புத்தாண்டில் நல்ல செய்தி! | உணவு தானியங்களைப் பாதுகாப்பது குறித்த தலையங்கம்

புத்தாண்டில் நல்ல செய்தி!  | உணவு தானியங்களைப் பாதுகாப்பது குறித்த தலையங்கம்

 மத்திய வேளாண் அமைச்சகம் புத்தாண்டில் வரவேற்புக்குரிய முடிவை எடுத்திருக்கிறது. திறந்த வெளியில் பாதுகாக்கப்படும் அரசு கொள்முதல் செய்த தானியங்களை, மார்ச் மாதத்திற்குள் அறிவியல் தொழில்நுட்ப அடிப்படையில் பாதுகாப்பது என்பதுதான் அந்த முடிவு.
 அரசின் தானியக் கொள்முதல்கள் முழுவதையும் சேமித்து வைக்கும் அளவிலான தானியக் கிடங்குகள் இந்திய உணவு தானியக் கழகத்திடம் இல்லை. அதனால், அவை தற்போது பெரும்பாலும் திறந்த வெளியில்தான் பாதுகாக்கப்படுகின்றன.
 உலகிலுள்ள வேறு எந்த ஜனநாயக நாட்டிலும் இந்தியா அளவிலான குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் தானியக் கொள்முதல்கள் நடப்பதில்லை. பல்வேறு பருவங்களில் வெவ்வேறு தானியங்கள் அரசால் கொள்முதல் செய்யப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றன. உணவு பாதுகாப்புக்காக மட்டுமல்லாமல், விவ
 சாயிகளின் நலனையும் கருதி மேற்கொள்ளப்படும் தானியக் கொள்முதல் மூலம்தான் பொது விநியோக முறையில் அடித்தட்டு மக்களுக்கான உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறோம்.
 மிக அதிக அளவில் மத்திய வேளாண் அமைச்சகத்தால் கோதுமையும், அரிசியும் கொள்முதல் செய்யப்படுகின்றன. போதுமான அளவு கட்டடங்கள் இல்லாத நிலையில் அவை திறந்தவெளியில் நெகிழி விரிப்பான்களாலும், தார்ப்பாய்களாலும் மூடப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. இவை அறிவியல் முறையிலான பாதுகாப்பாக இல்லாததால், மிகப் பெரிய அளவில் தானியங்கள் ஆண்டுதோறும் வீணாகின்றன.
 சாகுபடிக்குச் சாகுபடி உணவு உற்பத்தி அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்தியாவில்தான், உலகிலேயே மிக அதிகமாக உணவுக்கான தேவையுள்ள மக்கள் காணப்படுகிறார்கள். அந்த நிலையில், யாருக்கும் பயன்படாமல் தானியங்கள் வீணாகின்றன.
 சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்தியாவின் சார்பில் உரையாற்றிய அதிகாரி ஒருவர், "எங்கள் உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டியிருக்கிறது' என்று தெரிவித்தார். அதற்குப் பின்னால் பேசிய பேச்சாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி இது: "இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, உணவு தானியக் கிடங்குகள் நிரம்பி வழியும் நிலையில் லட்சக்கணக்கானோர் இன்னும்கூட இந்தியத் தெருக்களில் பசியுடன் திரிகிறார்களே, அது ஏன்?'. இந்தக் கேள்வி எழாமல் இருக்கும் நிலையை நாம் இன்னும் உருவாக்கவில்லை.
 இந்திய உணவு தானியக் கழகத்தில் ஏறத்தாழ 8.8 கோடி டன் அளவிலான தானியங்கள் கையிருப்பில் உள்ளன. அதில் சுமார் மூன்று கோடி டன் கோதுமையும், ஐந்து கோடி டன் அரிசியும் அடங்கும். அரசின் கையிருப்புத் தேவையைவிட மூன்று மடங்கு அதிக அளவிலான உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு இந்திய உணவு தானியக் கழகத்தால் பாதுகாக்கப்படுகின்றன. திறந்தவெளி கிடங்குகளில் தேவைக்கு அதிகமான தானியங்கள் தேங்கிக் கிடந்தபோது, பொது முடக்கக் காலத்தில் மக்களுக்கு வழங்கியதால் அவை சேதமடைவதைக் குறைக்க முடிந்தது.
 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் 85 லட்சம் பேருக்கு பல்வேறு மாநிலங்களில் பசியாற வழிகோலுகின்றன என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை நான்கு கோடி என்கிறது மற்றொரு புள்ளிவிவரம். சர்வதேச பசி குறியீட்டில் 117 நாடுகளில் இந்தியா கடைசி 20 நாடுகளில் ஒன்றாக தொடர்ந்து இருந்து வருகிறது.
 இந்திய உணவு தானியக் கழகம் கொள்முதல் செய்து தனது இடங்களில் திறந்தவெளியிலும், கட்டடங்களிலும் பாதுகாத்து வைத்திருந்த தானியங்களில் 1,453 டன் ஒரு மாதத்தில் வீணாகியிருப்பதாக மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பல கோடி டன் உணவு தானியங்களில் 1,453 டன் என்பது குறைந்த அளவாகத் தெரியலாம். அது ஒரு மாதத்திற்கான கணக்கு என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
 கட்டடக் கிடங்குகளில் மூட்டைகளிலும், அறைகளிலும் பாதுகாக்கப்படும் உணவு தானியங்கள், அவ்வப்போது புகைபோடப்பட்டு பூச்சிகளுக்கு இலக்காகாமலும், அழுகி நாசமாகாமலும் பாதுகாக்கப்படுகின்றன. திறந்தவெளியில் பாதுகாக்கப்படும் கொள்முதல் செய்த உணவு தானியங்கள்தான் பெரும்பாலானவை. அவை என்னதான் நெகிழி விரிப்பான்களாலும், தார்ப்பாய்களாலும் போர்த்தப்பட்டு பாதுகாக்கப்பட்டாலும்கூட, எலிகளுக்கும் பெருச்சாளிகளுக்கும் உணவாவதுடன், மழைக்காலங்களில் நனைந்து வீணாகும் அளவும் மிக அதிகம்.
 அதிகார வர்க்கம் அரசுக்குத் தரும் புள்ளிவிவரங்கள் உண்மையான சேதத்தின் ஒரு பகுதியாக மட்டும்தான் இருக்கக்கூடும். அதிகாரிகளின் துணையோடு கிடங்குகளில் இருந்து திருட்டுத்தனமாக எடுத்துச் செல்லப்படும் உணவு தானியங்கள் குறித்த எந்தவித விவரமும் பொதுவெளிக்கு வருவதில்லை.
 இந்தியாவிலேயே மிக அதிகமாக உணவு தானியங்கள் உற்பத்தியாகும் பஞ்சாபில் 19.6 லட்சம் டன், ஹரியாணாவில் 9.4 லட்சம் டன் திறந்தவெளியில்தான் பாதுகாக்கப்படுகின்றன. அறிவியல் தொழில்நுட்ப முறையில் உணவு தானியங்களைப் பாதுகாக்கும் வழிமுறையை 20 ஆண்டுகளுக்கு முன்பே சீனா செயல்படுத்திவிட்டது.
 140 கோடி மக்களின் உணவுத் தேவையை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அனைவரின் உணவுத் தேவையை எதிர்கொள்வதுடன், தேவைக்கு அதிகமானதை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இருந்தும், வியர்வை சிந்தி உருவாக்கிய தானியங்களை வீணாக்குவது எந்த விதத்திலும் நியாயமில்லை. இப்போதாவது விழித்துக்கொண்டோமே...
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com