பண்டிகைக் கால கொள்ளை!|தனியார் பேருந்துகள் கட்டணங்கள் குறித்த தலையங்கம்

பண்டிகைக் கால கொள்ளை!|தனியார் பேருந்துகள் கட்டணங்கள் குறித்த தலையங்கம்

 பணியிடமாற்றமும், புலம்பெயர்தலும் தவிர்க்க முடியாதவை என்கிற நிலையில், விடுமுறைக் காலம், பண்டிகைக் காலம் வந்துவிட்டால் பலரும் சொந்த ஊருக்குச் செல்ல விழைவது இயல்பு. அவர்களது பயணத்தை சுலபமாக்குவதும், இனிமையாக்குவதும் மத்திய - மாநில அரசுகளின் கடமை.
 அக்டோபர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் காணப்படும் பல்வேறு பண்டிகைகளும், கோடைகாலத்தில் கல்விச்சாலைகளுக்கு வழங்கப்படும் விடுமுறைகளும் புலம்பெயர்ந்த அனைவரும் எதிர்நோக்கிக் காத்திருக்கும் தருணங்கள். குழந்தைகளுடன் சொந்த ஊருக்குத் திரும்பி, பெற்றோருடனும், உறவுகளுடனும் ஒருசில நாள்களாவது குதூகலமாகக் கூடி மகிழ்ந்து பணியிடங்களுக்குத் திரும்ப விரும்பம் தருணம் அது. அந்த வாய்ப்பை மறுப்பதுபோல அமைகிறது பேருந்து, ரயில், விமான கட்டணங்களும், போதுமான அளவில் வாகனங்கள் இயக்கப்படாமல் இருப்பதும்.
 பண்டிகைக் காலங்களில் மிக அதிகமாக பாதிக்கப்படுவது தென்னிந்திய மாநிலங்கள்தான். இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு தேடி இங்கிருந்து லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்புவதற்கு விடுமுறைக் காலமும் பண்டிகை நாள்களும்தான் உதவுகின்றன. ஆனால், போதுமான அளவில் அதற்கான போக்குவரத்து வசதிகள் இல்லை. வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக வளைகுடா நாடுகளிலும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் இருந்து இந்தியா திரும்ப விழைபவர்களும் போதுமான விமான சேவை இல்லாமல் இருப்பதால் கடுமையான கட்டணங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது.
 ரயில்வே துறையும், போக்குவரத்து துறையும், விமான நிறுவனங்களும் கூடிப்பேசி முடிவெடுத்தது போல, விடுமுறை காலப் பயணத்தை கொள்ளை லாபம் ஈட்ட பயன்படுத்துகின்றன. பேருந்து, விமானப் பயணக் கட்டணங்கள் பலமடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. பயணிக்க விழைபவர்கள் கட்டணக் கொள்ளையால் சுரண்டப்படுகிறார்கள்.
 கடந்த மூன்று ஆண்டுகளாக கொள்ளை நோய்த்தொற்று பாதிக்கப்பட்டிருந்ததால் பல குடும்பங்கள் சொந்த ஊருக்கு வரவில்லை. பிற மாநிலங்களில் இருந்து ஊருக்குத் திரும்ப விழைந்தவர்களில் பெரும்பாலானோருக்கு ரயிலில் முன்பதிவு கிடைக்கவில்லை.
 விடுமுறை முடிந்து திரும்புவதற்கு முன்பதிவு செய்ய முடியாமலும், பயணச் சீட்டு கிடைக்காமலும் அவதிப்படுபவர்கள் பலர்.
 இப்போது அறிவிக்கப்படும் சிறப்பு ரயில்கள் முன் யோசனையுடன் ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தால் பலரும் சொந்த ஊருக்குப் பயணிக்க திட்டமிட்டிருப்பார்கள். கடைசி நேரத்தில் முன்பதிவு செய்யும்போது இடம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் பல மடங்கு அதிகக் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
 இந்த ஆண்டு வழக்கத்துக்கு அதிகமாக சபரிமலை பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். சபரிமலையின் மண்டல பூஜை, மகர ஜோதி காலம், கிறிஸ்துமஸ், ஆங்கில வருடப் பிறப்பு, பொங்கல் பண்டிகைகளுடன் இணைவதால் எப்போதுமே வழக்கத்தைவிட பல மடங்கு பயணிகள் காணப்படுவார்கள். இதை தொலைநோக்குப் பார்வையுடன் உணர்ந்து சபரிமலை பக்தர்களுக்கு என்று தனியாக கூடுதல் ரயில்களை இயக்காதது ரயில்வேயின் தோல்வி.
 முன்கூட்டியே பதிவு செய்திருந்தால் விமான கட்டணம் குறைவாக இருந்திருக்கும் என்கிற மத்திய விமான போக்குவரத்துத் துறையின் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் விளக்கம் வேடிக்கையாக இருக்கிறது. மத்திய விமான போக்குவரத்துத் துறையின் நோக்கமும் முனைப்பும், குறைந்த கட்டணத்தில் பயணிக்க வசதி ஏற்படுத்திக் கொடுப்பதுதானே தவிர, விமான நிறுவனங்கள் அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு வாய்ப்பளிப்பது அல்ல. ரயில் கட்டணமும், விமான கட்டணமும் முன்புபோல பயணத் தொலைவின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டுமே தவிர, கேட்பின் (டிமாண்ட்) அடிப்படையில் அமைவது இந்தியா போன்ற நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வாழும் தேசத்துக்கு ஏற்புடையதல்ல என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
 எல்லாவற்றையும்விட மிக அதிகமான கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவது தனியார் பேருந்துகள்தான். மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் தனியார் பேருந்துகளில் குறைந்தது 150% அதிகரித்த கட்டணம் இப்போதே வசூலிக்கப்படுகிறது. அடுத்த சில நாள்களில் அது இரண்டு, மூன்று மடங்கு உயரக்கூடும். மாநில அரசுகளின் மறைமுக ஆதரவு இல்லாமல் இது சாத்தியமல்ல.
 மாநில நகரங்களுக்கு இடையேயான கட்டணமும் வழக்கத்தைவிட பலமடங்கு அதிகமாக தனியார் பேருந்துகளால் வசூலிக்கப்படுகின்றன. சாதாரணமாகவே அரசுப் போக்குவரத்துக் கட்டணத்துக்கும், தனியார் பேருந்துகளின் கட்டணத்துக்கும் சுமார் 40% வேறுபாடு உண்டு. பண்டிகைக் காலம் வரும்போது பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணங்களை தனியார் பேருந்துகள் நிர்ணயித்துக் கொள்கின்றன.
 பண்டிகைக் காலங்களில் குறைந்தபட்சம் தமிழகத்திற்குள் பயணிப்பவர்களுக்காவது பேருந்துகளை உறுதி செய்வதும், அவற்றின் கட்டணத்தை முறைப்படுத்துவதும் அரசின் கடமை. அரசுப் போக்குவரத்துக் கழகங்களேகூட, பண்டிகைக் காலங்களில் வழக்கத்தைவிட அதிகக் கட்டணங்கள் வசூலிக்கின்றன. அரசுப் பேருந்துகளின் கட்டணங்களைவிட பலமடங்கு அதிகக் கட்டணம் தனியார் பேருந்துகள் வசூலிப்பது தடுக்கப்பட வேண்டும்.
 பண்டிகைக் காலங்களில் தனியார் பேருந்துகளை அரசின் கட்டுப்பாட்டில் எடுத்து, அரசே பயணக் கட்டணத்தை நிர்ணயித்து இடங்களை ஒதுக்கும் முறையை நடைமுறைப்படுத்துவதுதான் கட்டணக் கொள்ளைக்கு ஒரே தீர்வு!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com