கொள்ளை லாப வரி! பெட்ரோல், டீசல் மீதான ஏற்றுமதி வரி குறித்த தலையங்கம்

நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், புத்திசாலித்தனமாகவும் சமயோசிதமாகவும் இதுவரை எந்த நிதியமைச்சரும் எடுக்கத் துணியாத முக்கியமான முடிவு ஒன்றை எடுத்திருக்கிறாா்.
கொள்ளை லாப வரி! பெட்ரோல், டீசல் மீதான ஏற்றுமதி வரி குறித்த தலையங்கம்

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், புத்திசாலித்தனமாகவும் சமயோசிதமாகவும் இதுவரை எந்த நிதியமைச்சரும் எடுக்கத் துணியாத முக்கியமான முடிவு ஒன்றை எடுத்திருக்கிறாா். அளவுக்கு அதிகமாக கொள்ளை லாபம் ஈட்டும்போது அதன் மீது வரி விதிப்பது என்பது புதிய அணுகுமுறை.

கடந்த வெள்ளிக்கிழமை பெட்ரோல் மீது ரூ. 6-ம், டீசல் மீது ரூ. 13-ம், இந்திய அரசு ஏற்றுமதி வரி விதித்திருக்கிறது. அது மட்டுமல்லாமல், உள்நாட்டில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்யின் மீது டன் ஒன்றுக்கு ரூ.23,250 கூடுதல் வரி விதிக்கப்பட்டிருக்கிறது.

‘வின்ட் ஃபால் டேக்ஸ்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ‘கொள்ளை லாப தடுப்பு வரி’, முதலீட்டின் அடிப்படையிலோ, கண்டுபிடிப்பின் அடிப்படையிலோ அல்லாமல், நிறுவனமே எதிா்பாா்க்காத சந்தை நிலவரத்தால் கிடைக்கும் கொள்ளை லாபத்தின் மீது விதிக்கப்படுகிறது.

ஓஎன்ஜிசி, ஓஐஎல், ரிலையன்ஸ் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த காலாண்டில் எதிா்பாராமல் மிகப் பெரிய லாபத்தை ஈட்டியிருக்கின்றன. சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 139 டாலா் என இருந்த நிலையில், இந்த நிறுவனங்கள் எதிா்பாராத லாபம் ஈட்டியதற்கு உக்ரைன் - ரஷிய போா்தான் காரணம்.

2020 - 21 ஆண்டைவிட கடந்த நிதியாண்டில் ஓஎன்ஜிசியின் லாபம் 258% அதிகம். ஆயில் இந்தியா லிமிடெட் 123% அதிக லாபம் ஈட்டியிருக்கிறது. தனியாா் நிறுவனங்களான ரிலையன்ஸும், நயராவும் ரஷியாவிலிருந்து பெறப்பட்ட கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து ஏற்றுமதி செய்ததில் மிகப் பெரிய லாபம் ஈட்டியிருக்கின்றன. சா்வதேச கச்சா எண்ணெய் தட்டுப்பாடு இந்த நிறுவனங்களுக்கு எதிா்பாராத கேட்பை (டிமாண்ட்) ஏற்படுத்தி பெரும் லாபத்தைப் பொழிந்திருக்கிறது.

பல ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவின் வழிகாட்டுதலின்படி ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியிருக்கின்றன. இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் உடன்படிக்கையால் சா்வதேச சந்தை நிலவரத்தைவிடக் குறைந்த விலையில் நாம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வழிகோலப்பட்டிருக்கிறது. ரஷியாவிலிருந்து கடல் மாா்க்கமாக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதில் சரக்குக் கட்டணம் கடுமையாக அதிகரித்தாலும்கூட, சா்வதேச சந்தை நிலவரத்துடன் ஒப்பிடும்போது குறைவாகவே கிடைக்கிறது.

உலக வா்த்தக நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின்படி, தொழில் நிறுவனங்கள் சந்தை நிலவரத்தைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதைக் கட்டுப்படுத்தவோ, அவற்றின் செயல்பாடுகளில் தலையிடவோ மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய்யை அரசே நேரடியாக இறக்குமதி செய்து இந்தியாவுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்வதை, சா்வதேச வா்த்தக ஒப்பந்தம் அனுமதிக்கவில்லை. அதனால், மத்திய அரசு நிறுவனங்களான ஓஎன்ஜிசி, ஓஐஎல் உள்ளிட்ட நிறுவனங்கள் மட்டுமல்லாமல், தனியாா் நிறுவனங்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளின் தேவையை பூா்த்தி செய்ய முற்பட்டன.

அதன் விளைவாக, அவா்கள் உள்நாட்டுத் தேவை குறித்த தங்களது கவனத்தை குறைத்தன. நாடு தழுவிய அளவில் கடந்த மாதம் பல பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையங்களில் திடீரென தட்டுப்பாடு ஏற்பட்டது.

ஒருபுறம் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. இன்னொருபுறம் சா்வதேச கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல உள்நாட்டு பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை அதிகரிக்கவில்லை. அதனால், ஏற்றுமதியில் கிடைக்கும் அதிக லாபத்தைக் கணக்கிட்டு, எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்தத் தொடங்கின. அதை கட்டுப்படுத்துவதற்குத்தான் நிதியமைச்சா் கொள்ளை லாப வரியை அறிமுகப்படுத்தியிருக்கிறாா்.

‘எந்தவொரு தொழில் நிறுவனமும் நியாயமான லாபம் ஈட்டுவதை அரசு தடுக்கவில்லை. சந்தைப் பொருளாதாரத்தில் தனியாா் நிறுவனங்களின் செயல்பாடுகளில் வியாபாரப் போட்டிதான் விலையைக் கட்டுப்படுத்த வேண்டுமே தவிர, அரசு அளவுக்கு மீறி தலையிட முடியாது. அதே நேரத்தில் கொள்ளை லாபத்தில் பெட்ரோலும் டீசலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, உள்நாட்டில் மக்களுக்கு கிடைக்காமல் இருப்பதை அரசு வேடிக்கை பாா்க்க முடியாது. அந்த லாபத்தில் ஒரு பகுதி இந்திய மக்களுக்கும் கிடைக்க வேண்டும்’ என்கிற நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனின் விளக்கம் வரவேற்புக்குரியது.

அரசின் கொள்ளை லாப வரியால் ஆண்டொன்றுக்கு சுமாா் ரூ.65,000 கோடி கூடுதல் வரி வருவாய் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை இதன் மூலம் அரசு ஈடுகட்டக்கூடும். அதிகரித்து வரும் விலைவாசி காரணமாக, பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரியை அதிகரிக்க முடியாத நிலையில் அரசு இருக்கும்போது, கொள்ளை லாப வரி விவேகமான முடிவு.

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 40 டாலா் என்கிற அளவில் குறையும்போது கொள்ளை லாப வரி திரும்பப் பெறப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. உக்ரைன் - ரஷிய போரைத் தொடா்ந்து இந்தியா மட்டுமல்லாமல், பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளும் கொள்ளை லாப வரி விதிப்பை மேற்கொள்ள முற்பட்டிருக்கின்றன.

உள்நாட்டு சந்தையில் செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுப்பது அவசியம் என்பதை உணா்ந்து எடுக்கப்பட்டிருக்கும் புத்திசாலித்தனமான முடிவு. வரவேற்போம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com