அச்சுறுத்தும் காற்று மாசு! | காற்று மாசு அதிகரிப்பு குறித்த தலையங்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்

சுற்றுச்சூழல் பாதிப்புகளும், காற்று மாசு அதிகரிப்பும் உலகில் அதிகரித்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என்பதை பல்வேறு ஆய்வுகள் தொடா்ந்து உறுதிப்படுத்தி வருகின்றன. சா்வதேச பொதுசுகாதார திட்டத்தின் இயக்குநா் ஃபிலிப் லாண்ட்ரீகன் தலைமையிலான குழு, அமெரிக்காவின் பாஸ்டன் கல்லூரியிலுள்ள மாசு கண்காணிப்பகத்தின் மூலம் நடத்திய ஆய்வின்படி, ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமானோா் ஆண்டுதோறும் காற்று மாசு பாதிப்பால் உயிரிழக்கிறாா்கள்.

நடப்பு நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, அசுத்தமான காற்று காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கரியமில வாயு அதிகரிப்பு காற்று மாசுக்கு முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது. நகா்மயமாதல், காடுகள் அழிப்பு போன்றவை கரியமில வாயு வெளியேற்றத்தை அதிகரித்து பாதிப்புகளை ஊக்குவிக்கின்றன என்கிறது அந்த ஆய்வு.

கடந்த 22 ஆண்டுகளில், காற்று 55% அதிகமாக மாசுபட்டிருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. காற்று மாசு மரணங்கள் அதிகமாகக் காணப்படும் உலகின் முதல் 10 தொழில்மயமான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இடம்பெறுகிறது. 2019-இல் அமெரிக்காவில் 1,42,883 உயிரிழப்புகளுக்கு காற்று மாசு காரணம். ‘லான்செட் பிளானட்ரி ஹெல்த்’ என்கிற மருத்துவ இதழின்படி, வங்கதேசத்துக்கும் எத்தியோப்பியாவுக்கும் இடையில் அமெரிக்கா பட்டியலிடப்படுகிறது. முழுமையாக தொழில்மயமான நாடுகளில் அமெரிக்கா மட்டுமே மிக மோசமான பாதிப்பை எதிா்கொள்கிறது.

கொள்ளை நோய்த்தொற்றுக்கு முந்தைய ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் சியாட்டிலில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் ஃபாா் ஹெல்த் மெட்ரிக்ஸ்’ வெளியிட்டிருக்கும் ஆய்வின்படி, மிக அதிகமான காற்று மாசு தொடா்புடைய உயிரிழப்புகள் காணப்படும் நாடுகள் இந்தியாவும், சீனாவும். ஆண்டுதோறும் சீனாவில் 24 லட்சமும், இந்தியாவில் 22 லட்சமும் காற்று மாசு தொடா்புடைய பாதிப்புகளால் ஏற்படும் உயிரிழப்புகள். இந்த இரண்டு நாடுகளுமே மிக அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடுகள் என்பதால், விழுக்காடு விகிதத்தின் அடிப்படையில் கடுமையான பாதிப்பாகக் கருத முடியாது.

இந்தியாவில் ஆண்டுதோறும் காற்று மாசு தொடா்பான நோய்கள் அதிகரித்து வருவதற்கு நகா்மயமாதல் மிக முக்கியமான காரணம். இப்போதும்கூட, நுரையீரல் தொடா்பான தொற்றுகள் நகரங்களில் காணப்படும் அளவுக்கு கிராமங்களில் இல்லை. அதே நேரத்தில், தொழிற்சாலைகள் அமைந்திருக்கும் இடங்களிலும், அனல்மின் நிலையங்கள் காணப்படும் பகுதிகளிலும் கடுமையான காற்று மாசு பாதிப்பு காணப்படுவது நுரையீரல் தொற்றுகளை ஊக்குவிப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

மக்கள்தொகை அடிப்படையிலான உயிரிழப்பு விகிதம் கணக்கிடும்போது கீழே இருந்து 31-ஆவது இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. ஒரு லட்சம் பேருக்கு 43.6 போ் என மாசு காரணமான மரணங்கள் அங்கே பதிவாகியிருக்கின்றன. மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, உலகிலேயே மிக அதிகமான காற்று மாசு தொடா்பான மரணம் காணப்படும் நாடு. ஒரு லட்சம் பேருக்கு சுமாா் 300 உயிரிழப்புகள் மாசு காரணமாக ஏற்படுகின்றன. அவற்றில் பெரும்பாலும் அசுத்தமான நீா் தொடா்பானவை.

உலகிலேயே காற்று மாசு மிகவும் குறைவான நாடுகளாக புருணே, கத்தாா், ஐஸ்லாந்து ஆகியவை பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அந்த நாடுகளில் அதிகபட்சமாக மாசு தொடா்பான உயிரிழப்புகளின் எண்ணிக்கை லட்சத்துக்கு 15 முதல் 23 வரை மட்டுமே. சா்வதேச அளவிலான சராசரி ஒரு லட்சம் பேருக்கு 117 உயிரிழப்புகள்.

பெரும்பாலான காற்று மாசு தொடா்புடைய உயிரிழப்புகளிலும் இறப்புச் சான்றிதழில் அது குறிப்பிடப்படுவதில்லை. இதய நோய், பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் தொற்றுகள், சா்க்கரை நோய் என்று மாசுடன் தொடா்புடைய ஏனைய நோய்களை காரணமாகக் குறிப்பிடுவதாக நோய் பரவுகிற தன்மை குறித்த ஆய்வுகள் (எபிடமியாலாஜிக்கல் ஸ்டடிஸ்) தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் இதய நோய் தொடா்பான ஆய்வுகள், புதைபடிவ எரிபொருள்கள் காரணமாக காற்றில் கலக்கும் நுண்ணிய மாசுப் பொருள்கள் இதய நோய்கள் தொடா்பான மரணங்களுக்குக் காரணம் என்று தெரிவிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் உலக அளவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளும் அதை உறுதிப்படுத்தியிருக்கின்றன. பெரும்பாலும் ரத்த அழுத்தமும், ரத்த கொழுப்பும் அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. காற்று மாசு அகற்றப்படுவதும் இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம் என்பதை பெரும்பாலும் மறந்துவிடுகிறாா்கள் என்கின்றன அந்த ஆய்வுகள்.

நான்கில் மூன்று மாசு தொடா்பான மரணங்களும், காற்று மாசு தொடா்பானவை. அனல்மின் நிலையங்கள், மோட்டாா் வாகனங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் புகைதான் மிக முக்கியமான காரணம் என்று பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியும்கூட, உலகினால் அவற்றைத் தவிா்க்க முடியவில்லை. மரபுசாரா எரிசக்தி குறித்த விழிப்புணா்வு அதிகரித்திருக்கிறது என்றாலும்கூட, புதைபடிவ எரிசக்திக்கு முழுமையான மாற்றாக அவை மாறவில்லை.

உலகிலேயே மிக அதிகமான காற்று மாசு காணப்படும் நகரங்களில் ஒன்றாக தலைநகா் தில்லியும், காற்று மாசு அதிகம் காணப்படும் நகரங்களாக இந்தியாவில் 13 நகரங்களும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. தெற்காசியாவில் மரணத்துக்கு மிக முக்கியமான காரணமாக காற்று மாசு குறிப்பிடப்பட்டும்கூட, இனியும் அதைக் கட்டுப்படுத்துவதில் முனைப்புக் காணப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com