தேவைதான் இந்தக் கடிவாளம்! தொண்டு நிறுவனங்கள் பெறும் நன்கொடைகள் குறித்த தலையங்கம்

இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட, ஜனநாயக ரீதியில் செயல்பட்டு வரும் நாட்டில் போலி தன்னார்வ நிறுவனங்கள் கண்காணிக்கப்படாவிட்டால் பாதகமான விளைவுகள் ஏற்படும்.
தேவைதான் இந்தக் கடிவாளம்! தொண்டு நிறுவனங்கள் பெறும் நன்கொடைகள் குறித்த தலையங்கம்

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓ) வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் பெறுவதை ஒழுங்குபடுத்தும் நோக்கில் 2010-இல் இயற்றப்பட்ட வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தில் கடந்த 2020-இல் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்கள் செல்லத்தக்கதுதான் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது. 

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பதிவு செய்யும்போது அல்லது புதுப்பிக்கும்போது உறுப்பினர்களின் ஆதார் அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும், கடவுச்சீட்டு நகலைச் சமர்ப்பிக்க வேண்டும், வெளிநாட்டு நன்கொடையை வேறு ஒருவருக்கு மாற்றக்கூடாது, தில்லி பாரத ஸ்டேட் வங்கிக் கிளை மூலமாகத்தான் நன்கொடைகளைப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் புதிய சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. இதை எதிர்த்து சில தன்னார்வ அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டன. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், தினேஷ் மகேஷ்வரி, சி.டி. ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆதார் அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதைத் தவிர மற்ற எல்லாத் திருத்தங்களும் செல்லத்தக்கவை என்று உத்தரவிட்டுள்ளது. தேசத்தின் ஒருமைப்பாடு, இறையாண்மை, பாதுகாப்பு ஆகியவற்றைக் காக்க இந்த சட்டத் திருத்தங்கள் தேவைதான் என்றும், இத்தகைய சட்டத் திருத்தம் கொண்டுவர நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பெறும் நன்கொடை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது; பல நிறுவனங்கள் எந்த நோக்கத்துக்காகப் பதிவு செய்யப்பட்டதோ, அதற்காக நன்கொடைகளைச் செலவு செய்வதில்லை; முறையான கண்காணிப்பை உறுதி செய்யவே ஒரே வங்கிக் கிளையின் மூலமே நன்கொடைகளைப் பெற வேண்டும் என்ற திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது; குறிப்பிட்ட வங்கிக் கிளைகளில் வெவ்வேறு கணக்குகளின் மூலம் நன்கொடையைப் பயன்படுத்தலாம் உள்ளிட்ட திருத்தங்கள் சரியான அணுகுமுறைதான் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தொண்டு நிறுவனங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வெளிநாட்டவருக்கு ஆதாரமாக கடவுச்சீட்டை ஏற்கும்போது, அதையே இந்தியருக்கும் ஏன் ஏற்கக் கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்தியர்களும் ஆதாருக்கு பதிலாக கடவுச்சீட்டை அடையாள ஆதாரமாக அளிக்கலாம் என்றும் உத்தரவிட்டனர்.

இந்தியாவில் சுமார் 33 லட்சம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. நமது நாட்டின் மக்கள்தொகையான சுமார் 138 கோடி பேரில் 400 பேருக்கு ஒரு தொண்டு நிறுவனம் செயல்படுவதாக மற்றொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. "நீதி ஆயோக்' இணையதளத்தில் 1,00,873 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரசின் கணக்குப்படியே, 2016-17, 2017-18 ஆகிய இரு ஆண்டுகளில், 22,400 பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் ரூ.58 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற்றுள்ளன. அப்படியெனில், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் திரட்டப்படும் நன்கொடை எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்பதை நாம் ஊகிக்கலாம்.

பல தொண்டு நிறுவனங்கள் நன்கொடை பெறும் நோக்கத்துடன் தொடங்கப்படுகின்றன. வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்ப்பவர்களும் அந்த சொத்தைப் பாதுகாக்க சில அறக்கட்டளைகளைத் தொடங்குகின்றனர். இதுபோன்ற தொண்டு நிறுவனங்களில் அறங்காவலர்களாக பெரும்பாலும் குடும்பத்தினரும், நண்பர்களுமே பொறுப்பில் இருக்கிறார்கள்.

நமது நாட்டில் அண்மைக்காலமாக எந்த ஒரு திட்டத்தைத் தொடங்கினாலும் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிவிடுகிறது. இதுபோன்ற போராட்டங்களின் பின்னணியில் வெளிநாட்டு நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் உள்ளன என்பது காலங்காலமாகக் கூறப்படும் குற்றச்சாட்டு ஆகும்.
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நன்கொடைகளைப் பெறும் நிறுவனங்கள் முறையான கணக்குகளைப் பராமரிப்பதில்லை. 

மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டிய வரவு - செலவு அறிக்கையைச் சமர்ப்பிப்பதில்லை. இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டுதான் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவதில் கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்தது. 

மேலும், நமது நாட்டு சட்டங்களை மீறியதாக 2011 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 20,600 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பதிவை ரத்து செய்துள்ளது மத்திய அரசு. அதே போல, 2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 1,811 நிறுவனங்களின் பதிவை ரத்து செய்துள்ளதாகவும், 2019 முதல் கடந்த பிப்ரவரி வரை 2,309 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் அண்மையில் தெரிவித்தார்.

இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட, ஜனநாயக ரீதியில் செயல்பட்டு வரும் நாட்டில் போலி தன்னார்வ நிறுவனங்கள் கண்காணிக்கப்படாவிட்டால் பாதகமான விளைவுகள் ஏற்படும். இதை உச்சநீதிமன்றம் அரசின் திருத்தங்களை அங்கீகரித்துள்ள நிலையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீதான முறையான கண்காணிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com