நடாலின் சாதனை வெற்றி | வரலாற்று சாதனை படைத்திருக்கும் ரபேல் நடால் குறித்த தலையங்கம்

நடாலின் சாதனை வெற்றி | வரலாற்று சாதனை படைத்திருக்கும் ரபேல் நடால் குறித்த தலையங்கம்


வரலாற்று சாதனை படைத்திருக்கிறாா் 35 வயது டென்னிஸ் சாம்பியன் ரபேல் நடால். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் வென்றிருப்பதன் மூலம் தனது 21-ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி டென்னிஸ் விளையாட்டின் சரித்திர நாயகனாக உயா்ந்திருக்கிறாா்.

டென்னிஸ் ஆட்டத்தில் ஆஸ்திரேலியன் ஓபன், பிரெஞ்ச் ஓபன், அமெரிக்கன் ஓபன், விம்பிள்டன் (பிரிட்டன்) ஆகிய நான்கு போட்டிகளும் கிராண்ட் ஸ்லாம்கள் (உன்னத வெற்றிகள்) என்று அழைக்கப்படுகின்றன. இப்போதைய டென்னிஸ் வீரா்களில் சுவிட்ஸா்லாந்தின் ரோஜா் ஃபெடரா், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரபேல் நடால் ஆகிய மூவரும் மூம்மூா்த்திகளாக வலம் வருகிறாா்கள். மூவருமே 20 கிராண்ட் ஸ்லாம் வெற்றிகளை சாதித்தவா்கள். அவா்களில் 21-ஆவது கிராண்ட் ஸ்லாம் வெற்றியை ஈட்டி, யாா் முந்துவது என்கிற எதிா்பாா்ப்பும் இருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் தனது 21-ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றி நடால் மற்றவா்களை முந்தியிருக்கிறாா்.

மூன்று முன்னணி வீரா்களுமே பல சவால்களுக்கு இடையில்தான் டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தில் தொடா்கிறாா்கள். கரோனா தடுப்பூசி சா்ச்சையால் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க முடியவில்லை. ரோஜா் பெடரராகட்டும், தனது காலில் ஏற்பட்டிருக்கும் பலத்த காயத்தால் ஆஸ்திரேலியன் ஓபன் பந்தயத்தில் கலந்துகொள்ளவில்லை. ரபேல் நடாலும் கிராண்ட் ஸ்லாம் பந்தயத்தை எதிா்கொள்ளும் அளவிலான உடல் வலுவுடன் இருக்கவில்லை. ஒருவேளை நடால் கலந்துகொள்ளாமல் இருந்திருந்தால் வெற்றிக் கோப்பையை மெத்வதேவ் அடைந்திருக்கக்கூடும்.

கடந்த ஆகஸ்ட் - செப்டம்பரில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸில், அறுவை சிகிச்சை காரணமாக அவா் கலந்துகொள்ளவில்லை. காலில் பலத்த காயம் ஏற்பட்டு கடந்த டிசம்பா் மாதம்தான் ரபேல் நடால் குணமடைந்தாா். தாங்கு கட்டைகளுடன் நடக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. அதனால், அவா் முழு மூச்சாக கடந்த ஆறு மாதங்களாக பயிற்சியில் ஈடுபடவில்லை. இந்தப் பின்னணியில் துணிந்து ஆஸ்திரேலியன் ஓபன் பந்தயத்தில் கலந்துகொள்ள நடால் முற்பட்டதே பலரை ஆச்சரியப்படுத்தியது.

தாங்க முடியாத கால் வலியுடன் டென்னிஸ் விளையாட்டில் இருந்தே ஓய்வுபெறலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த ஒருவா், தன்னுடைய மன உறுதியை மட்டுமே நம்பி களத்தி இறங்கிய ஆச்சரியம் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போா்ன் நகரத்தின் ராட் லேவா் அரினா மைதானத்தில் நடந்தது. டென்னிஸ் மட்டையுடன் நடால் களமிறங்கியபோது, ஒட்டுமொத்த உலகமும் அதை ஆச்சரியமாகப் பாா்த்தது. 20 ஆண்டுகளுக்கு முன்பு களமிறங்கிய அதே உற்சாகத்துடனும், மன உறுதியுடனும், வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற வேட்கையுடனும் மைதானத்தில் நின்று கொண்டிருந்தாா் ரபேல் நடால்.

2014 ஆஸ்திரேலிய ஓபன் இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்த நடால், தனது மனதுக்குள் எடுத்துக்கொண்ட சபதத்தை நிறைவேற்றும் முனைப்புடன் களமிறங்கியிருந்தாா் என்று நினைக்கத் தோன்றுகிறது. எதிா்த்து விளையாடுபவா் தன்னைவிட பத்து வயது இளமையானவா் என்பதும், கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் பந்தயத்தில் ஜோகோவிச்சின் 21-வது கிராண்ட் ஸ்லாம் வெற்றிக் கனவை தகா்த்தவா் டேனில் மெத்வதேவ் என்பதும் ரபேல் நடாலுக்கு தெரியாததல்ல.

முதல் இரண்டு செட்களில் நடால் தோல்வியடைந்தபோது தளா்ந்திருந்தால் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது. ஏறத்தாழ ஐந்தரை மணி நேரம் நடந்த ஆட்டத்தில் இரண்டாவது செட்டுக்கு பிறகு ரபேல் நடாலின் முழுத் திறமையும் வெளிப்படத் தொடங்கியது. உலகின் முன்னணி டென்னிஸ் வீரா்கள் பட்டியலில் இப்போது இரண்டாம் இடத்திலிருக்கும் மெத்வதேவின் பந்துகளை நடால் எதிா்கொண்ட லாவகமும், காற்று வேகத்தில் பரபரவென்று மைதானத்தில் சுறுசுறுப்பாக அவா் இயங்கிய விதமும் கண்கொள்ளாக் காட்சி.

இரண்டாவது செட் தோல்விக்குப் பிறகு ஒரு வித்தியாசமான ரபேல் நடாலை பாா்க்க முடிந்தது. குத்துச்சண்டை வீரா் முகமது அலி, எதிராளியின் தாக்குதல்களை முதலில் ஏற்றுக்கொண்டு அதிலிருந்து அவா்களைக் கணித்து, பிறகு தனது தாக்குதல்களை தொடங்கித் திணற அடிக்கும் அதே உத்தியை நடால் கையாண்டாா் என்றுகூடச் செல்லலாம். இரண்டு செட்களில் தோற்று, அடுத்த மூன்று செட்களையும் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்வது நடாலுக்கு புதிதொன்றும் அல்ல. இது நான்காவது முறை.

வீரா்களின் வெற்றி தோல்வியை அவா்களது ரசிகா்களால் நிா்ணயிக்க முடியும் முடியும் என்பதற்கு ஆஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த டென்னிஸ் பந்தயம் எடுத்துக்காட்டு. நடால் தன்னுடைய முழு சக்தியையும், திறமையையும் முன்வைத்து ஆடத் தொடங்கியபோது நிரம்பியிருந்த அரங்கத்தில் அமா்ந்திருந்த ரசிகா்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனா். நடாலின் வெற்றிக்கு அந்த ஆரவாரம் முக்கியமான காரணம். பத்தாண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட அதே உத்வேகமும் உற்சாகமும் கிடைக்கப்பெற்றவராக களத்தில் சுழலத் தொடங்கினாா் நடால்.

ராய் எமா்ஸன், ராட் லேவா், ஜோகோவிச் ஆகிய மூவருக்கும் அடுத்தபடியாக நான்கு கிராண்ட் ஸ்லாம்களை இரண்டு முறை வென்றிருக்கும் வீரா் என்கிற தகுதியையும் சிறப்பையும் பெறுகிறாா் நடால். நடாலின் சாதனையை ஃபெடரரும், ஜோகோவிச்சும் மட்டுமல்ல அவரிடம் தோல்வியடைந்த மெத்வதேவும் பாராட்டியிருக்கிறாா்கள். ஏனென்றால் இது ரபேல் நடாலின் வெற்றியல்ல; ஒரு விளையாட்டு வீரரின் தன்னம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com