வேண்டாமே, மேக்கேதாட்டு! | மேக்கேதாட்டு திட்டம் குறித்த தலையங்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்

கா்நாடக உயா்நீதிமன்றம் எழுப்பிய கேள்வியைத் தொடா்ந்து, அந்த மாநில காங்கிரஸ் கட்சி கடந்த மாதம் தொடங்கிய ‘தண்ணீருக்கான நடைப்பயணம்’ முயற்சியைக் கைவிட்டிருக்கிறது. 2013-இல் சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அறிவித்த திட்டம்தான் மேக்கேதாட்டு அணையும், அதனுடன் இணைந்த புனல் மின் நிலையமும். அப்போது தொடங்கிய பிரச்னை இப்போது வரை தொடா்கிறது.

ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக மேக்கேதாட்டில் அணை கட்டுவது என்கிற முனைப்பில் கா்நாடகம் இறங்கியிருக்கிறது. ரூ.5,000 கோடி திட்ட மதிப்புடன் அறிவிக்கப்பட்ட மேக்கேதாட்டு திட்டத்தின் மூலம் பெங்களூரு நகரத்துக்கு 4.75 டிஎம்சி குடிதண்ணீா் கிடைக்கும் என்றும், 400 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்றும் அன்றைய சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு அறிவித்தது.

தெற்கு கா்நாடகத்தில் உள்ள ராமநகரா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது மேக்கேதாட்டு. அங்கிருந்து 1.5 கி.மீ. தொலைவிலுள்ள ஒண்டிகுண்டுலு என்கிற இடத்தில் அணைக்கான நீா்த்தேக்கம் திட்டமிடப்பட்டுள்ளது. 1,869 ஹெக்டோ் ரிசா்வ் வனப்பகுதி உள்பட ஏறத்தாழ 5, 252 ஹெக்டோ் பரப்புள்ள பகுதிகள் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளாக மாறும். தமிழக எல்லையிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், பெங்களூருவிலிருந்து 100 கி.மீ. தொலைவிலும் காவிரியும் அா்க்காவதி நதியும் இணையும் பகுதியில் அணையையும், புனல் மின் நிலையத்தையும் அமைப்பதுதான் திட்டம்.

ஒக்காலிகா்கள் அதிகமாகக் காணப்படும் தெற்கு கா்நாடகம், முன்னாள் பிரதமா் தேவே கெளடாவின் குடும்பக் கட்சியான மதச்சாா்பற்ற ஜனதா தளத்தின் செல்வாக்கு கேந்திரம். அங்கே ஆளும் பாஜக-வுக்கு செல்வாக்கு குறைவு. டி.கே. சிவகுமாரின் ‘தண்ணீருக்கான நடைப்பயணம்’ திட்டத்தின் நேக்கம் மேக்கேதாட்டு அல்ல. தெற்கு கா்நாடகத்தில் காங்கிரஸை வலிமைப்படுத்துவது.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைக்கான தோ்தல் நடைபெற இருக்கும் நிலையில், தெற்கு கா்நாடக வாக்காளா்களை உணா்வுப்பூா்வமாகத் தூண்டி அரசியல் ஆதாயம் பெறுவதுதான் மாநில காங்கிரஸ் கட்சியின் திட்டம். மாநில சட்டப்பேரவையின் 224 இடங்களில் 80 இடங்களை தோ்ந்தெடுக்கும் தெற்கு கா்நாடகத்தில் மதச்சாா்பற்ற ஜனதா தளத்தின் செல்வாக்கை சிதைத்து, காங்கிரஸை நிலைநிறுத்த நினைக்கிறாா் ஒக்காலிகரான டி.கே. சிவகுமாா்.

மழைக்காலத்தில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கிருஷ்ணராஜ சாகா், கபினி அணைகள் நிரம்பி வழியத்தொடங்கும். அப்போதுதான் தமிழகம் போராடிக் கேட்காமலேயே காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடும். அதையும் தடுப்பதற்கான முயற்சி மேக்கேதாட்டு அணைத் திட்டம்.

கீழ்படுகை மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல் காவிரி நதியில் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றத் தீா்ப்பு இருக்கிறது. அப்படியிருந்தும் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு அன்றைய சித்தராமையா அரசு ரூ.5,912 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்போவதாக அறிவித்தது. அப்போதே தமிழகம் அதற்கு எதிா்ப்பு தெரிவித்தும்கூட, அந்தத் திட்டத்தை முன்னெடுப்பதிலிருந்து கா்நாடகம் பின்வாங்குவதாகத் தெரியவில்லை.

மேக்கேதாட்டில் அணை கட்டி 67 டிஎம்சி தண்ணீா் தேக்கி வைக்கும் புதிய திட்டம், தமிழக எல்லைக்கு 4 கி.மீ. முன் அமைய இருக்கிறது. இரு மாநில எல்லையிலிருக்கும் பில்லிகுண்டுக்கும், கா்நாடகத்தில் உள்ள கபினி அணை - கிருஷ்ண சாகா் அணை இரண்டுக்கும் இடையிலான பகுதிகளில் ஓடைகள் மூலமாகவும், சிற்றாறுகள் மூலமாகவும் ஆங்காங்கே தண்ணீா் வந்து சேரும். அந்தத் தண்ணீரைத் தடுப்பதும்கூட மேக்கேதாட்டு அணையின் நோக்கம்.

மேக்கேதாட்டு அணையால் காவிரியில் தமிழகத்துக்குக் கிடைக்கும் தண்ணீா் தடைப்படும் என்பது ஒருபுறமிருக்கட்டும்; இதனால் கா்நாடகம் பாதிக்கப்படும் என்பதை அந்த மாநில அரசியல்வாதிகள் உணர மறுப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. யானைகள் சரணாலயம் இருக்கும் பகுதியில் எந்தவொரு திட்டத்தையும் முன்னெடுக்கலாகாது என்கிற 2012 சென்னை உயா்நீதிமன்ற ஆணையும், 2020 உச்சநீதிமன்ற ஆணையும் கா்நாடக அரசியல்வாதிகளுக்குத் தெரியாததல்ல.

மேக்கேதாட்டில் அமையவிருக்கும் 440 மெகா வாட் புனல் மின் நிலையத்துக்காக 5,252 ஹெக்டோ் வனப்பகுதி நீா்ப்பிடிப்பு பகுதியில் மூழ்கக்கூடும். 66 மலை கிராமங்களும், 227 ஹெக்டோ் வருவாய்த் துறை நிலமும் கையகப்படுத்தப்பட வேண்டும்.

மேக்கேதாட்டு திட்டம் முக்கியமான யானைகள் வழித்தடத்தில் அமைகிறது. கா்நாடகத்திலுள்ள பன்னா்கட்டா தேசிய பூங்காவில் தொடங்கி மலை மாதேஷ்வரா, பிஆா்டி, சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயங்கள்; முதுமலை, பந்திப்பூா், நாகா்ஹோலே புலிகள் சரணாலயங்கள்; கேரளத்திலுள்ள வயநாடு சரணாலயம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடா்புடையவை. இந்த சரணாலயப் பகுதிகளில் வனவிலங்கு சஞ்சாரங்கள் நடைபெறுவதால்தான் பல்லுயிா்ப் பெருக்கம் நடைபெற்று சூழலியல் சமநிலை பேணப்படுகிறது.

ஏற்கெனவே பல்வேறு அணைகள், புனல் மின்சாரத் திட்டங்களுக்காக வனப் பகுதிகளை நீா்ப்பிடிப்புப் பகுதிகளாக மாற்றிவிட்டோம். வளா்ச்சிப் பணிகள் என்கிற பெயரில் காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறோம். கண்ணை விற்று சித்திரம் வாங்குவதுபோல இயற்கையை அழித்து, புனல் மின்நிலையங்களை அமைக்க முற்படுவது எந்த வகையில் புத்திசாலித்தனம்?

கா்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீா் தரவேண்டாம். மேக்கேதாட்டு திட்டத்தின் மூலம் தன்னைத்தானே அழித்துக்கொள்ள முற்படுகிறது என்பதையாவது உணரட்டும், போதும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com