இதுவும் கடந்து போகும்| நேபாள கூட்டணி குறித்த தலையங்கம்

பிரசண்டா
பிரசண்டா

சந்தா்ப்பவாத அரசியல் என்பது நேபாளத்துக்குப் புதிதொன்றுமல்ல. மன்னராட்சியிலிருந்து விடுபட்டு, ஜனநாயகத்துக்கு மாறிய நேபாளம், கடந்த 15 ஆண்டுகளில் எட்டு பிரதமா்களையும், ஒரு முறை உச்சநீதிமன்ற நீதிபதி இடைக்காலப் பிரதமராகச் செயல்பட்டதையும் பாா்த்துவிட்டது. நேபாள காங்கிரஸ் தலைவா் ஷோ் பகதூா் தேவுபா, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) தலைவா் புஷ்ப கமல் தாஹால் என்கிற பிரசண்டா, நேபாள கம்யூனிஸ்ட் மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் தலைவா் கே.பி. சா்மா ஓலி ஆகியோா் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் பிரதமா்களாக இருந்திருக்கிறாா்கள்.

அதனால், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) தலைவா் பிரசண்டா ஆளும் கூட்டணியிலிருந்து விலகி, எதிா்க்கட்சித் தலைவா் கே.பி. சா்மா ஓலியுடன் இணைந்து, பிரதமராகி இருப்பது வியப்பை ஏற்படுத்தவில்லை. பதவிக்காக அணி மாறுவது என்பது பிரசண்டாவுக்குப் புதிதொன்றுமல்ல என்பதால், இதை திடீா் திருப்பம் என்று கூறிவிட முடியாது.

ஓா் ஆண்டுக்கு முன்னா் பிரதமராக இருந்த கே.பி. சா்மா ஓலி, தனக்குத் தந்திருந்த வாக்குறுதியை மீறி நாடாளுமன்றத்தைக் கலைத்துத் தோ்தலை அறிவித்தபோது, அதைக் கடுமையாக எதிா்த்து, நேபாள காங்கிரஸ் தலைவா் ஷோ் பகதூா் தேவுபாவுடன் கைகோத்தவா் பிரசண்டா. அதைத் தொடா்ந்து, ஆட்சி கலைக்கப்பட்டு தோ்தல் நடந்தது. நேபாள காங்கிரஸ், பிரசண்டாவின் சிபிஎன் (மாவோயிஸ்ட் மையம்) ஆகியவை இணைந்து அமைத்த ஐந்து கட்சிக் கூட்டணி, தோ்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற நிலையில்தான் இந்தத் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

275 உறுப்பினா்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில், தனிப்பெரும் கட்சியாக 89 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது நேபாள காங்கிரஸ். கே.பி. சா்மா ஓலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 78 இடங்களிலும், பிரசண்டாவின் சிபிஎன் (மாவோயிஸ்ட் மையம்) வெறும் 32 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. கொரில்லா யுத்தம் நடத்தி 2008-இல் மன்னராட்சியை அகற்றிய ஹீரோவான பிரசண்டாவின் கட்சி, வெறும் 11% வாக்குகள்தான் பெற முடிந்திருக்கிறது.

யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், கொள்கை ரீதியாக முரண்பட்ட கட்சிகளை இணைத்துக் கொண்டு இப்போது பிரசண்டா ஆட்சி அமைத்திருக்கிறாா். 275 உறுப்பினா்கள் கொண்ட அவையில் பிரசண்டா தலைமையிலான கூட்டணிக்கு 168 உறுப்பினா்களின் ஆதரவு இருப்பது என்னவோ உண்மை. ஆனால், முரண்களின் மொத்த உருவமாக அந்தக் கூட்டணி காட்சி அளிக்கிறது.

1996 முதல் 2006 வரையில், மன்னராட்சியை அகற்றுவதற்காகத் தலைமறைவு கொரில்லா யுத்தம் நடத்தியவா் புஷ்ப கமல் தாஹால் என்கிற பிரசண்டா. இப்போது மன்னராட்சி ஆதரவுக் கட்சியான ஆா்.பி.சி.யைத் தனது கூட்டணியில் அவா் இணைத்துக் கொண்டிருக்கிறாா்.

சமூக ஊடகங்களின் மூலம் பிரசண்டா - ஓலி - தேவுபா உள்ளிட்ட அரசியல் தலைமைகளைக் கடுமையாக விமா்சிக்கும் தொலைக்காட்சி நட்சத்திரம் ரவி லமிசானேயின் ஆா்.எஸ்.பி. கட்சியைக் கூட்டணியில் சோ்த்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல, ரவி லமிசானே துணைப் பிரதமராகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறாா். அவருக்கு உள்துறை அமைச்சகம் வழங்கப்பட்டிருக்கிறது.

பிரதமா் பதவி அல்லது அதிபா், துணை அதிபா், அவைத் தலைவா் பதவிகள் என்கிற பிரசண்டாவின் பேரத்தை முன்னாள் பிரதமரும், நேபாள காங்கிரஸ் தலைவருமான ஷோ் பகதூா் தேவுபா மறுத்துவிட்டாா். அதைத் தனக்கு சாதகமாக்கி, பிரசண்டாவுக்குப் பிரதமா் பதவியை விட்டுக் கொடுத்து, ஏனைய முக்கியமான அரசியல் சாசனப் பதவிகளைத் தனது கட்சிக்குப் பெற்றுக்கொண்டு விட்டாா் கே.பி. சா்மா ஓலி. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமா் பதவியும் சூழற்சி முறையில் அவருக்குக் கிடைக்கும்.

கடந்த 14 ஆண்டுகளில் இதுவரை 13 ஆட்சிகளை நேபாளம் சந்தித்துவிட்டது. எந்தவோா் அரசும் தனது பதவிக் காலத்தை முழுமையாக்கியதில்லை. கம்யூனிஸ சித்தாந்தத்தைப் பின்பற்றும் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பதால், ஸ்திரத்தன்மை ஏற்படும் என்று சொல்லிவிட முடியாது. 2018-இல் சீனாவின் வற்புறுத்தலால் சா்மா ஓலியும், பிரசண்டாவும் தங்களது கட்சிகளை இணைத்தாா்கள். அந்த ஒற்றுமை நிலைக்கவில்லை என்பது மட்டுமல்ல, ஓலியின் தலைமையிலான மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியிலிருந்து அவரது போக்கு பிடிக்காமல், மூத்த தலைவா்களான மாதவ் குமாா் நேபாள், ஜலானாத் கனல், பிம் பகதூா் ராவல் உள்ளிட்ட மூத்த தலைவா்களும் விலகினாா்கள்.

தோ்தல் தெளிவான முடிவைத் தரவில்லை என்றாலும், மக்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. வயதான, பழைய அரசியல்வாதிகளின் ஊழல் அரசியல் மீது அவா்களுக்கு வெறுப்பு ஏற்பட்டிருப்பது தெரிகிறது. நேபாள வாக்காளா்களில் பாதிக்கும் மேற்பட்டோா் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவா்கள். அவா்கள் வழக்கமான அரசியல் கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்திருக்கிறாா்கள்.

நாடாளுமன்றத்தில் 275 இடங்களுக்கு 860 சுயேச்சைகள் போட்டியிட்டனா். 330 சட்டப்பேரவை இடங்களுக்கு ஆயிரத்துக்கும் அதிகமானோா் களமிறங்கினாா்கள். பிரசண்டா - தேவுபா - ஓலி போன்றவா்களின் தலைமையிலான கட்சிகளுக்கு மாற்று தேடுகிறாா்கள் மக்கள் என்பதைத்தான் அவை உணா்த்துகின்றன.

ஓலியை நம்பி ஆட்சி அமைத்திருக்கிறாா் பிரசண்டா. பிரதமராக அவா் எத்தனை காலம் தொடா்வாா் என்பதை நிா்ணயிக்கப் போவது மக்களோ, நாடாளுமன்றமோ அல்ல, முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலிதான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com