சதுரங்க சாதனை! | பிரக்ஞானந்தாவின் வெற்றி குறித்த தலையங்கம்

சதுரங்க சாதனை! | பிரக்ஞானந்தாவின் வெற்றி குறித்த தலையங்கம்

 ஒட்டுமொத்த உலகத்தையும் தமிழகத்தை நோக்கித் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் பிரக்ஞானந்தா என்கிற 16 வயதுச் சிறுவன். ஏர்திங்க்ஸ் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டியில் நார்வேயை சேர்ந்த உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்செனை அவர் தோற்கடித்திருப்பது சாதனை வெற்றி. 16 வீரர்கள் பங்குபெறும் ரேபிட் பார்மெட் இணையவழி செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.
 கடந்த ஆண்டு செஸ் கிளாஸிக் பந்தயத்தில் இதே மேக்னஸ் கார்ல்செனுடனான போட்டி வெற்றி - தோல்வியில்லாமல் முடிந்தது. தன்னுடன் போட்டிபோடும் தகுதி இருப்பதாக அந்தச் சிறுவனிடம் காணப்பட்ட தன்னம்பிக்கையை, கார்ல்சென் வியந்து பாராட்டினார். இப்போது தன்னைத் தோற்கடித்திருக்கும் பிரக்ஞானந்தாவை வாழ்த்தி ஆசீர்வதித்திருக்கிறார்.
 மேக்னஸ் கார்ல்சென் சாதாரணமான விளையாட்டு வீரர் அல்ல. இதற்கு முன்னால் அவரை வென்ற இந்திய வீரர்கள் முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தும், கிராண்ட் மாஸ்டர் பெந்தல ஹரிகிருஷ்ணாவும் என்பதிலிருந்தே பிரக்ஞானந்தாவின் வெற்றி எத்தகையது என்பதை உணர முடியும். தனது போட்டியாளர்களை அசர அடிக்கும் கார்ல்செனை, பதற்றமே இல்லாத அமைதியான அணுகுமுறையால் பிரக்ஞானந்தா கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாக்கியதை உலகமே கண்டு வியந்தது.
 இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த அந்த 16 வயது சிறுவன், காய்களை எங்கேயும் நகர்த்த முடியாத தர்மசங்கடத்துக்கு மேக்னஸ் கார்ல்செனை உள்ளாக்கினார். 39-ஆவது நகர்வில் கார்ல்சென் கைகளை விரித்துத் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். தனது கதாநாயகனைத் தோற்கடித்த பெருமிதமும், தன்னையே நம்ப முடியாத ஆச்சரியமும் பிரக்ஞானந்தாவை திக்குமுக்காடச் செய்தன.
 2016-இல் தனது 10-ஆவது வயதில், உலகின் மிகக் குறைந்த வயதில் செஸ் பந்தயத்தில் சர்வதேச மாஸ்டர் பட்டம் பெற்றவர் பிரக்ஞானந்தா. தொடக்கம் முதலே அவர் சர்வதேச விளையாட்டுக்காரருக்கான தகுதி பெற்றிருந்ததை செஸ் வல்லுனர்கள் அடையாளம் கண்டனர்.
 இரண்டாண்டு கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் பிரக்ஞானந்தாவின் தன்னம்பிக்கை கடுமையாகக் குறைந்திருந்தது. செஸ் போட்டிகளில் கலந்துகொள்ளாமல் இருந்ததும், சர்வதேச பந்தயங்களில் பங்குபெறாமல் போனதும் அந்தச் சிறுவனுக்குத் தளர்வை ஏற்படுத்தியதாக பயிற்சியாளர் குறிப்பிட்டிருந்தார். சரியான நேரத்தில் ஏர்திங்க்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் கார்ல்செனை வென்றிருப்பது பிரக்ஞானந்தாவுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஊக்கம்.
 சதுரங்க ஆட்டம் என்பது இந்தியாவுக்குப் புதிதொன்றுமல்ல. நமது புராண இதிகாச காலத்திலிருந்து அரண்மனைகளிலும் தெருவோரங்களிலும் விளையாடப்படுவதுதான் அது. பிற்காலத்தில் மேல்நாட்டு பாணி சதுரங்கமான செஸ் விளையாட்டு அறிமுகமானபோது இந்தியர்களுக்கு அதில் தேர்ச்சி பெறுவது சிரமமாக இருக்கவில்லை.
 சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியா கடந்த 60 ஆண்டுகளாகத்தான் முத்திரை பதித்து வருகிறது. 1961-இல் இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டராக மேனுவல் ஆரான் தடம் பதித்தார். அதற்கு பிறகு 26 ஆண்டுகள் கழித்து 1987-இல் 18 வயதுகூட நிரம்பியிராத விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டராக சாதனை நிகழ்த்தினார். 2000-இல் இந்தியாவின் முதல் உலக சாம்பியனாக உயர்ந்ததும் விஸ்வநாதன் ஆனந்தே. இதுவரை 5 முறை உலக சாம்பியனாகவும், ஒருமுறை ரஷியாவுடன் இணைந்து செஸ் ஒலிம்பிக் சாம்பியனாகவும் தேர்ந்தவர் ஆனந்த்.
 ஆனந்தை தொடர்ந்து இப்போது ஏராளமான சிறுவர்களும், இளைஞர்களும் செஸ் விளையாட்டில் சாதனை புரிந்து வருகின்றனர். பிரக்ஞானந்தா மட்டுமல்லாமல் திவ்யா தேஷ்முக், நிகல் ஷரின், வைஷாலி, பெந்தல ஹரிகிருஷ்ணா, விதீத் குஜராத்தி, கோனேரு ஹம்பி, ஹரிகா என்று வரிசையாகப் பலர் சர்வதேச அளவில் இந்தியக் கொடியை செஸ் பந்தயங்களில் உயர்த்திப் பிடிக்கிறார்கள். இதற்கெல்லாம் முன்னோடியும், இந்த இளைஞர்களுக்கு வழிகாட்டியும் விஸ்வநாதன் ஆனந்த் என்பதை பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.
 1987-இல் விஸ்வநாதன் ஆனந்த முதலாவது கிராண்ட் மாஸ்டர் ஆனதைத் தொடர்ந்து, இப்போது இந்திய கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை 73. பிரக்ஞானந்தா இந்திய விளையாட்டு வீரர்களில் 16-ஆவது இடத்திலும், உலகத் தர வரிசையில் 193-ஆவது இடத்திலும் இருக்கிறார். இன்றைய பதின்ம வயது இந்திய செஸ் விளையாட்டு வீரர்களில் அதீத திறமைசாலி என்று கருதப்படும் பிரக்ஞானந்தா இப்போது விஸ்வநாதன் ஆனந்தின் வழிகாட்டுதலில் இருக்கிறார் எனும்போது அவரது வருங்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து பங்குபெறுவதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்த், அனடோலி கார்போவ், கேரி கேஸ்பரோவ், மேக்னஸ் கார்ல்சென் வரிசையில் பிரக்ஞானந்தா இடம்பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை.
 பிரக்ஞானந்தாவின் வளர்ச்சியும் வெற்றியும் நமக்கு சில செய்திகளைத் தருகின்றன. தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களை செஸ் விளையாட்டில் ஊக்கப்படுத்துவதுபோல, அரசுப் பள்ளிகளில் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. தொடக்கப்பள்ளி நிலையிலேயே செஸ் விளையாட்டுப் பயிற்சி வழங்குவதன் மூலம் வருங்கால விஸ்வநாதன் ஆனந்த்களையும், பிரக்ஞானந்தாக்களையும் அடையாளம் காண முடியும். அவர்களுக்குத் தகுந்த ஊக்கமும், அரசு ஆதரவும் ஆரம்பத்திலிருந்தே வழங்கப்பட்டால் தமிழகம், கிராண்ட் மாஸ்டர்களின் கேந்திரமாக உயரக்கூடும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com