்காட்சியகம் அமைப்பது என்று நரேந்திர மோடி அரசு முடிவெடுத்தபோது அதற்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. பண்டித நேருவின் தனித்துவத்தை அழிப்பதற்கு மோடி அரசு திட்டமிடுவதாக விமர்சனங்கள் எழுந்தன. பண்டித ஜவாஹர்லால் நேருவின் முக்கியத்துவத்துக்கு எள்ளளவும் குறைவு ஏற்படுத்தாமல், ஏனைய பிரதமர்களின் பங்களிப்புக்கு உரிய மரியாதை வழங்கும் விதத்தில் அருங்காட்சியகம் அமைத்ததற்குப் பிரதமர் மோடியைப் பாராட்ட வேண்டும்.
 "அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள ஜனநாயகத்தின் இலக்குகளை அடைவதற்கு ஒவ்வொரு பிரதமரும் அவரவர் அளவில் பங்களிப்பு அளித்திருக்கிறார்கள். அவர்களை நினைவுகூர்வதன் மூலம் சுதந்திர இந்தியாவின் பயணம் குறித்து அறிந்துகொள்ள முடியும். சுதந்திரத்திற்குப் பிறகு பொறுப்பேற்ற ஒவ்வோர் அரசும், தற்போது நாம் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகித்திருக்கிறது' என்கிற பிரதமர் மோடியின் கூற்று, குறுகிய அரசியல் கண்ணோட்டத்திலிருந்து விலகி நின்று பார்க்கும் தேசியத் தலைவரின் பரந்து விரிந்த பார்வை.
 பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக் காட்டியிருக்கும் இன்னொரு கருத்தும் கவனத்தை ஈர்க்கிறது. இந்தியப் பிரதமர்கள் எல்லோருமே பெரும் பணக்காரர்களோ, பாரம்பரியப் பின்னணியைக் கொண்டவர்களோ அல்ல. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஏழைக் குடும்பங்களிருந்தும், விவசாயக் குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் பிரதமர்களாகி இருக்கிறார்கள். அது இந்திய ஜனநாயகத்தின் பெரும் பாரம்பரியத்துக்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை நினைத்தால் பெருமிதம் மேலெழுகிறது.
 லால் பகதூர் சாஸ்திரி சீதனமாகப் பெற்ற "ராட்டை', சரண் சிங்கின் "நாள்குறிப்புகள்', மொரார்ஜி தேசாயின் "பகவத் கீதை' புத்தகம் - ருத்ராட்ச மாலை, வாஜ்பாயின் "பாரத ரத்னா' விருது, பி.வி. நரசிம்ம ராவின் "மூக்குக் கண்ணாடி' என்று முன்னாள் பிரதமர்களின் நினைவாகப் பல பொருள்கள் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அந்தந்தப் பிரதமர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள், அன்பளிப்புகள் போன்றவையும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
 இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், நரேந்திர மோடி அரசின் அரசியல் கலந்துவிடாத பெருந்தன்மை. ஜவாஹர்லால் நேரு வசித்த தீன் மூர்த்தி பவனத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது மட்டுமல்ல, அவரது பொருள்கள், புத்தகங்கள், வசித்த பகுதிகள், அலுவலக அறைகள் எதுவுமே மாற்றம் செய்யப்படாமல் அப்படியே தனிப்பகுதியாகத் தொடர்கின்றன. தொடர்ந்து முதல் 16 ஆண்டுகள் பிரதமராக இருந்த பண்டித நேருவின் தனித்துவத்துக்கு மரியாதை செலுத்தும் விதத்தில், அதைப் பாதுகாக்க நினைத்ததற்காகப் பிரதமர் மோடியைப் பாராட்டத் தோன்றுகிறது.
 பண்டித ஜவாஹர்லால் நேருவில் தொடங்கி லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண் சிங், ராஜீவ் காந்தி, வி.பி. சிங், சந்திரசேகர், பி.வி. நரசிம்ம ராவ், தேவெ கெளட, ஐ.கே. குஜ்ரால், அடல் பிகாரி வாஜ்பாய், டாக்டர் மன்மோகன் சிங் என்று ஒவ்வொரு பிரதமரும் தேசத்தின் வளர்ச்சியில் அளித்திருக்கும் பங்களிப்புக்கு மரியாதை செலுத்தும் விதத்திலும், அவர்களது நினைவைப் போற்றும் வகையிலும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருப்பது வருங்கால சந்ததியினருக்குக் கடந்த காலம் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமையும்.
 மொழி, இனம், மதம், சமூக அந்தஸ்து, உணவுப் பழக்கம், அரசியல் கொள்கைகள் என்று நாம் பிரிந்து இருந்தாலும், இந்தியன் என்கிற புள்ளியில் இணைந்து நிற்கும் கலாசாரப் பிணைப்பின் அடையாளம்தான் இந்தியப் பிரதமர்களின் அருங்காட்சியகம்.
 முன்னாள் பிரதமர்கள் பலரின் குடும்பத்தினரும், வாரிசுகளும் மகிழ்ச்சியுடனும், பூரிப்புடனும் கலந்துகொண்ட நிகழ்வாக அது அமைந்தது. எல்லோரும் கலந்துகொண்ட அந்த விழாவை, சோனியா காந்தியும் குடும்பத்தினரும் புறக்கணித்திருக்க வேண்டாம்! அது என்ன மனோபாவமோ?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com