வந்தார், சென்றார்! | போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் குறித்த தலையங்கம்

வந்தார், சென்றார்! | போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் குறித்த தலையங்கம்

 பிரிட்டனின் பிரதமரான பிறகு இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தந்த போரிஸ் ஜான்சன், ஏப். 21, 22 ஆகிய தேதிகளில் குஜராத் மாநிலம், அகமதாபாதிலும், புதுதில்லியிலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 22-ஆம் தேதி அவரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். பிரிட்டனில் பல்வேறு எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்திய விஜயம் சற்று ஆறுதலை அளித்திருக்கும் என்று கருதலாம்.
 தனது அரசுமுறைப் பயணத்தின்போது அகமதாபாத் சென்ற பிரிட்டன் பிரதமர், சபர்மதி ஆசிரமத்தில் நீண்டநேரம் செலவிட்டார். அதே போல, அக்ஷர்தாம் ஆலயத்திற்கும் அமைதி தேடி விஜயம் செய்தார். இந்தியா மீதும், இந்தியர்கள் மீதும் போரிஸ் ஜான்சனின் பார்வை ஏனைய ஐரோப்பியப் பார்வையிலிருந்து வேறுபடுவது புதிதொன்றுமல்ல.
 மாறி வரும் உலக அரசியல் சூழலில் இந்தியாவைத் தனது பக்கம் அணிசேர்க்கும் நோக்கம் பிரிட்டன் பிரதமரின் வருகைக்கு இருந்தது. குறிப்பாக, உக்ரைன் - ரஷியா மோதலின் பின்னணியில் அவரது அரசுமுறைப் பயணத்தை நாம் பார்க்க வேண்டும். நேட்டோ நாடுகளின் நிலைப்பாடுகளுக்கு எதிராக ரஷியாவுடன் இந்தியா நட்புறவு கொண்டிருப்பது அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. இந்தியாவைத் தங்கள் அணியில் இணைக்கும் முயற்சியாக ஏற்கெனவே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு வந்து பிரதமரை சந்தித்தார். அதன் நீட்சியாகத்தான் இப்போதைய பிரிட்டன் பிரதமரின் விஜயத்தையும் பார்க்கத் தோன்றுகிறது.
 முன்பு போல இந்தியாவை மிரட்டிப் பணிய வைக்க முடியாது என்பதை உலக நாடுகள் தற்போது உணர்ந்து கொண்டு விட்டன. இதனை பிரிட்டன் பிரதமருடனான பேச்சுவார்த்தைகள் உறுதிப்படுத்தின. அதே நேரத்தில், ரஷியாவுடனான இந்தியாவின் நட்புறவு, குற்றம் சாட்ட முடியாத நிலையில் இருப்பதை பிரதமர் போரிஸ் ஜான்சன் வேறுவழியில்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
 "ரஷிய விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு அனைவருக்கும் தெரியும். ரஷியாவுடனான இந்தியாவின் வரலாற்று ரீதியான உறவை மதிக்கிறோம். உக்ரைன் போர் தொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் பலமுறை தொலைபேசி வாயிலாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பதை குறிப்பிட வேண்டும். உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளாத அதே வேளையில், ரஷியாவுடனான ஒப்பந்தங்களையும் உறவையும் இந்தியா துண்டித்துக்கொள்ள முடியாத நிர்ப்பந்தத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது' என்கிற பிரதமர் ஜான்சனின் செய்தியாளர்கள் சந்திப்பு உரை அதை உறுதிப்படுத்துகிறது.
 ரஷிய - உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நடுநிலைப் பார்வையை உலக நாடுகள் ஏற்கத் தொடங்கிவிட்டன என்பதை பிரிட்டன் பிரதமரின் பேச்சு உணர்த்துகிறது. இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும். பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமாக, தூதரக ரீதியில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. அதே சமயம், அனைத்து நாடுகளின் இறையாண்மைக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும்' என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.
 பிரிட்டன் பிரதமரின் வருகை, இரு நாடுகளும் பல துறைகளில் கூட்டுறவை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. இந்த வருகையின்போது அணுசக்தித் துறை, எரிசக்தித் துறை தொடர்பான இரு முக்கியமான ஒப்பந்தங்கள் உள்ளிட்ட ஆறு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டிருக்கின்றன.
 ரஷியாவுடனான இந்தியாவின் நெருக்கத்தைக் குறைக்க, உள்நாட்டில் போர் விமானங்கள் தயாரிக்கும் இந்திய முயற்சிக்கு உதவுவதாகவும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி அளித்திருக்கிறார். இரு நாடுகளுக்கிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அடுத்த சில மாதங்களில் கையொப்பமாகும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
 எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், வர்த்தகம், ராணுவப் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, விண்வெளிஆராய்ச்சி போன்ற பல துறைகளில் இந்தியாவும் பிரிட்டனும் இணைந்து செயல்படுவதற்குக் கூடுதலான வாய்ப்புகள் காணப்படுவதாகக் கூறியிருக்கிறார் வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷவர்தன் ஷிரிங்லா. இதையே பிரிட்டன் பிரதமரும் தனது உரையில் குறிப்பிட்டார்.
 தகவல் தொழில்நுட்பம் போன்ற சில துறைகளில் பிரிட்டனில் திறமையான பணியாளர்களுக்குத் தேவை இருப்பதாகவும், அதனை இந்திய இளைஞர்களால் நிரப்ப முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனமும் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட்டும் இணைந்து கரோனாவுக்கு எதிராக இந்தியாவில் தயாரித்த "கோவிஷீல்ட்' தடுப்பூசியையே தான் செலுத்திக் கொண்டதாகவும் போரிஸ் ஜான்சன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
 பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகையை, தனது நிலைப்பாடுகளை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பாக இந்தியாவும் பயன்படுத்திக் கொண்டது. இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத அமைப்புகள் பிரிட்டன் மண்ணிலிருந்து செயல்பட அனுமதிக்கக் கூடாது என்ற பிரதமர் மோடியின் வேண்டுகோளை பிரிட்டன் ஏற்றது.
 இந்தியாவில் பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டுத் தப்பிச் சென்ற சிலர் பிரிட்டனில் அடைக்கலமாகி இருப்பதையும் இந்தியா சுட்டிக்காட்டியது.
 பிரிட்டனில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு தடையில்லாத நுழைவு அனுமதி வழங்குவதில் காணப்படும் தயக்கம் இருநாட்டு உறவுகளில் தொடரும் அவநம்பிக்கையின் அடையாளம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com