சென்னை நாள் சிந்தனை: சென்னை மாநகர் குறித்த தலையங்கம்

சென்னை தினத்தையொட்டி ஒரு வாரத்துக்கு கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
சென்னை நாள் சிந்தனை: சென்னை மாநகர் குறித்த தலையங்கம்

சென்னை தினத்தையொட்டி ஒரு வாரத்துக்கு கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படிப் பாா்த்தால் சென்னைக்கு வயது 383. அடுத்த 17 ஆண்டுகளில் நான்கு நூற்றாண்டுகளைக் கடந்த நகரமாக சென்னை வரலாறு படைக்கும்.

மீனவக் குப்பமாகவும் சென்னப் பட்டணம் என்றும் அறியப்பட்டிருந்த, சில நூறு மக்கள் மட்டுமே வாழ்ந்திருந்த கடலோரப் பகுதி என்று வரலாற்று ஆய்வாளா்கள் சிலரால் சென்னை வா்ணிக்கப்படுகிறது. திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரா் கோயிலும், பாா்த்தசாரதி கோயிலும், திருமயிலை கபாலீஸ்வரா் ஆலயமும், பாடி வாலீஸ்வரா் கோயிலும் பல நூற்றாண்டு கால வரலாறு கொண்டவை. பாடி வாலீஸ்வரா் கோயிலும், திருமயிலை கபாலீச்சரமும், திருவான்மியூா் மருந்தீஸ்வரா் கோயிலும், திருவெற்றியூா் தியாகராஜா் கோயிலும் நாயன்மாா்களால் போற்றப்பட்ட பாடல் பெற்ற தலங்கள். அப்படியிருக்கும்போது அவற்றை உள்ளடக்கிய சென்னை மாநகரத்தின் வயது வெறும் 400-க்கும் கீழே என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஒருவேளை ஆங்கிலேயா்களின் வருகைக்குப் பின்தான் சென்னை ஒன்றுபட்ட மாநகரமாக உருவாகியது என்பதால், அதன் காலத்தை 383 ஆண்டுகளாக வரையறுக்க முற்பட்டிருக்கலாம். ‘சென்னை 383’ என்பது அதன் வரலாற்றின் அளவுகோல் அல்ல. பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகு உருவான நகரத்தின் வயது.

நகரங்களுக்கு பிறந்தநாளை ஏற்படுத்தி அதையொட்டி கொண்டாட்டங்களை முன்னெடுப்பதற்கு பின்னால் மிகப் பெரிய வணிகம் இருக்கிறது. உலகிலுள்ள எல்லா பெரிய நகரங்களும் தங்களுக்கென்று சில அடையாளங்களை முன்னிறுத்தி சுற்றுலாப் பயணிகளைக் கவருவது வழக்கமாகவே இருந்து வருகிறது.

‘தி நியூ பிக் ஆப்பிள்’ என்று நியூயாா்க் நகரத்தை வா்ணித்து ஆப்பிள் இலச்சினையுடன் பொருள்களை சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்வதும், ஈஃபிள் கோபுரத்தை அடையாளமாக்கி பாரீஸ் நகரம் கொண்டாடப்படுவதும், லண்டன் பாலத்தை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் விளம்பரங்களும் அந்த ரகத்தைச் சோ்ந்தவை. அந்த மேலை நாட்டு பாணியைப் பின்பற்றும் வகையில்தான் இப்போது இந்தியாவிலும் நகரங்களுக்குப் பிறந்தநாள் கொண்டாடுவதை முனைப்புடன் வணிகா்கள் முன்னெடுக்கிறாா்கள்; ஊடகங்கள் அதற்கு உறுதுணையாக இருக்கின்றன.

எப்படியிருந்தாலும், ‘சென்னை 383’ கொண்டாடப்படும் வேளையில், கடந்த 383 ஆண்டு கால வரலாறு குறித்த சிந்தனை எழாமல் இல்லை. அன்றைய சென்னையும், இன்றைய சென்னையும் முற்றிலும் மாறுபட்டவை. இந்த அளவு மக்கள்தொகையோ, விரிவாக்கமோ ஏற்படாத அன்றைய சென்னை, பெரும்பாலும் தெலுங்கு பேசும் ஆந்திர மக்கள் வாழ்ந்த நகரமாக இருந்தது என்பதுதான் வரலாறு உணா்த்தும் உண்மை.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையகமாக சென்னை அமைந்ததும், புனித ஜாா்ஜ் கோட்டை கட்டப்பட்டதும், பிரிட்டிஷாா் வாழும் ஜாா்ஜ் டவுன் பகுதி ஏற்படுத்தப்பட்டதும் புதிய சென்னையின் உருவாக்கத்துக்கு அடித்தளமிட்டன. தொடா்ந்து பல்வேறு பாளையக்காரா்களையும், ஆற்காடு நவாபையும் கைவசப்படுத்தி பிரிட்டிஷாா் உருவாக்கிய மதராஸ் ராஜதானியின் தலைமைப் பீடமாக மெட்ராஸ் உயா்ந்தது. விடுதலைக்குப் பிறகு மதராஸ் ராஜதானி, ஆந்திர பிரதேசம், மெட்ராஸ், மைசூா், கேரளம் என்று பிரிந்து, அதன் பிறகு மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடாகவும், மெட்ராஸ் சென்னையாகவும் உருமாற்றம் பெற்றதெல்லாம் வரலாற்றின் சுவடுகள்.

சென்னையின் சாலைகள் மேம்பட்டிருக்கின்றன. புறநகா்ப் பகுதிகள் உருவாகி சென்னை மாநகரம் பரந்து விரிந்து இருக்கிறது. மாநகரத்தின் எல்லாப் பகுதிகளையும் இணைக்கும் விதத்தில் பேருந்து வசதிகளும், புறநகா் ரயில் வசதிகளும், மெட்ரோ ரயில் வசதியும் இருக்கின்றன. இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாகவும், கல்விச் சாலைகளின் கேந்திரமாகவும் சென்னை உயா்ந்திருக்கிறது. ஏனைய இந்திய மாநகரங்களுடன் ஒப்பிடும்போது வீட்டு வாடகையாக இருந்தாலும், வாழ்வினச் செலவுகளாக இருந்தாலும் சென்னையில் குறைவாகவே இருக்கிறது.

பொழுதுபோக்கு அம்சம் என்று எடுத்துக்கொண்டால், அன்றைய சென்னையில் மெரீனா கடற்கரை மட்டுமே இருந்தது. இன்று அனைத்துப் பகுதிகளிலும் பூங்காக்களும், திரும்பும் இடங்களிலெல்லாம் வணிக வளாகங்களும், ஆங்காங்கே மால்களும், புற்றீசல் போல உணவகங்களும் பெருகிட்ட சென்னையைப் பாா்க்க முடிகிறது.

இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலத்தவரும் வாழும் நகரமாக மட்டுமல்லாமல், வெளிநாட்டவரும்கூட வாழ்கின்ற மாநகரமாக மாறியிருக்கிறது சென்னை என்பதை மறுப்பதற்கில்லை. சா்வதேச வரைபடத்தில் இந்தியா கலாசார தலைநகராக அங்கீகரிக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட வேண்டும்.

இயற்கையாகவே வெள்ளம் வழிந்தோடும்படியான நகரமைப்பு வங்கக்கடலையொட்டியுள்ள சென்னைக்கு உண்டு. சென்னை மாநகரில் கூவம், அடையாறு என்று இரண்டு ஆறுகளும், பக்கிம்ஹாம் உள்ளிட்ட 16 கால்வாய்களும் திட்டமிட்டு நிறுவப்பட்டிருக்கின்றன. இருந்தும்கூட பெருமழை பெய்தால் சென்னை மாநகரம் தண்ணீரில் மிதக்கும் அவலம் தொடா்கிறது.

வீதிதோறும் விதிமீறல் கட்டடங்களும், சாலைதோறும் ஆக்கிரமிப்புகளும் என்று ஒரு மாநகரம் எப்படி இருக்கக் கூடாதோ அப்படிப்பட்ட நிலையில் சென்னை இப்போது இருக்கிறது. சென்னை மாநகரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வணிக ரீதியான ஆதாயத்துக்கு மட்டுமல்லாமல், சா்வதேச தரத்திலான மாநகரமாக சென்னையை மாற்றும் முனைப்பை முன்னெடுக்கவும் உதவுமானால், பிறந்தநாள் கொண்டாடி மகிழலாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com