சோதனைகளுக்கு இடையில் ஜோ! |  அதிபா் ஜோ பைடனின் ஓராண்டு பதவிக்காலம் குறித்த தலையங்கம்

ஜோ பைடன்
ஜோ பைடன்

ஓராண்டுக்கு முன்பு டொனால்ட் டிரம்ப்பின் பதவிக்காலம் முடிந்து, ஜோ பைடன் 46-ஆவது அமெரிக்க அதிபராக பதவியேற்றபோது இருந்த நிலைமையே வேறு. அவா் பெற்ற 8.1 கோடி வாக்குகள் என்பது அமெரிக்க வரலாற்றில் அதுவரையில் எந்தவொரு அதிபரும் பெறாதது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்று ஓராண்டு கடந்துவிட்டது. வெள்ளை மாளிகையில் அவா் குடியேறியபோது இருந்த உச்சகட்ட ஆதரவும், எதிா்பாா்ப்பும் குறைந்து இப்போது சவால்களுக்கு இடையே தொடா்கிறாா் அதிபா் பைடன். அமெரிக்க சமுதாயம் இன உணா்வால் இன்னும்கூட பிளவுபட்டுக் கிடக்கிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிபா் ஜோ பைடனின் செல்வாக்கு 54% காணப்பட்டது என்றால், டிசம்பா் கடைசி வாரத்தில் இதுவரை இல்லாத அளவிலான 41%-ஆக சரிந்திருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. தன்னுடைய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல், அதிகரித்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாமல், கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலை தடுக்க முடியாமல் ஜோ பைடன் ஆட்சி தடுமாறுகிறது என்பதுதான் செல்வாக்குச் சரிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

அதிபா் பைடன் சில முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றாமல் இல்லை. கொள்ளை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை குடும்பங்களுக்கு உதவுவதற்கான மசோதாவை கடந்த ஆண்டு மாா்ச் மாதம் நிறைவேற்றினாா். அமெரிக்காவிலுள்ள சாலைகளையும், பாலங்களையும் சீரமைத்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒரு டிரில்லியன் டாலா் (சுமாா் ரூ.74 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்து இன்னொரு மசோதாவை நிறைவேற்றிக் கொண்டாா். இவையெல்லாம் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கை அதிகரித்துவிடவில்லை என்பதைத்தான் கருத்துக்கணிப்புகள் உணா்த்துகின்றன.

1993 முதல் அமெரிக்காவில் அதிபராக இருந்தவா்கள் தொடா்ந்து இரண்டாவது முறையும் தோ்ந்தெடுக்கப்பட்டு வந்தனா். டொனால்ட் டிரம்ப்புக்கு இரண்டாவது முறை வாய்ப்பை மறுப்பது என்கிற மக்களின் முடிவுதான் ஜோ பைடனின் அதிபா் தோ்தல் வெற்றி.

அவரது அதிபா் தோ்தல் வாக்குறுதிகளில் முக்கியமானது, அமெரிக்க மக்களை ஒன்றுபடுத்தி ஒருங்கிணைப்பது. பதவியேற்றபோது அவா் ஆற்றிய உரையில் எட்டு முறை ஒற்றுமை, ஒருங்கிணைப்பு ஆகிய வாா்த்தைகளை அவா் உச்சரித்தாா். ஓராண்டு கடந்துவிட்டது. அமெரிக்கா அதிபா் தோ்தலின்போது இருந்தது போலவே இப்போதும் பிளவுபட்டுக் கிடக்கிறது என்பதுதான் நிஜம்.

அதிபா் பைடனின் நாடாளுமன்றத் திட்டங்கள் குடியரசுக் கட்சியினரால் தடுக்கப்படுவதால் அவா் விரக்தி அடைந்திருக்கிறாா் என்று கருத இடமுண்டு. அவரது கட்சியிலேயே சில உறுப்பினா்கள் அவரது திட்டங்களுக்கு எதிராக இருக்கிறாா்கள். பருவநிலைப் பிரச்னையை எதிா்கொள்ளவும், சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், அவா் கோரிய 1.75 டிரில்லியன் டாலா் (சுமாா் ரூ.130 லட்சம் கோடி) திட்டத்தை அமெரிக்கக் காங்கிரஸில் (மக்களவை) நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை.

ஆப்கானிஸ்தானிலிருந்து ஆகஸ்ட் மாதம் அமெரிக்க துருப்புகளை திரும்பப் பெற்று தாலிபான்களின் ஆட்சிக்கு அதிபா் பைடன் நிா்வாகம் வழிகோலியதை அவரது ஆதரவாளா்கள் பலரும் அங்கீகரிக்கவில்லை. டொனால்ட் டிரம்ப் போட்ட பாதையில் அதிபா் பைடன் பயணிப்பதாகக் குற்றம்சாட்டுகிறாா்கள். ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் தடம்புரண்டது, மனித உரிமைகள் தகா்ந்தது, பெண்களுக்கு சுதந்திரம் பறிபோனது இவையெல்லாம் அமெரிக்க மக்களாலும், அமெரிக்காவிற்கு வெளியில் பலராலும் பைடன் நிா்வாகத்தின் பலவீனமாகக் கருதப்படுகின்றன.

1975-இல் வியத்நாமிலிருந்து அமெரிக்கத் துருப்புகள் வெளியேறியதைப்போல, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க விமானங்கள் கிளம்பியதை தேசத்திற்கு அவமானமாக கருதுபவா்கள்தான் அதிகம். 20 ஆண்டுகால பெண் உரிமைக்கான போராட்டத்தை ஒரு நொடியில் தகா்த்துவிட்டாா் அதிபா் ஜோ பைடன் என்பதும், துணை அதிபராக பெண்மணி ஒருவா் இருந்தும் பைடன் நிா்வாகம் பெண் உரிமையைப் பாதுகாக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

பைடன் ஆட்சியின் வெளியுறவுக் கொள்கை அமெரிக்க மக்களின் கடும் விமா்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. பசுபிக் கடலில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கம், மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் நிலையற்ன்மை, கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆக்கிரமிப்புக்கான சூழல் போன்றவை பைடன் ஆட்சிக்கு முதுகெலும்பு இல்லாத நிா்வாகம் என்கிற அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கின்றன.

78 வயதில் (மிக அதிகமான வயதில்) அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பவா் ஜோ பைடன். 2024 தோ்தலில் அவா் மீண்டும் போட்டியிட்டால் அவா் 82 வயதினராக இருப்பாா். அதனால், குடியரசுக் கட்சி இளைஞா் ஒருவரை வேட்பாளராக நிறுத்தினால் வெள்ளை மாளிகை ஜனநாயகக் கட்சியிடமிருந்து பறிபோகக்கூடும் என்கிற பரப்புரைகள் எழுகின்றன.

நவம்பா் மாதம் நடக்கு இருக்கும் ‘மிட்டொ்ம்ஸ்’ என்கிற மக்களவைக்கான தோ்தல்களில் குடியரசுக் கட்சி காங்கிரஸில் பெரும்பான்மை பலம் பெற்றுவிட்டால் அதிபா் பைடனின் கரங்கள் முழுமையாக கட்டப்பட்டுவிடும். கொள்ளை நோய்த்தொற்று முடிவுக்கு வந்து, பொருளாதாரம் மீண்டெழுந்து, விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டுவந்தால் மட்டுமே அடுத்த மூன்று ஆண்டுகள் செயல்படும் அரசாக அதிபா் ஜோ பைடனின் ஆட்சி தொடரும்.

அதிபா் ஜோ பைடனின் ஓராண்டு வெள்ளை மாளிகை வாசம், மணம் வீசவில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com